JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Wednesday, July 20, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 2

                                         

        திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய


                                                         
                                                              பாயிரம்

                                                                  காப்பு 
     பாடல் --1
        
                                        சத்தி யாய்ச்சிவ மாகித் தனிப்பர 
                                       முத்தி யான முதலைத் துதிசெயச்
                                    சுத்தி யாகிய சொற்பொரு ணல்குவ
                                    சித்தி யானைதன் செய்யபொற் பாதமே.----[1]

விளக்கம் --1

          சக்தியாகவும் சிவமாகவும்  முக்தியை தந்தருளவல்ல அந்த முக்தியாகவும் உள்ள ___ இரண்டு என்பது இல்லாத  __ ஒன்றேயான பரம்பொருளான {எங்கும் நிறைந்துள்ள பொருள் }   __ முதற் பொருளை வணங்கி புகழ்ந்து பாட 
              நல்ல சிறந்த பொருளை தரும்  திருத்தமான சொற்களை தந்தருளும்படி ,அறிவுத்தெளிவை தந்தருளவல்ல  சித்திவிநாயகப் பெருமானின் பொன்போன்ற பாதங்களை வணங்கி வேண்டுகின்றேன் -
******************************************************************************************************************************************************************

                                                 சொக்கலிங்க மூர்த்தி  காப்பு 


 பாடல் --2

வென்றுளே புலன்க ளைந்தார் மெய்யுண ருள்ளந் தோறுஞ்
சென்றுளே யமுத மூற்றுந் திருவருள் போற்றி யேற்றுக்
குன்றுளே யிருந்து காட்சி கொடுத்தருள் கோலம் போற்றி
மன்றுளே மாறி யாடு மறைச்சிலம் படிகள் போற்றி.                 [2]


விளக்கம் --2

                                 ஐந்து புலன்களையும் அடக்கி ,அதை ஆட்டிவைக்கும் மனத்தையும் அடக்கி வெற்றி பெற்று ,,உண்மைப்பொருளை உணர்ந்தவர்களின்  உள்ளத்தினுள்  சென்று ,,அமர்ந்து ,,அங்கேயே தங்கி ,,அங்கு அமுதமாகிய ஆனந்தத்தை ஊற்றுபோல் பெருகச்செய்யும் உன் திருவருளை வணங்கி போற்றுகின்றேன். 

                                   வெண்மையான பனிச்சிகரமான இமயமலை போல் விளங்கும்  ரிஷபவாகனத்தின் மீது அமர்ந்து காட்சி தந்தருளும்  உன் திருக்கோலத்தை வணங்கி போற்றுகின்றேன் .

                                      வெள்ளியம்பலத்தில் கால் மாறி ஆடிய உன் திருக்கோலத்தில் ,நான்கு வேதங்களும் சிலம்பமாகி ஒலித்துக்கொண்டிருக்கும்  உன் திருவடிகளை வணங்கி போற்றுகின்றேன் 

குறிப்பு ;--போற்றி போற்றி  என்றால் மிக்க கவனத்துடனும் பணிவுடனும் பக்தியுடனும் பாதுகாத்து வைத்து  வணங்குகின்றேன் --என்று அர்த்தம் 

******************************************************************************************************************************************************************

                                     அங்கயற்கண்ணம்மை  காப்பு 

பாடல் --3
                            சுரும்புமுரல் கடிமலர்ப்பூங் குழல்போற்றி
                              யுத்தரியத் தொடித்தோள் போற்றி
                          கரும்புருவச் சிலைபோற்றி கவுணியர்க்குப்
                                பால்சுரந்த கலசம் போற்றி
                            இரும்புமனங் குழைத்தென்னை யெடுத்தாண்ட
                                   வங்கயற்க ணெம்பி ராட்டி
                            அரும்புமின நகைபோற்றி யாரணநூ
                                   புரஞ்சிலம்பு மடிகள் போற்றி.                    [3]


விளக்கம் ---3

                     வண்டுகள் ரீங்காரமிடும் மணம் மிக்க  பூக்களை சூடியுள்ள கூந்தல் போற்றி --
                          உத்தரீயத்தையும் வளையல்களையும் அணிந்துள்ள திருத்தோள்  போற்றி --

                         விற்களை போன்ற கரிய புருவங்கள் போற்றி ---

                          திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் சுரந்தருளிய கலசம் போற்றி--
                             பல பிறவிகளின் கர்ம வினைகளால் தடிப்பேறி கடின இரும்புபோல் இருந்த என் மனதை,,, தீயினால் இரும்பு இளகுவதுபோல் தன் கருணை பார்வையினால் கர்மவினைகள் இளகி ஓடச்செய்து  ----__ பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் இருந்து விடுவித்த --அழகிய மீன் போன்ற கண்களை உடைய என் அன்னையின் ,,,மலரத்துடிக்கும் பூவின் மொட்டு போல அரும்பும் புன்முறுவல் போற்றி 

                                   வேதங்கள்  கால் சிலம்பாக இருந்து  ஓலித்துக்கொண்டிருக்கும்  திருவடிகள் போற்றி .. 

******************************************************************************************************************************************************************

                                                             நூற்பயன் 


     பாடல் --4

திங்கள் அணி திரு ஆலவாய் எம் அண்ணல் திரு 
           விளையாட்டு இவை அன்பு செய்து கேட்போர் 
சங்க நிதி பதுமநிதிச் செல்வம் ஓங்கித் தகைமை தரு 
           மகப் பெறுவர் பகையை வெல்வர் 
மங்கல நல் மணம் பெறுவர் பிணி வந்து எய்தார் வாழ் 
           நாளும் நனி பெறுவர் வான் நாடு எய்திப் 
புங்கவர் ஆய் அங்கு உள்ள போக மூழ்கிப் புண்ணியர் 
           ஆய்ச் சிவன் அடிக்கீழ் நண்ணி வாழ்வர்.                             [
4]


விளக்கம் --4


                       சந்திரனை திருமுடிமீது அணிந்து,  திருவாலவாய் எனப்படும் மதுரையில் எழுந்தருளியுள்ள-- என்னுடைய இறைவனான சிவபெருமான்  புரிந்தருளிய திருவிளையாடல்களை --

இறைவன் மீது அன்பு நிறைந்த மனத்தை செலுத்தி  கேட்போர் ---

செல்வத்தின் அதிபதியாகிய குபேரனிடம் உள்ள அழியாத செல்வமாகிய --சங்கநிதி ,பதுமநிதி என்ற இரண்டு செல்வ வளங்களையும் என்றும் குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்குமாறு பெற்று ,

,நல்ல குணங்களை கொண்ட குழந்தைசெல்வங்களையும் பெறுவார்கள் -

உட்பகை -வெளிப்பகை ___ ஆகிய அனைத்து பகைகளையும் 
வெல்வார் கள் ---

மங்கலம் நிறைந்த திருமணவாழ்வை அடைவார்கள்---

பசி நோய்,உடல் நோய்,மன நோய்---பொன்ற எந்த நொயினாலும் பாதிக்கப் படமாட்டார்கள்.

நீண்ட வாழ்நாளை பெறுவார்கள் ---

இறந்தபின் தேவர்கள் வாழும் உலகுக்கு சென்று --தேவர்களாக வாழ்ந்து ---அங்குள்ள அனைத்து இன்பங்களையும் நன்கு அனுபவித்து ---அப்படி அனுபவிக்கும் போதும்-- சிவபெருமான் அருளால் அவர் திருவடிகளை மறவாத புண்ணியர்களாக வாழ்ந்து ---முடிவில்,, இறைவன் சிவபெருமானின் திருவடி நிழலான முக்தியை அடை வார்கள் .      [4]

******************************************************************************************************************************************************************

                                                                           வாழ்த்து 
   பாடல் --5
                    மல்குக வேத வேள்வி வழங்குக சுரந்து வானம் 
                     பல்குக வளங்கள் எங்கும் பரவுக அறங்கள் இன்பம் 
                      நல்குக உயிர் கட்கு எல்லாம் நால் மறைச் சைவம் ஓங்கிப் 
                     புல்குக உலகம் எல்லாம் புரவலன் செங்கோல் வாழ்க.          [ 5]


விளக்கம் --5

நான்கு வேதங்கள் ஓதும் ஒலியும் ,யாகங்கள் செய்வதால் ஏற்படும் ஒளியும் -ஒலியும் ---எங்கும் நிரம்பட்டும் ----

வானம் மழை நீரினை நன்கு பொழிந்து எல்லா வளங்களும் அனைத்து இடங்களிலும் பரவி பெருகட்டும் ----

அனைத்து உயிர்களுக்கும் பேரின்பம் கிடைக்கட்டும் --

உலகின் எல்லா பகுதியிலும் நான்கு வேதங்களும்  சைவ சமயமும் 
நன்கு பரவி தழைத்து செழித்து வளர்ந்து நின்று நிலைபெறட்டும் ---

அரசனின் நீதி தவறாத ஆட்சி என்றென்றும் வாழட்டும் .


******************************************************************************************************************************************************************


                                                                                                       பாயிரம் முற்றும் 
                                                                                                       பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS
                              

திருவிளையாடல் புராணம்---பகுதி 1

சுந்தரேசர் சந்நிதி முன் உள்ள கொடிமரம் 

      

   திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

பொருள்  எழுதியதற்கான காரணம் ;--


             நான் Dr.S.வீரம்மா தேவி .[54 வயது ].இராமாயணத்தை ஒலிப்பதிவு செய்து 'you tube '  வெளியிட்டேன் .புத்தகத்தை படிக்க இயலாதவர்கள் கேட்டு பயன்பெறட்டும் என்ற ஒரு எண்ணத்தினால் அந்த முயற்சியை தற்செயலாக  செய்தேன் .அதன் தொடர்ச்சியாக-- பக்த மகாவிஜயமும் --பதிவு செய்து வெளியிட்டு பின் --திருவிளையாடலை --பதிவு செய்ய முயற்சித்த பொழுது --அதன் பொருள் விளக்கம் மிக சிக்கலான தமிழில் இருந்தது .இன்றைய தலைமுறை அதை புரிந்துகொள்ள முயற்சியெடுப்பார்களா என்பது  சந்தேகம் .எனவே எளிய தமிழில் முதலில் பொருள் எழுதி அதன் பின் ஒலிப்பதிவு செய்யலாம் என்று எண்ணி இந்த முயற்சியை  செயல்படுத்துகின்றேன் .

           நான் 10 வகுப்புவரை தமிழ் மொழி பள்ளியில் படித்தவள் .11 &12 மட்டும் ஆங்கில வழி கல்வி .ஆனால் 'தமிழ் இலக்கணம் ' ஓரளவு தெரியும்  .இந்த முயற்சியில்  என்னுடைய தமிழ் பிழையில்லாமல்  ஓரளவு தரமாக இருந்தால் --அது என் தமிழ் ஆசிரியர்களால் தான் .

ஏனென்றால்  வகுப்பில் --பின் இருக்கையில் தூங்கி வழியும் என்னை அருகில் அழைத்து ,தன்னுடைய இருக்கையின் அருகிலேயே  கீழே ,உட்கார வைத்து --அங்கும் நான் தூங்கி வழியும் பொழுது --- தன் நீண்ட பிரம்பால் என் தோளில் மெதுவாக தட்டி எழுப்பி --'கவனி ,கணக்கு பாடத்தில் அதிபுத்திசாலியான உனக்கு தமிழும் நன்கு வரும் '---என்று என்னை ஊக்கப்படுத்துவார்கள் .

ஏனென்றால் ஒரு மனப்பாட பகுதி செய்யுள் கூட எனக்கு தெரியாது .பரீட்சையில் மனப்பாட செய்யுள் கேட்கப்பட்ட கேள்வியை  'சாய்ஸ் 'ல்  விட முடியாவிட்டால் ---பக்கம் பக்கமாக விளக்கம் மட்டும் எழுதி வைத்துவிடுவேன் .திருக்குறளில் 
                                     'கற்க கசடற கற்றவை கற்றபின் 
                                                நிற்க அதற்குத் தக '.
மட்டும் தான் தெரியும் .


இந்த முயற்சியை மேற்கொள்வதற்கு முன் -காஞ்சி மாமுனிவர் ,
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் --தெய்வத்தின் குரல் --என்னும் நூலை [7 பாகம் ]படித்து முடித்திருந்தேன் [ஆன்மீக களஞ்சியம் --நூலை தொகுத்தளித்தவருக்கு நன்றி ].இப்படி நான் படித்து ,அறிந்து ,விளங்கிக்கொண்ட --பல கருத்துக்களை கொண்டும் --

நூல்பொருளான எல்லாம் வல்ல இறைவனையும் ,நூலாசிரியரான  பரஞ்சோதி முனிவரையும் வணங்கிவிட்டு --பாடலையும் பொருள்கூறும் நூல்களையும் வைத்துக்கொண்டு --

அந்த பாடலை திரும்பத்திரும்ப படித்து --என் மனத்திற்கு விளங்கும் அர்த்தத்தை கொண்டும்  ----

என் எளிய தமிழறிவைக்கொண்டு  எழுதியுள்ளேன் .

எனவேஏதேனும்தவறுஇருந்தால் தமிழறிஞர்கள்                                பொறுத்துக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கின்றேன் -----நன்றி 

                         ******************************************************

   திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


முன்னுரை ;--

                   இறைவன் 'சிவபெருமான் ' ----தன்னுடைய 
மனம்  கனிந்திருந்த -ஒரு நல்ல நேரத்தில்  --
தன்னுடைய  வாகனமான -நந்தி தேவருக்கு 'முன்னர் நடந்த பல நிகழ்வுகளை கூறுகின்றார் .
நந்தித்தேவரும் -- ,எப்பக்கமும் தன்னுடைய கவனத்தை சிதறவிடாமல் மிகுந்த சிரத்தையுடனும் ,பக்தியுடனும் அந்த  நிகழ்வுகளை கேட்டு ---மனத்தில் நிலைநிறுத்தி --அதைப்பற்றி மீண்டும் சிந்தித்து --அதன் உட் பொருள்களை புரிந்துகொண்டார் ---

பின்னர்--அந்த நிகழ்வுகளை  அவர் பிரம்மாவின் நான்கு மானசீக புதல்வர்களான ___ பிரம்மச்சர்ய பாலகர்களாக  விளங்கும்  __சனகர் ,சதானந்தர் ,சனா நந்தர் மற்றும் ஸனத்குமாரர் ___ ஆகிய நால்வர்களில் 
ஸநத்குமாரருக்கு  மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் கூற ____ 

ஸனத்குமாரர் மிகுந்த பணிவுடன் கேட்டு மனத்தில் இருத்தி ___ அந்த நிகழ்வுகளை ---மகாபாரதக் கதை எழுதிய 'வியாச முனிவருக்கு 'சொல்ல ____ 

வியாச முனிவர்  மிக்க மகிழ்வுடன் அக்கதைகளை கேட்டு அவைகளை சூத முனிவருக்கு விரித்து கூறினார்  ____ அவைகளே  18 புராணங்கள் 

சூத முனிவர் --இந்த 18 புராணங்களை --கங்கை கரையில் இருந்த 'நைமிசாரண்யம் 'என்ற தபோவனத்தில் தவம் செய்து வாழ்ந்து கொண்டிருந்த முனிவர்களுக்கு சொல்ல ___ 


அந்த முனிப்பெருமக்கள் உலகின் பல இடங்களுக்கும் சென்று இந்த புராணங்களை  அனைவருக்கும் சொன்னார்கள் ..

18 புராணத்தில் ---கந்த மகாபுராணத்தில் ---சங்கர  சங்கிதையில் இந்த 'திருவிளையாடல்  புராணம் '--கூறப்பட்டுள்ளது .

இந்த புராணத்தில் ___ இந்தியத்திருநாட்டில் உள்ள தமிழ்நாடு என்ற மாநிலத்தில் அழகுற அமைந்துள்ள மிகமிகமிக பழமையான பெருநகரமான 'மதுரை 'மாநகரை   மையமாகக்கொண்டு --- இறைவன் சிவபெருமான் -சோமசுந்தரன்  ,சொக்கநாதப்பெருமான் ,,,,,,என்ற பெயர்களில் ___மதுரையிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் நிகழ்த்திய 64 அற்புத நிகழ்வுகள்  கூறப்பட்டுள்ளது .


நான்கு வேதம் ,உபநிடதம் ,18 புராணங்கள் மற்றும்  மூன்று இதிகாசங்கள் ________அனைத்தும் சம்ஸ்கிருத   மொழியில் எழுதப்பட்டவை .


சம்ஸ்கிருத  மொழியறிவும் ,அவரவர் தாய் மொழியும் நன்கு கற்ற அறிஞர்  பெருமக்கள் ---அந்த  நூல்களை அவரவர் மொழியில் மொழி பெயர்த்து எழுதினார்கள் .____ 

அவர்களில் சிலர் தெய்வ அனுக்கிரகத்தால் --மூல நூலின் பொருள்  உட்கருத்தை நன்கு உள்வாங்கி ,ஆராய்ந்து ,தெளிந்து ____ அந்த பொருளை உள்ளே வைத்து __ தன்னுடைய தாய் மொழியில் 
நூல்  இயற்றினார்கள் .


அப்படி ''பரஞ்சோதி  முனிவர் ' என்பவரால் இன்றைக்கு சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் {800 ஆண்டு ,4000 ஆண்டு என்றும் கூறப்படுகின்றது }
 தமிழில் இயற்றப்பட்ட நூல் ---'திருவிளையாடல் புராணம் '

இந்த நூல் இறைவன் சிவபெருமான் -சோமசுந்தரன்  ,சொக்கநாதப்பெருமான் ,,,,,,என்ற பெயர்களில் ___மதுரையிலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் நிகழ்த்திய 64 அற்புத நிகழ்வுகளை  அழகு தமிழில் கூறுகின்றது .

பரஞ்சோதியார் --திருமறைக்காடு என்ற வேதாரண்யத்தில் வாழ்ந்த சைவமரபைச் சார்ந்த 'மீனாட்சி சுந்தர தேசிகர் ' என்னும் பெரியாருக்கு மகனாக பிறந்தார் .தன் தந்தையிடமே சைவ தீட்சை பெற்று  தாய் மொழியாம்  தமிழ் மொழியிலும்,சம்ஸ்கிருத  மொழியிலும்  தேர்ந்த அறிவும் ஞானமும் பெற்றார் .

அதன் பின் அவர் பல ஊர்களுக்கு சென்று இறைவனை வழிபட்டு  ஒரு நாள் மதுரை மாநகர் வந்தடைந்தார் .அங்கு நாள்தோறும் மீனாட்சி அம்மன் ஆலயம் சென்று சோமசுந்தர பெருமானையும் மீனாட்சி அன்னையையும் வழிபட்டு வரும் பொழுது ---ஒரு நாள் அன்னை மீனாட்சி அவர் கனவில் தோன்றி "இறைவன், மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல்களை தமிழில் பாடுக "என்று ஆணையிட ,,அதை தலைவணங்கி ஏற்று ---தன்னுடைய பிறவிப்பயன் இதுவே என்று உணர்ந்து ---இந்த நூலை இயற்றினார் .

'திருவிளைடாடல் புராணம் '----

மதுரைக்காண்டம் ---18 படலம் ----1306 பாடல்கள் 

கூடற்க்காண்டம்-----30 படலம் ------1041  பாடல்கள் 

திரு  ஆலவாய் காண்டம் ---17 படலம் ----1016 பாடல்கள் 


ஆக  3 பகுப்புகளாக இயற்றப்பட்டது .

                                                                                                           முன்னுரை முற்றும் 
                                                                                                           பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS