JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Saturday, November 26, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 22

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                               மதுரைக் காண்டம்

                                     திருக்கைலாயச்  சிறப்பு 

பாடல் --201

வரங்க டத்ரு ளெனமுது வானவர முனிவோர்
கரங்க டந்தலை முகிழ்த்திடக் கருணைசெய் தவிச்சை
உரங்க டந்துரை யுணர்வெலாங் கடந்தரு மறையின்
சிரங்க டந்தவ னிருப்பது திருக்கயி லாயம்                [1]


விளக்கம் ---201

வரங்களை தந்தருள வேண்டும் என்று ---பெரும் தெய்வங்களும் ,முனிவர்களும் --தங்கள் கரங்களை தலைமீது குவித்து வணங்கி வேண்டிநிற்க ----
--அவர்களுக்கு கருணைசெய்து ---
இயல்பாகவே பாசங்களை கடந்த ---வாக்கு மனம் ஆகியவற்றையும் கடந்த ---அருமையான வேதங்கள் கூறும் முடிந்த முடிவான பொருளையும் கடந்த வனாகிய  இறைவன் இருப்பது --திருக்கயிலாயம் .

******************************************************************************

   பாடல் --202

                 
புரந்த ராதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவாழ் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல்.      [2]


  விளக்கம் ---202

இந்திரன் முதலிய வானவர்கள் வாழும் உலகமும் ,தாமரை மலரில் உறையும் படைக்கும் தொழிலைச்செய்யும் பிரம்மனின் பரந்த  உலகமும் ,சக்கரப்படையை உடைய பகவான் வரங்களை அளித்து இந்த உலகத்தை காத்தவாறு வாழ்கின்ற பரமபதம் ---
ஆகிய  எல்லா உலகமும் அழிகின்ற நாள் வந்து அழிந்தபோதும் --
நிலையாக நின்று --ஊழிக்காலத்தையும் கடந்து நிற்கும் ---இந்தத் திருக்கயிலாயம் .
** **************************************************************************
பாடல் --203

அரம்பை மாதரா ராடலி னரவமும் பாடல்
நரம்பி னாசையு முழவதிர் சும்மையும் நால்வாய்
வரம்பி லாதையு மருவிவீ ழொலியுமா றாது
நிரம்பி வானமுந் திசைகளு நிமிர்வன மாதோ.   [3]


 விளக்கம் ---203

தேவமகளிர்  நடனமாடும் ஒலியும் ,பாடலின் ஒலியும் ,நரம்புவாத்தியங்களின்  இசையின் ஒலியும் ,  முழவு    வாத்தியத்தின் முழக்கத்தின் ஒலியும் ,யானையின் அளவில்லாத பிளிறல்   ஒலியும் ,அருவி விழுகின்ற ஒலியும் ---கலந்து, எந்நேரமும் அங்கு நிரம்பி காணப்பட்டும் --மேலும் வானமும் எல்லாத்திசைகளிலும் பரவி நிரம்புகின்றது பாருங்கள் .
*************************************************************************       
பாடல் --204

      வெந்த நீற்றொளி வெண்மையும் விமலனை யகங்கொண்
             டந்த மின்றியே யசைவற விருக்கையு மருவி
             வந்த கண்களும் கொண்டவ ணிருக்குமா தவர்க்குத்
                        தந்த தாலரன் கயிலையுந் தனதுசா ரூபம்.      [4]


  விளக்கம் ---204

தீயினில் வெந்த  'திருநீற்றை  ' ,பூசியதால் வெண்மையான உடலுடனும் ,அகத்தில்'விமலனை [சிவபெருமானை ]'  நிலையாகக்கொண்டு ,அசைவில்லாமல் ஓரிடத்தில்  இருந்து ,இறைவனின் மீதுண்டான பக்தியாலும் அன்பினாலும் கண்களில் அருவிபோல் நீர்வழிய --சிறந்த தவமிருக்கும் பூமிவாழ் மனிதருக்கு --சாரூபத்தை 'அரன் ' ஆகிய சிவபெருமான் தருவது போல  --அவர் வாழும் திருக்கயிலாயமும் தரும்  .
***************************************************************************
பாடல் --205

ஆங்கு வெண்டுகில் விரித்தெனக் கல்லென வார்த்து
வீங்கு காலரு வித்திரள் வெள்ளமே யன்றி
ஓங்கு நான்மறைக் குடுமியி னுள்ளொளி நோக்கித்
தூங்கு மாதவர் கண்களுஞ் சொரிவன வெள்ளம். [5]


  விளக்கம் ---205

அங்கு [திருக்கைலாய த்தில் ]--வெண்மையான துணியை விரித்தது போன்று  --கல்லென்ற ஒலியுடன்  ஒழுங்காக ஓரிடத்தில் பொங்கி விழுகின்ற அருவிக்கூட்டத்தின் வெள்ளம் மட்டுமல்ல --

சிறப்புமிக்க நான்குமறைகளின் முடிந்த முடிவான அர்த்தத்தின்  உள்ளே ஒளிரும் ஒளியான இறைவனை கண்டு  --அதிலேயே மூழ்கிக்கிடக்கும் சிறந்த தவசீலரின் --கண்களில் இருந்தும் பொழிகின்ற கண்ணீரும்  வெள்ளம்போல காட்சி தருகின்றது .
************************************************************************
பாடல் --206

கோட்டு மாமலர் நிலமலர் குண்டுநீ ரெடுத்துக்
காட்டு மாமலர் கொடிமலர் கொண்டுமுட் கரைந்த
பாட்டு மாமலர் கொண்டுநம் பரஞ்சுட ரடியிற்
சூட்டு மாதவர் தொகுதியுஞ் சூழ்வன வோருபால்.  [6]


  விளக்கம் ---206

மரங்களில்[கோட்டுப்பூ ]   மலரும் சிறப்பு மிக்க மலர் ,செடியில் பூக்கும் -நிலமலர் ,பெருத்த நீர்ப்பரப்பில் எடுப்பாக தெரியும் சிறந்த மலர் ,கொடிமலர்   --ஆகியவைகளை கொணர்ந்து --மேலும் உள்ளம் பக்திஅன்பினால்  கரைந்ததனால் எழுந்த பாடல்களாகிய சிறந்த மலர்களைக்கொண்டும் ---நம்முடைய 'பரஞ்சோதி சுடரின்   'அடியில் சூட்டுகின்ற சிறந்த தவத்தை உடைய மக்கள் கூட்டம் --
அங்கு ஒரு பக்கத்தில் சூழ்ந்து காணப்படுகின்றது .
*************************************************************************
பாடல் --207


கைய நாகமுங் காய்சின வுழுவையுங் கடுவாய்ப்
பைய நாகமுந் தங்கிளை பரவிய முக்கண்
ஐய னாகமெய் யருந்தவர் தமையடைந் தன்பு
செய்ய நாகமும் வையமும் புகழ்வதச் சிலம்பு.  [7]
விளக்கம் ---207

துதிக்கையை உடைய யானையும் ,மிகுந்த சினத்தை உடைய புலியும் ,நஞ்சுமிகுந்தவாயையும் படத்தையும் கொண்ட நாகமும் --தங்களை அணிந்த முக்கண்ணையுடைய ஐயனைப்போல கருதி ---
உண்மையான அருந்தவம் உடையவர்களின் அருகில்சென்று அன்புடன் இருப்பதை பார்த்து --
விண்ணுலகத்தாரும் மண்ணுலகத்தாரும் வியந்து புகழ்கின்ற பெருமைமிக்கது  அந்த 'திருக்கைலாயம் '.
*********************************************************************************


                   திருக்கைலாயச்  சிறப்பு முற்றிற்று  


                                                                                பொருள்எழுதியவர் 
                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

Wednesday, November 23, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 21


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 



                          திருநகரச்   சிறப்பு --பகுதி 10

பாடல் --191


எழுக்க டந்ததோ ளுருத்திர வுலகமென் றியாரும்
வழுத்த நின்றவிந் நகர்வயி னும்பரின் மாண்ட
விழுத்த கும்பல செல்வமும் வியந்துபார்த் துள்ளத்
தழுக்க றாமையா லின்னமு மமரர்கண் ணுறங்கார்.          [100]
விளக்கம் --191

எழுச்சி மிக்க --ஒப்புமை கூறமுடியாத  ,அனைத்தையும் கடந்த --தோள்களை உடைய ---'உருத்திரரின் 'உலகமான 'சிவலோகமோ '--என்று பார்க்கும் யாவரும் வியந்து நின்ற ---இந்த நகரில் --

தேவர்களின் உலகில் காணப்படும் மாட்சிமைபொருந்திய பல செல்வங்களும்  காணப்படுவதை வியந்து பார்த்து --

உள்ளத்தில் அழுக்காகிய பொறாமை மூண்டதால் --இன்னமும் அமரர்களான தேவர்கள் கண்ணுறங்கவில்லை .

****************************************---------------------------[100]

பாடல் --192

விரைய விழ்ந்ததார் மீனவர் வாகைவேல் விடுத்துத்
திரையை வென்றது முடிதகர்த் திந்திரன் செருக்குக்
கரைய வென்றதுங் கார்தளை யிட்டதுங் கனக
வரையை வென்றது மிந்நகர்  வலியினா லன்றோ. [101]

விளக்கம் --192

மணம்பரப்பும் மாலையை அணிந்த மீன்கொடியை உடைய பாண்டியமன்னன் --

வெற்றிமாலை சூடிய வேல் படையை  எறிந்து கடலை வற்றச் செய்து வெற்றி கொண்டதும் ---

இந்திரனின் முடியை வீழ்த்தி --அவனின் செருக்கு  கரைந்து போகும்படி செய்து வென்றதும் ---

மேகத்துக்கு கைவிலங்கிட்டதும் --பொன் மலையை [மஹாமேருமலையை ] வென்றதும் ---

இந்த நகரின் வலிமையினால் அல்லவா !!!

*******************************************-----------------------[101]

பாடல் --193

எங்கு நாவுமா யெங்கணுங் கண்ணுமா யெங்குந்
தங்கு பேரொளி யல்லதித் தனிநகர்ச் செல்வஞ்
செங்க ணாயிர நாவினான் செப்பவு மெதிர்கண்
டங்க ணாயிர முடையவ னளக்கவும் படுமோ.  [102]


 விளக்கம் --193

எங்கும் நாவுமாகவும் [நாக்கு ] ,எல்லாஇடத்திலும்  கண்ணுமாகவும் --எல்லாஇடத்திலும் தங்கியிருக்கின்ற பேரொளியாகவும் --உள்ள இறைவனால் மட்டுமே சொல்ல முடியுக்கூடிய இந்த தனித்துவம் வாய்ந்த நகரின் செல்வத்தை  --

அஃதல்லாது 
,சிவந்த கண்களையும் ஆயிரம் நாவினையும் உடைய ஆதிசேஷனால்   சொல்லவும் --
இவற்றை உற்று நோக்கி ,உடலின் அனைத்து பகுதியிலும் கண்கள் உண்டானதால் ஆயிரம் கண்களை பெற்ற இந்திரனால் -அளக்கவும் முடியுமா .

*****************************************----------------------[102]

பாடல் --194

புண்ணி யம்புரி பூமிபா  ரதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமிவா னாடென்ப நாளும்
புண்ணி யம்புரி பூமியு மதில்வரு போகம்
நண்ணி யின்புறு பூமியு மதுரைமா நகரம்.     [103]


விளக்கம் --194

புண்ணியங்களை செய்யக்கூடிய இடம் இந்த பூமியாகும் --அதனால் வரும் போகங்களை அனுபவித்து இன்பமடையும் இடம் வானுலகம் என்பார்கள் ---

[ஆனால் --]

எந்நாளும் புண்ணியங்களை புரிவதற்கான இடமும்  --அதனால் வரும் போகங்களை அனுபவித்து மகிழும் இடமும் --இந்த மதுரை மாநகரமே  ஆகும் .

*********************************************---------------------[103]

பாடல் --195

பண்கனிந் தனைய சொல்லார் நரப்பிசைப் பாணி  தேவர்
உண்கனி யமுதுங் கைப்பச் செவிதொளைத் தூட்ட வுண்டும்
பெண்களி னமுத மன்னார் பெருமித நடன முண்ணக்
கண்களை விடுத்துங் காலங் கழிப்பவ ரளவி லாதார்.    [104]

விளக்கம் --195

மென்மையான இனிய  இசையைப்போன்ற சொற்களை உடைய பெண்கள் --யாழை மீட்டி பாடும் பாடல்கள் ---

தேவர்கள் உண்ணும் இனிய அமுதத்தைப்போல --செவிகளை துளைத்து ஊட்ட --அதை செவியில் கேட்டும் ---

பெண்களின் அமுதத்தைப்போன்ற பெருமிதமான நடனத்தை கண்டுகளிக்க
 கண்களை விடுத்தும் ---

காலத்தை கழிப்பவர்கள் அளவில்லாதவர்கள் ஆவார்கள் .

*****************************************************-----------------[104]


பாடல் --196

கலவிவித் தாக வூடிக் கட்புனல் குளிக்கு நல்லார்
புலவிதீர் செவ்வி நோக்கிப் புணர்முலைப் போகந் துய்த்தும்
நிலைநிலை யாமை நோக்கி நெறிப்படு      தரும தானங்
கலைஞர்கைப் பெய்துங் காலங் கழிப்பவ    ரெண்ணி                                                                                                                        லாதார். [105]
விளக்கம் --196
கலவி காலத்தின் போது ,ஊடலின் பொருட்டு கண்ணீரை பெருக்கும் நல்ல மக்கள்  ----புலவி தீரும் காலத்தை நன்கு அறிந்து --நெருக்கமான கொங்கைகளின் இன்பத்தை துய்த்தும் ----

நிலையானவைகள் எவை --நிலையற்றவைகள் எவை என்பதை அறிந்து விதிமுறைகளுக்கு உட்பட்ட தான தருமங்களை ---- கலைஞர்களுக்கு  செய்தும் வாழ்க்கையின் நேரத்தை   செலவழிப்பவர்களும் எண்ணிக்கை கூற முடியாதபடி --அதிகமானவர்கள் உள்ளார்கள் .

குறிப்பு ;--இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ---நிலையில்லாதது பெண் இன்பம் --நிலையான வீடுபேறுக்கு உதவுவது தான தர்மம் என்று உணர்ந்திருந்த மக்கள் அதிகம் --என்று கூறுகின்றார் 

****************************************---------------------------------------[105]

பாடல் --197

சந்தித்து மீன நோக்கி தலைவனை மூன்று போதும்
வந்தித்து மீசன் பூசை மரபுளி முடித்தும் வேதம்
அந்தித்து மறியான் செய்த திருவிளை யாடல் கேட்டுஞ்
சிந்தித்து மன்பர் பூசை செய்துநாள் கழிப்பர் பல்லோர். [106]
விளக்கம் --197

மீனைப்போன்ற இமையாத   கண்களுடன் தன்னுடைய குழந்தைகளான இந்த மக்களை காக்கும் அன்னையின் தலைவனான இறைவனை சென்று பார்த்து ---

மூன்று காலங்களிலும் வணங்கி ---அந்த 'ஈசனின் 'பூசையை மரபின்படி நடத்தி நல்ல முறையில் நிறைவித்தும் --

வேதங்களினாலும் விளக்கி கூறமுடியாத --அணுகி அறியமுடியாத இறைவன் செய்த 'திருவிளையாடல்களை 'கேட்டும் --அதைப்பற்றி சிந்தித்தும் ---அன்பான இறைவனின் பூசையை செய்து தங்கள் நாட்களை கழிப்பவர்கள் ---பலபேர் 

********************************************************------------------[106]

பாடல் --198

கற்பவை கற்றுங் கேட்டுங் கேட்பவை  கருத்து ளூறச்
சொற்பொரு ணினைந்துங் கேட்போர்க் குணர்த்தியுட்
                                                                           டுளங்கந் தீர்த்தும்
எற்பக லிரவு நீங்கு மிடத்துமெய் யறிவா னந்த
அற்புத வெள்ளத் தாழா தாழ்ந்துநாள் கழிப்பர் சில்லோர்.                                                                                                                                   [107]


விளக்கம் --198

கற்க வேண்டிய வைகளை  கற்றும் ,அதில் ஏற்பட்ட சந்தேகங்களின் விளக்கங்களை கேட்டும் ---அப்படி கேட்டுத்தெளிந்தவைகளின் கருத்துக்களை உள்ளத்தில் நன்கு நிலைநிறுத்தியும் --மேலும் மேலும் அவற்றை சிந்தித்ததால் தன்னிலேயே பல கருத்துக்கள் தோன்றியபடி இருக்க ---
சொற்கள் ,அவற்றின் பொருள்கள் என அனைத்தையும் தன்னிடம் வந்து கேட்பவர்களுக்கு உணர்த்தியும் --அவர்களின் சந்தேகங்களை தீர்த்தும் ---

பகல் இரவு என்னும் பேதங்கள்  நீங்கப்பெற்ற --உண்மைஅறிவை  அறிந்து  ஆனந்த அற்புத வெள்ளத்தில் --மூழ்காமல் மூழ்கி இருப்பவர்கள் ---சிலராவார்கள் .

*****************************************************----------------------[107]

பாடல் --199

தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவ னாக
முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முக னன்றோ
அன்னது தனதே யாகு மண்ணலே பாண்டி வேந்தாய்
இந்நகர்க் கரச னாவா னக்கவிக் கிறைவ னாவான்.  [108]

விளக்கம் --199

தனக்கு நிகராக யாரும் இல்லாத உயர்வினை உடையவன் --காப்பியத்தின் தலைவன் ஆவான் --

என்று --

முன்னுள்ளவர்கள் கூறிய து --மற்ற அனைவருக்கும் முன்னுரையைப்போன்றதல்லவா --

அனைத்து உயிர்களையும் தன்னுடையதாக கொண்டுள்ள 'அண்ணலே '-பாண்டிய மன்னனாய் --இந்த நகருக்கு அரசனாக அமைந்தவன் --அவனே   --என்னுடைய கவிதைக்கு இறைவன் ஆவான் .

********************************************-------------------------------[108]

பாடல் --200

என்னென வுரைப்பே னந்த விறைமகன் பண்பை யேனை
மன்னவர் வானோர் போல மதித்துரை விரிக்கற் பாற்றோ
அன்னவ னாணை யாற்றா னடப்பதிவ் வகில மென்றால்
முன்னவன் செய்த வாடல் வரவினை முறையிற் சொல்வேன்.[109]

விளக்கம் --200

என்னவென்று கூறுவேன் அந்த இறைமகன் பண்பை --

மற்ற மன்னவர்களை தேவர்களைப்போன்றவர்கள் என்று மதித்து --அவர்களைப்பற்றி பாக்களை`பாடுவது முடியுமா ?


அந்த சோமசுந்தரக்கடவுளின் ஆணையால்தான் நடக்கின்றது இந்த உலகம் ---அப்படி இருக்க  ---முன்பு அவன் [முன்னவன் --முதன்மைப்பொருள் ]செய்த திருவிளையாடல்களை முறைப்படி சொல்வேன் 
*************************************************************************[109]

                             திருநகரச்சிறப்பு முற்றிற்று 


                                                                                         பொருள்எழுதியவர் 
                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

திருவிளையாடல் புராணம்----பகுதி 20

 

மதுரை மீனாட்சிஅம்மன் கோவில் 


திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 



                          திருநகரச்   சிறப்பு --பகுதி 9

பாடல் --182

             மறைக ளாகமம் பொதுச்சிறப் பெனச்சிவன் வகுத்த
                முறையி னோதிய விதிவிலக் குரைகளு முடிவில்
           அறையும் வீடுமொன் றிரண்டெனும் பிணக்கற வமைந்த
            குறைவி லாச்சிவ  யோகியர் குழாங்களும் பலவால்.              (91)


விளக்கம் --182

வேதங்கள் ,ஆகமங்கள் -ஆகியவற்றையும் ---

அவற்றில் பொதுவாக கூறத்தக்கது ,மற்றும் சிறப்பாக கூறத்தக்கது --என்று --எல்லாத்தரப்பு மக்களுக்காகவும் ---சிவபெருமான் சிறந்த முறையில் தொகுத்து அளித்த முறைகள் எல்லாவற்றையும் நன்கு கற்று வாயினால் சொல்லி ச் சொல்லி மனனம் செய்து தெளிந்து ---

அதில் உள்ள விதிகளையும் ,விதிவிலக்குகளையும் --நன்கு அறிந்து --

அந்த வேதங்கள் மற்றும் ஆகமங்களின் கருத்துச்சாரத்தின் முடிவில் அவைகள் முடிந்த முடிவாக  அறுதியிட்டு கூறும் ---முக்திநிலை  --என்பது 
த்வைதமா  [கடவுள் +ஜீவன்கள் ] அல்லது அத்வைதமா [எல்லாம் ஒரே பிரம்மம் தான் ]--என்பதில்  எந்தவிதமான முரண்பாடுமில்லாது கண்டுணர்ந்த ----

குறைகள் இல்லாத 'சிவயோகியார் 'கூட்டங்கள் பல உள்ளன .

**********************************************------------------------- (91)

பாடல் --183

குழலுந் தும்புரு நாரதர் பாடலுங் குனித்துச்
சுழலுங் கொம்பனா ராடலு மூவர்வாய்த் துதியும்
விழவின் செல்வமுஞ் சுருதியுந் திசையெலாம் விழுங்கும்
முழவுங் கண்டுயி லாதது முன்னவன் கோயில்.             
 (92)
விளக்கம் --183

புல்லாங்குழலின் நாதமும் ,தும்புரு ,நாரதர் -ஆகிய இருவரின் பாடலும் ,வளைந்து நெளிந்து சுழன்று ஆடும் பூங்கொம்பைப்போன்ற பெண்களின் ஆடலும் ---

அப்பர் ,சுந்தரர் ,சம்பந்தர் --ஆகிய மூவரும் இறைவன் சிவபெருமான் மீது இயற்றிய துதியை  சொல்லி இறைவனை வழிபடும்  ஒலியும் ---

தெய்வ விழாக்கள் நடக்கும் ஒலியும் ---

வேதங்கள் ஓதும் ஒலியும் ----

எல்லா திசைகளையும் விழுங்கும் வண்ணம் ஒலிக்கும் 'முழவின் 'ஒலியும் ---
எப்பொழுதும் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது எல்லாவற்றிற்கும் முதன்மை காரணமான, பரம்பொருளான இறைவனின் [முன்னவன் ] திருக்கோயிலில் .

*************************************************-------------------------  (92)

பாடல் --184

மடங்க லின்றிவிண் பிளந்துமேல் வளர்ந்துவெள் ளேற்று
விடங்கர் வெள்ளிமன் றிமைத்தெழு வெண்சுடர் நீட்டம்
முடங்கல் வெண்பிறைக் கண்ணியான் கயிலைமூ வுலகும்
ஒடுங்கு கின்றநா ளொங்கிய வோக்கமே யொக்கும்.---------------
(93)



விளக்கம் --184

வெண்மையான காளையின் மீது விற்றிருக்கும்  'விடங்கர் '---நாட்டியக்கோலத்தில் எழுந்தருளியிருக்கும்  வெள்ளியம்பலத்தில் இருந்து எழும்  வெண்மையான பிரகாசத்துடன் ஒளிரும் ஒளி நீண்டு வளர்ந்து  ---

எந்தவிதமான  வளைவு  மற்றும் பிளவு  மற்றும் சிரமமும் இல்லாமல் விண்ணைப்பிளந்து அதற்குமேலேயும் வளர்கின்றது  ---

இந்த காட்சியானது --

வளைந்த வெண்மையான பிறைச்சந்திரனை ஜடாமுடியிலும் ,முக்கண்ணையும் உடைய இறைவன் வீற்றிருக்கும் கயிலையானது 
--மூவுலகங்களும் அதன் முடிவுக்காலத்தில் தன்னில் வந்து மறையும் நாளில் எப்படி ஓங்கி வளர்ந்து நிற்குமோ ---

அந்த காட்சியை போல உள்ளது .

விடங்கர் --[வி +அடங்கர் ]---விஷத்தை அடக்கியவர் என்று அர்த்தம் [என் உள்ளத்தில் தோன்றிய அர்த்தம் ]--இங்கு 'விஷம் 'என்று குறிப்பிடப்படுவது நம்முடைய 'மாயை ' ஆகும் 

******************************************************--------------------------- (93)

பாடல் --185

சுரந்து தேன்றுளித் தலர்களுஞ் சொரிந்துவண் டரற்ற
நிரந்து சுந்தரற் கொருசிறை நின்றபூங் கடம்பு
பரந்து கட்புன லுகப்பல மலர்கடூப் பழிச்சி
இரந்து நின்றருச் சனைசெயு மிந்திர னிகரும்.                                    
 (94)

விளக்கம் --185

'சுந்தரருக்கு ' [அழகனான இறைவனுக்கு ] ஒரு பக்கத்தில் நின்ற பூக்கள் நிறைந்த கடம்பமரமானது  -- உள்ளார்ந்த அன்பினால் பசு பாலை சுரப்பது போல தேன்துளிகளை இறைவன்மீது சுரக்கின்றது  -- மலர்ந்த மலர்களையும் சொறிகின்றது --வண்டுகள் இசைபாடுகின்றது --இப்படியாக எல்லா பூசனை செயல்களும் ஒன்றுடன் ஒன்று சரியாக நிரந்து நடப்பதை பார்க்கும் பொழுது ---

கண்களிலிருந்து கண்ணீராந்து உற்று போல பெருகி வழிய ,பலவிதமான மலர்களை தூவி ,பலவிதமாக இறைவனை  துதித்து --தன் சாபம் நீங்க இறைவனின் கருணையை வேண்டி ---மன்றாடியபடி அர்ச்சனை செய்யும் --இந்திரனை காண்பது போல உள்ளது .

************************************************--------------------------- (94)


பாடல் --186


உழல்செய் தீவினை யுருப்பற வுயிர்க்கெலா மடியின்
நிழல்செய் வார்க்குநீ ணிழல்செயா நின்றபூங் கடம்பின்
குழல்செய் வண்டுகற் பகமதுக் கொண்ர்ந்துவந் தூட்டித்
தழல்செய் காமமென் பேடையி னூடனோய் தணிக்கும்.    
(95)


விளக்கம் --186

துன்பத்தை அளிக்கும் தீய வினைகளை  அடியோடு அழித்து --எல்லா உயிர்களுக்கும்  தன்னுடைய திருவடியின் நிழலில் அடைக்கலம் கொடுக்கும் இறைவனுக்கு ---

ஒருபக்கத்திலிருந்து நிறைந்த நிழலை அளித்து நிற்கின்ற பூக்கள் நிறைந்த கடம்ப மரத்தில் வாழும் ---

குழலைப்போன்ற இசையை ஒலிக்கும் ஆண்வண்டுகள் --தேவலோகத்திலுள்ள கற்பக மரத்திலிருந்து தேனை கொண்டுவந்து --தீயைப்போன்று  கொழுந்துவிட்டெரியும்  காமத்துடன் உள்ள பெண் வண்டுகளுக்கு  ஊட்டி - --உடல் என்னும் நோயை தணிக்கும் .

குறிப்பு ;--

அசையாத மரம் இறைவனுக்கு தன்னில் மலர்ந்த மலர்களை கொண்டு அர்ச்சித்தும் --நிழலை தந்தும் ---இறைவனின் நிழலை அடைகின்றது .

அங்கேயே உள்ள அசையும் வண்டானது --காமத்தால் இறைவனை மறந்து பெண்வண்டின் ஆசையை தீர்க்க கடினமானதைக்கூட செய்து  --வீணே அலைகின்றது .

இரண்டும் இறைவனின் அருகில்தான் உள்ளது .

************************************************------------------------------- (95)

பாடல் --187

ஆரு நீர்க்கட லன்றது வெனநிறை யகழ்கார்
ஊரு மாழியன் றதுவென வோங்கெயி லெட்டாய்ச்
சாரு நேமியன் றதுவெனச் சமைந்தகோ புரம்பொன்
மேரு வன்றது வெனச்சுடர் விண்ணிழி விமானம்.                
(96)

விளக்கம் --187

ஆறுகளெல்லாம் சென்று சேருகின்ற கடல் அது அல்ல இதுவே -- என்று எண்ணும்படி நிறைந்து காணப்பட்டது ஆலயத்தை சுற்றி இருந்த அகழி ---

மழைமேகங்கள்   தாங்கள் ஊர்ந்து செல்லும் கடல் அது அல்ல இதுவே என்று நினைத்து --- ஊர்ந்து செல்லும் அளவுக்கு ஓங்கி உயர்ந்தும்  அகன்றும்  நின்றது திருக்கோவிலின் சுவர்கள்   .

எட்டுத்திசைகளிள் இருந்து பார்த்தாலும் ஒரே மாதிரி அமைந்து சுழலும் திருமாலின் சக்கரம் அது அல்ல இதுவே என்று எண்ணும்படி  --எட்டுத்திசைகளிலும் அழகுற திருத்தமாக அமைந்த கோபுரங்களை கொண்டிருந்தது திருக்கோவில் .

பொன்னைப்போல பிரகாசிக்கும் மேரு மலைஅது அல்ல இதுவே என்று எண்ணும்படி ---சுடர்விட்டு பிரகாசித்தது --விண்ணுலகத்திலிருந்து இறங்கி வந்தது போன்ற ---- கோவிலின் விமானம் .

***********************************************--------------------------[96]


பாடல் --188

வேத வந்தமுந் துளக்கற மெய்ப்பொருள் விளங்கும்
நாத வந்தமுங் கடந்ததோர் நடுநிலைப் பொருளின்
பாத வந்தனைப் பத்தியின் பாலராய்ப் பயில்வோர்
மாத வந்தரு பயனெனத் தழைத்தபல் வளனும்.
-              [97]

விளக்கம் ----188


வேதங்களின் முடிவையும் ,சந்தேகமில்லாமல் 'மெய்ப்பொருளை 'விளக்குகின்ற நாதத்தின் முடிவையும்    கடந்த நடுநிலைப்பொருளான ---பரப்பிரம்மமான இறைவனின்  --பாத கமலங்களை ஆராதனை செய்யும் பக்தியின் வழிமுறைகளை  --குழந்தையைப்போன்ற உள்ளத்துடன் --பயிற்சி செய்பவர்களுக்கு ---பலவகைப்பட்ட வளங்கள் எல்லாம் 

மிகப்பெரிய தவங்களை செய்பவர்களுக்கு கிடைக்கும் பயனை போல --இயல்பாகவே வெளிப்பட்டு கிடைத்தது  .    

***********************************************---------------------------- [97]

பாடல் --189


பொறிக ளைந்தினுக் கூட்டுபல் போகமு மிதப்பச்
செறிகொ ணீரவா லுவப்பத்  திருநகர் மாக்கள்
நெறிகொள் செஞ்சடைப் பிறைமுடி நிருமலக் கொழுந்தின்
வெறிகொ ணாண்மல ரடிதழீஇ வீடுபெற் றார்போல்.    
 [98]
         
விளக்கம் --189

பொறிகள் ஐந்துக்கும் ---போதும் போதும் என்னும் அளவுக்கு இன்பம் அளிக்கக்கூடிய பலவகை போகங்கள்   அனைத்தும் --தேவைக்கு அதிகமாகவே --செறிந்து காணப்பட்டும் --

அவை அனைத்தும் அந்த திருநகரத்தின் மக்கள்  அனைவருக்கும் ---மனம் மகிழ்வுடன் நிறைவு பெருமளவு கிடைக்கப்பட்டது .


அது எப்படி இருந்தது என்றால் --

ஒழுங்குமுறையில் கட்டப்பட்ட செஞ்சடையில் பிறைச்சந்திரனை அழகுற சூட்டிக்கொண்ட --நிர்மலமான இளம் தளிரைப்போன்ற[எந்தவிதமான கர்மங்களும் இயல்பாகவே இல்லாத ] இறைவனின்  ----

மணமிக்க மலர்த்திருவடிகளை பற்றியவர்கள் --பிறப்பு இறப்பு என்னும் சுழற்சியை அறுத்து விடுதலை பெற்று --எல்லையற்ற ஆனந்தத்தை அடைந்தது போல இருந்தது .

***********************************************---------------------[98]
பாடல் --190

முன்ன வன்னர சிருக்கையா லந்நகர் முளரிப்
பொன்னை யீன்றதா லதுபல பொருணிறை செல்வந்
தன்னை யீன்றதா லதுபல தருமமென் றுரைக்கும்
மின்னை யீன்றதஃ தீன்றதால் விழுத்தகு புகழே.               [99]


விளக்கம் --190

யாவர்க்கும் முதல்வனாகிய இறைவன் சோமசுந்தரபெருமான் --அறியணையிலிருந்து ஆட்சி செய்ததால் ---

அந்த நகரானது ,தாமரையில் வீற்றிருக்கும் திருமகளை பெற்றது --

அதனால் அந்நகர் --பல பொருட்களால் நிறையப்பெற்ற  செல்வமனைத்தையும் பெற்றது ---

அதனால் அந்நகர் ,பல வகையான தருமங்கள் என்று உரைக்கப்படும்  பெண்ணை பெற்றது --

அப்படிப்பட்ட தருமங்களை பெற்றதால் --சிறப்புமிக்க பெரும் புகழை அடைந்தது .

*******************************************************--------------------[99]



                                                                                         பொருள்எழுதியவர் 

                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

திருவிளையாடல் புராணம்----பகுதி 19

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 



                          திருநகரச்   சிறப்பு --பகுதி 8


பாடல் --172

          கொடிமுகி றுழாவு மிஞ்சிக் கோநகர் வடகீழ் ஞாங்கர்
                 முடிமிசை வேம்பு நாற முருகவி ழாரும் போந்தும்
            அடிமிசை நாறத் தென்னர் வழிவழி யரசு செய்யும்
             இடிமுர சுறங்கா வாயி லெழுநிலை மாடக் கோயில்.        81

விளக்கம் ---172
கொடிகள் மேகத்தை தொட்டு துளைக்கும் படி உயர்ந்து விளங்கும் கோட்டையையுடைய பெரிய தலைநகரத்தின் ---

வட கிழக்கு  பக்கத்தில் ,தலையின்மீது வேப்பம்பூ மாலை நறுமணம் வீச --
மணம் விரிந்த அத்திமாலையும் ,பனைமாலையும் --கால்களிமீது இருந்து மணம் பரப்ப --

பாண்டியமன்னர்கள் வழி வழியாக ஆட்சி செய்யும் --இடிபோன்ற முரசின் ஒலி நீங்காமல் ஒலித்துக்கொண்டிருக்கும் வாசலையுடைய  ஏழு நிலை மாடக்கோயிலான --அரண்மனை உள்ளது .

****************************************--------------------------------------81
பாடல் --173
                   
                

மறையவர் வீதி
ஆத்திக ருண்டென் றோது மறமுதற் பொருள்கள் நான்கும் நாத்திகம் பேசும் வஞ்சர் நாவரி கருவி யாக
ஆத்தனா லுரைத்த வேத வளவுகண் டுள்ளந் தேறித்
                                                                                        தீர்த்தராய்
முத்தீ வேட்குஞ் செல்வர்தம் மிருக்கை சொல்வாம்.     82

விளக்கம் --173
ஆத்திகர்கள் --உண்டு என்று சொல்லுகின்ற ,அறம் ,பொருள் ,இன்பம் ,வீடு --ஆகிய நான்கும் --

நாத்திகம் பேசும் வஞ்சகர்களின் நாவினை அறுக்கும் கருவியாக ஆகும் --என்று --

இறைவனால் சொல்லப்பட்ட வேதங்கள் கூறுவதை கண்டு ---

உள்ளம் தெளிந்து ,தூய்மையுடையவர்களாக 'மூன்று நெருப்பை 'பேணிக்காக்கும் ,வேள்வி என்னும் செல்வத்தை உடையவர்கள் வாழும் வீதியைப்பற்றி சொல்லலாம் .

*****************************************-------------------------------------82
பாடல் --174.


                முஞ்சிநாண் மருங்கின் மின்னப்பொன்செய்தமுளரி வேய்ந்த
                                                                                          

               குஞ்சிநான் றசையத் தானைச்சொருக்குமுன்கொய்து தூங்கப்
                                                                                 
             பஞ்சினாண்* கலைத்தோல் மார்பும்
 பலாசக்கோல்  கையுந் தாங்கி
                                                                                   
            எஞ்சினான் மறைநூல் கற்போர்
 கிடைகளே யில்ல மெல்லாம்.   83

    .

விளக்கம் ---174.
'முஞ்சி 'என்னும் புல்லால் ஆன கயிறு இடுப்பில் மின்ன --

பொன்னால் செய்யப்பட தாமரைமலரை அணிந்த குடிமியானது தொங்கி அசைய ---

ஆடையின் சொருகல் முன்னே கொய்யப்பட்டு தொங்க --

மார்பில்  மான்தோலால் கட்டப்பட்ட பஞ்சினாலான பூணுல்  அணிந்தும்    ---

'பலாசக்கோலை 'கையில்  --தாங்கிக்கொண்டும் --

குறைவற்ற நான்கு வேதங்களையும் கற்கும் மாணவர்களின் இல்லங்களே நிறைந்திருந்தது அந்த சாலைகளில் .

********************************************--------------------------------------83
பாடல் --175.     

            தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேத

                          நாவுரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
                         பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
                              காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ. 84

விளக்கம் ---175.  


தீயை வளர்த்து வேள்விகளை செய்யும் செயலை உடைய அந்தணர்களின் சிறுவர்கள் ---

தெய்வத்தால் சொல்லப்பட்ட வேதங்களை --அவர்கள் நாவினால் மீண்டும் மீண்டும் சொல்லி பயிலுவதை கேட்டு ---

அவர்கள் வீட்டு கிளிகள் எல்லாம் --அவற்றை சொல்லுகின்றன ---அதுமட்டுமல்லாமல் ---அக்கிளிகளிடமிருந்து ---தூரத்திலிருந்து வரும் ---நாகணவாய்ப்பறவைகளும்  அந்த வேதங்களைக்கற்று ---

புதுமைகள் நிறைந்த --ஏழுலகையும் தாண்டிய ---கயிலாயத்தில் இருக்கின்ற ---மந்தார மரங்கள் நிறைந்த  காட்டில் வாழும் கிளிகளுக்கு எல்லாம் --குற்றம் குறையில்லாமல் பயிற்றுவிக்கும்  பாருங்கள் .

குறிப்பு ;--
கைலாயத்திற்கு செல்லும் வழியில் மந்தார மரங்கள் நிறைந்த காடு உள்ளதாக சொல்லப்படுகின்றது .

******************************************------------------------------------84
பாடல் --176.    
                     
                               
வேதமு மங்க மாறு மிருதியும் புராண நூலின்
பேதமுந் தெரிந்தோ ராலும் பிறர்மதங் களைய வல்ல
வாதமு மதமேற் கொண்டு மறுத்தலு நிறுத்த வல்ல
போதமு முடையோ ராலும் பொலிந்தன கழக மெல்லாம்.    85

விளக்கம் ---176.    


நான்கு வேதங்களையும்  ,ஆறு அங்கங்களையும்  ,ஸ்மிருதியையும் ,பதினெட்டு புராணங்களையும் ---பிரித்து பொருளை உணர்ந்து கூறத்தெறிந்தோராலும் ---

பிறமதங்களின் கொள்கைகளை மறுத்துக்கூறி அவற்றை மக்கள் சமூகத்திலிருந்து களைந்து அகற்ற வல்ல வாதத்திறமையும் ---

தங்கள் மதத்தின்மீது அதிக பற்றுடன் அதன்மீது சொல்லப்படும் குற்றங்களை மறுத்து --தங்கள் மதத்தை மக்கள் சமூகத்தில் நிலை நிறுத்துவதில் திறமைபெற்ற -- மேலும் மேலும் மதத்தின் கருத்துக்களை திரும்பத்திரும்பகூறும்  [போதனை ]தன்மையுடையோராலும் --

நிரம்பப்பெற்று அழகுடன் விளங்கியது --கழகங்கள் எல்லாம் 

***********************************----------------------------------------------------85
பாடல் --177


                     உறிபொதி கரகக் கைய ரொளிவிடு செங்கற் றோய்த்த
                    அறுவைய ருயிர்க்கூ றஞ்சு நடையின ரவிச்சை மாள
                    எறிசுடர் மழுவா ளென்னக் கோவணம் யாத்த* கோலா
                  மறைமுடி வன்றித் தேறா மாதவர் மடங்க ளெங்கும்.        86


விளக்கம் ---177



உறியில்  கட்டி தொங்கவிடப்பட்ட கமண்டலத்தை கையில் வைத்திருப்பவர் ---

ஒளிவிடும் காவிநிற உடையை அணிந்தவர் --

எறும்பு போன்ற சிற்றுயிர்களுக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது என்று அஞ்சி நடப்பவர்--

அறியாமை இறந்து போவதற்கு எறியப்படுகின்ற ஒளிவீசும் 'மழு 'வைப்போல ---அன்னக்கோவணம் --அணிந்து  --கையில் 
மரத்தாலான தடியை உடையவர் ---

நான்கு வேதங்களும்  -- முடிவாக கூறக்கூடிய 'முக்தியை ' மட்டுமே அடையக்கூடிய  சிறப்புமிக்க கடுமையான தவத்தை [மாதவம் ]உடையவர் --

இப்படிப்பட்ட சிறப்புகளை  பெற்றவர்கள் எல்லா மடங்களிலும் காணப்பட்டார்கள் .

************************************---------------------------------------86
பாடல் --178


                  அட்டில்வாய்ப் புகையு மாடத் தகில்படு புகையும் வேள்வி
                   விட்டெழு புகையு மொன்றி விரிசுடர் விழுங்கக் கங்குல்
                    பட்டது பலருந் தத்தம் பயில்வினை யிழக்க நங்கை
                   மட்டவிழ் கடுக்கை யான்கண் புதைத்தநாள் மானு மன்னோ.  87


விளக்கம் --178


சமையலறையிலிருந்து வரும் புகையும் ---மாடங்களில் அகில் கட்டையால்   ஏற்படும் புகையும் --வேள்வி கூடத்திலிருந்து வெளிவரும் புகையும் ---ஒன்றுடன் ஒன்று  கலந்து சூரியனின் விரிந்த ஒளியை விழுங்கும் --கரிய இருள் போல எங்கும் சூழ்ந்து விளங்கியது --

இந்த காட்சியானது 

 பலரும் தாங்கள் செய்துகொண்டிருந்த வேலைகளை செய்யமுடியாமல் விட்டுவிடும்படி --- உமையன்னையானவள் ,மலர்கின்ற மொட்டுகளால் ஆன ,கொன்றை மாலையை அணிந்தவனான சிவபெருமானின் கண்களை மூடிய----நாள் இருள் சூழ்ந்து எப்படி இருந்ததோ ---

அப்படி இருந்தது பாருங்கள் .

*******************************************----------------------------87
பாடல் --179 .    

  தெய்வ நீறுமைந் தெழுத்துமே சிதைக்கல னாக
               எவ்வ மாசிரு வினையுடம் பெடுத்துழல் பிறவிப்
                பௌவ மேழையுங் கடந்தரன் பதமலர்க் கரைசேர்
                 சைவ மாதவ ருறைமடத் தனிமறு குரைப்பாம்.           88


விளக்கம் --179
                   தெய்வத்தன்மையை அளிக்கவல்ல ---திருநீற்றையும் ----ஐந்தெழுத்து மந்திரமான 'நமசிவாய '--என்னும் இந்த இரண்டை மட்டுமே தங்களுடைய 'சிதைக்கலனாக 'கைக்கொண்டு ---

குற்றம் நிறைந்த இரு வினைகளால் [நல்வினை ,தீவினை ]--ஏற்படும் இந்த உடம்பை --மீண்டும் மீண்டும் எடுத்து சுற்றி சுற்றி வருகின்ற பிறவிக்கடலாகிய --ஏழுவகை  பிறவியையும் --கடந்து --

பிறவிகளை கடந்தவனாகிய இறைவனின் பாதமலர்களை அடையத்தக்கவர்களான 'சைவ நெறியை பின்பற்றும் மிக்க பெருமைவாய்ந்த தவம் 'இருப்பவர்கள்   வாழ்கின்ற மடம் அமைந்திருக்கின்ற தனித்த பெருமைவாய்ந்த வீதியைப்பற்றி சொல்கின்றேன் .

குறிப்பு ;--
சிதைக்கலன் ;--என்பது , இறந்தபின்  ,இந்த உடம்பை எரிப்பதற்காக பயன்படுத்தும்   விறகு ,நெருப்பு --ஆகும் 
விறகு ---திருநீறு 
நெருப்பு ---நமசிவாய மந்திரம் 

நம் உடல் எரிந்தால் --மிஞ்சுவது சாம்பல் [திருநீறு ]---

கர்மபலன்களை தீர்ப்பதற்காக எடுக்கப்படும் உடல் --பூதவுடல் ,சூட்சும உடல் ,காரணஉடல் ---இவை அனைத்தையும்  எரித்து 'அத்வைத முக்தி 'அளிக்கும் சக்தியுள்ள நெருப்பு ---'நமசிவாய 'என்னும் ஐந்தெழுத்து மந்திரமாகும் 

******************************************------------------------------88

பாடல் --180-

எங்கு மீசனைப் பூசைசெய் திகபர மடைவார்
எங்கு மன்பரைப் பூசைசெய் தெழுபிறப் பறுப்பார்
எங்கு மாமகஞ் செவிமடுத் தெதிர்வினை தடுப்பார்
எங்கு நாயகன் வடிவுணர்ந் திருள்மலங் களைவார்.        89

  

விளக்கம் --180-

எங்குபார்த்தாலும் 'ஈசனை 'பூசை செய்து இகபர சுகத்தை அடைபவர்களும் ---

எங்குபார்த்தாலும் அன்பனாகிய இறைவனை பூசைசெய்து ஏழு பிறப்பையும் அறுத்து எறியக்கூடயவர்களும் ---

எங்குபார்த்தாலும் ஆகமங்களை காதில் கேட்டு 'ஆகாமிய வினையை 'தடுப்பவர்களும் --

எங்குபார்த்தாலும் நாயகனான இறைவனின் வடிவத்தை உணர்ந்து 
இருள் மலமாகிய --ஆணவத்தை  களைபவர்களும் ---

காணப்படுகிறார்கள் .

மற்றோரு அர்த்தம் ;--

சைவநெறியில் காணப்படும் பல வழிமுறைகளைப் பற்றி குறிப்பால் உணர்த்துகின்றார்  --

இறைவனை 'ஈசன் 'என்ற அடையாளத்துடன் ஏற்றுக்கொண்டு ---எல்லா இடத்திலும் 'ஈசனைக்கண்டு --பக்தியுடன் அவருக்கு பூஜை முதலிய வழிபாடு செய்தால்  ---இந்தஉலகம் மற்றும் மேலுலகத்தின் நலன்களை பெறலாம்  ---

இறைவனை --உள்ளார்ந்த அன்புடன்  எல்லா இடத்திலும் இறைவனைக்கண்டு பூசைசெய்தால்  --ஏழு பிறப்பை அறுத்தெறியலாம்--

எப்பொழுதும் ஆகமங்களை காதில் கேட்டு --அவற்றை பின்பற்றினால் ---வருவினையை [ஆகாமிய வினை ]தடுக்கலாம் --- 

எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளே நாயகன் [கணவர் ]---மற்ற அனைத்தும் அவரின் படைப்புகளே [பெண் ]--என்னும் மெய்ப்பொருளின் வடிவத்தை உணர்ந்தால் ---நான் என்னும் ஆணவத்தை உதறி --முக்தி அடையலாம் .

வினை ;--

மூன்று வகை வினைகளை நாம் சுமக்கின்றோம் ==

சஞ்சித கர்மம் --சேமித்துவைத்த வினைப்பயன் ;--

 நம்முடைய முந்தைய பிறவிகளில் நாம் சேர்த்துவைத்துள்ள நல்வினைப்பயன் +தீவினைப்பயன் ==ஆகியவற்றின் மொத்த வினைப்பயன் 

பிராரப்த கர்மம் --செயல்படுகின்ற வினைப்பயன் ;--

முந்தைய பிறவிகளில் சேமித்துவைத்த வினைப்பயனில் ஒரு பகுதி இந்தப்பிறவியில் செயல்பட ஆரம்பித்திருக்கும் ---அதுவும் ---இப்பிறவியில் மேற்கொண்டு நாம் செய்யும் வினையினால் ஏற்படும் பயனில் --இப்பிறவியிலேயே செயல்பட ஆரம்பிக்கும் வினைப்பயனும் 
ஆகும் .

ஆகாமிய கர்மம் --வரஇருக்கின்ற வினைப்பயன் ;--

சஞ்சித கர்மத்தில் -இப்பிறவியில் அனுபவித்த கர்மம் போக மீதி இருக்கும்  வினைப்பயனும்  --

இப்பிறவியில் செய்த வினையின் பயனில் --இப்பிறவியிலேயே அனுபவித்த வினைப்பயன் போக மீதமுள்ள வினைப்பயனும் 

சேர்ந்து நம்முடைய அடுத்த பிறவியில் அனுபவிக்க வேண்டிய வினைப்பயன்கள் ஆகும் .

********************************************------------------------------------89
பாடல் -181


அழிவி லானுரை யாகம மிலக்கமாய்ந் தவற்றுள்
விழுமி தாகிய விதியினும் விலக்கினு மடியைத்
தழுவு தொண்டர்கள் மைந்தர்கள் சாதகர் பாசங்
கழுவி வீடருள் போதகக் காட்சியர் பலரால்.       90
     


விளக்கம் -- -181


அழிவில்லாதவனாகிய இறைவன் சிவபெருமான் உரைத்த ஆகமங்களின் இலக்கணங்களை ஆராய்ந்து ---
அதனுள் பொதிந்து கிடக்கும் உட்பொருளின் விதியையும் ---விதிவிலக்கையும் ---
நன்கு அறிந்து தெளிந்து ---

தங்களுடைய பாதங்களில் அடிபணிந்த தொண்டர்கள் ,மைந்தர்களைப்போல அன்புடன் அடிபணிந்தவர்கள் ,சாதகர்கள் --ஆகியவர்களின் குற்றங்குறைகளை கழுவி ---வீடுபேற்றை அடைவிக்க வல்ல  ---ஞானமே வடிவாக காட்சியளிக்கும் --ஞானாசிரியர் பலர் நிறைந்திருந்தனர் .

****************************************************--------------------------90




                                                                                         பொருள்எழுதியவர் 
                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS