JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Sunday, October 23, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 13

Meenatchi amman Temple----Madurai


திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 







                               திருநகரச்   சிறப்பு --பகுதி 3

பாடல் --112


சண்ட பானுவுந் திங்களுந் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்துநீண் டகன்றகோ புரங்கள்
விண்ட வாயிலால் வழங்குவ விடவரா வங்காந்
துண்ட போல்பவு முமிழ்வ போல்பவு முழலா.  [21]

விளக்கம் --112

வேகமாகச்செல்லும் சூரியனுடைய   பாதையும்   ,சந்திரனுடைய  பாதையும்    தடைபடும்படியும்----

எல்லாத்திசைகளிலும்  அண்டகோளங்களையும் எட்டும்படி பரந்து  நீண்டு உயர்ந்து விளங்குகின்றன கோட்டை கோபுரங்கள் --- 

அதன் திறந்த வாயில் வழியாக -சூரியனும் சந்திரனும்  ---

விஷம் கொண்ட நாகங்களான 'ராகு கேது 'க்களால் --விழுங்கி பின் உமிழப்பட்டது போல --மறைந்தும்  பின் வெளிவந்தும்  --காட்சியளிக்கின்றன .

             *********************************************--------------------21
பாடல் --113

மகர வேலையென் றியானைபோன் மழையருந் தகழிச்
சிகர மாலை*சூ ழம்மதி றிரைக்கரந் துழாவி
அகழ வோங்குநிர் வையையா லல்லது வேற்றுப்
பகைவர் சேனையாற் பொரப்படும் பாலதோ வன்றே. [22]


விளக்கம் --113
சுறாமீன்களை உடைய கடல் என்று கருதிய 'யானையைப்போன்ற 'பெரிய மேகங்கள் அதனிடம் நீரைப்பருக  நெருங்குகின்றன --அந்த  அளவுக்கு சிறப்பும் அளவில் பெரியதுமான  அகழியால் சூழப்பெற்று----
பெரிய குன்றுகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து செய்யப்பட் ட மாலை போன்று விளங்குகின்றது  கோட்டை மதில் --

அலைகள்  என்ற  தன்னுடைய கைகளை  நீட்டி  துளைப்பதுபோல் அக்கோட்டை சுவரின்மீது மோதும் , பெருத்த நீர்ப்பரப்பை உடைய ' வைகை ' நதி யால்  மட்டுமே அந்த கோட்டை மதிலை தாக்க முடியும் ----

வேறு பகைவர் படைகளால் அப்படி அந்த கோட்டை மதிலை தாக்க முடியாவேமுடியாது .

அவ்வளவு பலமும் சிறப்பும் மிக்கது அந்த கோட்டை மதில் சுவர் .

               *****************************************************-----------------------22
பாடல் --114

எல்லை தேர்வழித் தடைசெயு மிம்மமிற் புறஞ்சூழ்ந்
தொல்லை மேவலர் வளைந்துழி யுடன்றுபோ ராற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல வம்மதிற் பொறிசெயு மறஞ்சிறி துரைப்பாம். [23]


விளக்கம் --114

சூரியனின் தேர் செல்லும் பாதையை மறைக்கும் அளவுக்கு உயர்ந்து விளங்கும் கோட்டை மதிலை சூழ்ந்து வந்து தொல்லை கொடுக்கும் பகைவர்களை வளைத்து மிக்க சினத்துடன் அவர்களை அழிக்க  --மல்லர்களான போர்வீரர்களும் வேண்டுமா ?---

பொறிகளே அப்பகைவர்களை வெல்வதற்கு போதும் --என்ற அளவுக்கு அம்மதிலின் மேலிருந்து பொழியப்படும் செயலின் சிறப்பைப்பற்றி இனி கூறலாம்  .
                  ***************************************************----------------------23
பாடல் --115

மழுக்கள் வீசுவன நஞ்சு பூசுமுனை  வாள்கள் வீசுவன முத்தலைக்
 
கழுக்கள் வீசுவன குந்த நேமியெரி 
கால வீசுவன காலனேர்
   
எழுக்கள் வீசுவன கப்ப ணங்கள்விட 
 மென்ன வீசுவன வன்னெடுங்
    

கொழுக்கள் வீசுவனகற்க  வண்கயிறு கோத்து   வீசுவன  வார்த்தரோ. [24]                                          
விளக்கம் ---115

'மழு 'என்னும் ஆயுதத்தை எறியும் பொறிகள் ----

விஷம் தடவிய முனையை உடைய வாட்களை எறியும் பொறிகள் ---

மூன்று தலைகளை உடைய சூலாயுதத்தை எறியும் பொறிகள் ---

'கைவேல் திகிரி'  என்னும் ஆயுதத்தை 'தீஉமிழ 'எறியும் பொறிகள் ---

கூற்றுவனை [எமனை ]போன்ற தடிகளை எறியும் பொறிகள் ---

இரும்பாலான நெருஞ்சி முள் வடிவமுடைய ஆயுதங்களை ,விஷம் போல 
                  எறியும் பொறிகள் ---

வலிய நெடிய 'கொழுப்படைகள் 'எறியும் பொறிகள் ---

கற்களை கயிற்றில் கோர்த்து எறியும் பொறிகள் ---

என எண்ணற்ற பொறிகள் ஆரவாரமுடன் அணிவகுத்து உள்ளன .

     ***************************************************---------------------------24
பாடல் --116
நஞ்சு பில்குதுளை வாளெ யிற்றரவு நாநிமிர்த்                                                                               தெறியு மலையரா
   
வெஞ்சி னங்கொண்முழை வாய்தி றந்துபொரு
                                                           விக்கிட விழுங்குமால்
குஞ்ச ரங்கொடிய முசலம் வீசியெதிர் குறுகு
                                                    வார்தலைகள் சிதறுமால்
அஞ்சு வெம்பொறி விசைப்பி னுங்கடுகி 
யடுபு
                                                       லிப்பொறி யமுக்குமால்.                                                                                                            [25]

விளக்கம் --116

விஷத்தை கக்குகின்ற துளையை உடைய கூர்மையான பற்களை உடைய பாம்புப்பொறிகள்  நாவினை நீட்டி பகைவர்களை கொல்லும் ----

 மலைப்பாம்பு போன்ற பொறிகள் மிக்க கோபத்துடன் தன்னுடைய குகை போன்ற வாயைத்திறந்து பகைவர்களை ,பயத்தினால் திகைக்கவைத்து விழுங்கிவிடும்  --- 

யானைப்பொறிகள் கொடிய உலக்கையை வீசி எதிரே நெருங்குபவர்களின் தலைகளை சிதறடிக்கும் --

மிக்க பயத்தை அளிக்கும் கொடுமையான பொறி --புவிஈர்ப்பு விசையை விட வேகத்துடன் அருகில் வந்து அமுக்கி விடும்  'புலிப்பொறி ' ஆகும் .

          ******************************************************---------------------------25
பாடல் --117

எள்ளி யேறுநரை யிவுளி மார்பிற்  வெறிந்து குண்டகழி    யிடைவிழத்                                  
தள்ளி மீளுமுருள் கல்லி  ருப்புமுனை  தந்து வீசியுடல் சிந்துமாற் 
கொள்ளி வாயலகை வாய்தி  றந்துகனல்  கொப்பு   ளிப்பவுடல் குப்புறத் 
துள்ளி யாடுவன கைகள் கொட்டுவன தோள்பு  டைப்ப   
சில கூளியே.  [26]                                           


விளக்கம் --117

மதிலை இளக்காரமாக எண்ணி ஏறுபவர்களை ,குதிரைப்பொறியானது '--அவர்களின் மார்பு உடையும்படி உதைத்து ---அகழிக்குள் தள்ளி --மீண்டும் தன்னுடைய இடத்துக்கே வந்துவிடும் ---

உருளைப்போல இருக்கும் 'கல்லிருப்பு பொறி 'யானது முள்போன்ற ஆயுதத்தை எறிந்து பகைவர்களின் உடலில் இரத்தத்தை சிந்த வைக்கும் ---

கொள்ளிவாய்ப்பேய் பொறிகள் தங்கள் வாயைத்திறந்து தீயைக்கக்கி  பகைவர்களின் உடலை குப்புறத்தள்ளி ஆடும் --

கைகளை தட்டி பகைவர்களின் தோளில் நன்றாக அடித்து வீழ்த்தும் சில பேய்ப்பொறிகள் -.

            ******************************************************--------------------26
பாடல் --118


துவக்கு சங்கிலி யெறிந்தி ழுக்குமரி  தொடர்பி
                                                                 டித்தகை யறுக்கவிட்
டுவக்கு மொன்னலர்க டலைக ளிதை்திருகி
                                            யுடனே ருக்குமர நிலைகளாற்
கவைக்கொ ழுந்தழல் கொளுத்தி வீசுமெதிர்
கல்லு
                                                          ருட்டியடு மொல்லெனக்
குவைக்க டுங்கன்மழை பெய்யு மட்டமணல்
                                             கொட்டு மேவலர்கள் கிட்டவே.                                                                                                         [27]

விளக்கம் --118

பகைவர்கள் நெருங்கிவரும்போது ----

சில பொறிகள் --

கட்டுகின்ற சங்கிலியை எறிந்து இழுக்கும் ---அந்த சங்கிலியை பிடித்த கைகளை கூர்மையான ஆயுதத்தை கொண்டு அறுத்து மகிழும் ----

 பகைவர்களின் தலையை திருகி உடலை நெரிக்கும் ----

மரநிலைகளினால்பிளவுபட்ட நாக்கினை உடைய தீயினை கொளுத்தி எறியும் ---

பெரியகற்களை எதிரிகளின் மீது உருட்டித்தள்ளி கொல்லும் --

'ஒல்லென்ற ' ஒலியுடன் கல்மழையைப்பெய்யும் ---

சுட்டமணலைக் கொட்டும் .

              ****************************************************------------------27
பாடல் --119


உருக்கி யீயமழை பெய்யு மாலய  வுருக்கு                                                                  வட்டுகுரு செம்பினீர் பெருக்கி வீசும்விடு படையெ லாமெதிர்பிடித்து                                                              விட்டவர் தமைத்தெறச் செருக்கி வீசுநடை கற்ற மாடமொடு   சென்று                                                         சென்றுதுடி முரசொடும் பெருக்கி மீளுநடை வைய மேனடவி யெய்யும்                                                       வாளிமழை பெய்யுமால்.         [28]
விளக்கம் ---119
சில பொறிகள் --

உருக்கிய ஈயத்தை மழைபோல கொட்டும் ----

இரும்பினால் செய்யப்பட வட்டுகளை கொண்ட உருக்கப்பட்ட 'செம்புகுழம்பை  'ஆறுபோல பெருகி ஓடும்படி வீசும் ---

பகைவர்கள் எரியும் ஆயுதங்களை எல்லாம் எதிரே சென்று பிடித்து --அதை விட்டவர்கள் தெறித்து ஓட மிக்க செருக்குடன் வீசும் ---

சஞ்சரிக்கின்ற மாடங்களுடன் எல்லா இடங்களுக்கும் சென்று சென்று உடுக்கை ஒலியை பேரொலியாக எழுப்பி திரும்பிவரும் ----

நடைத்தேரை மேலேசெலுத்தி அம்புமழையை --மழைபோல பெய்யும் .

                    ************************************************------------------------28
பாடல் --120

வெறிகொ ளைம்பொறியை வெல்லினும் பொருது வெல்லு தற்கரிய                                                                                                                                               காலனை
   
முறிய வெல்லினும் வெலற்கருங் கொடிய 
முரணவா யமர ரரணெலாம்
   
அறிவி னானிறுவு கம்மி யன்செயவு 
  மரியவா யவனர் புரியுமிப்
 
பொறிகள் செய்யும்வினை யின்ன பொன்னணி 
புரத்து வீதிக                                                                                                                                                    ளுரைத்துமால்.[29]
     

விளக்கம் --120

நம்மை வெறிகொள்ளச்செய்யும் --நம்முடைய 'ஐந்து பொறிகளை' --நாம் வென்றாலும் --

போர்செய்து வெற்றிகொள்ள முடியாத 'மரணதேவனை 'புறமுதுகிட்டு ஓடவிரட்டி வென்றாலும் ---

வெல்வதற்கு முடியாத கொடிய வலிமைவாய்ந்த --தேவர்களின் அரண்களை ---நினைத்த உடன் --எண்ணத்தினாலேயே கட்டிமுடிக்க வல்ல --'தேவதைச்சாலேயே 'செய்யமுடியாது ---

'யவனர்களால் 'செய்யப்பட்ட ---அரிய செயல்களை செய்யும் --இந்த வியத்தகு பொறிகளை.

இனி பொன்போல மிளிரும் மாளிகைகள்  வரிசையாய் அழகுற அமைக்கப்பட்டு விளங்கும் 'மதுரை மாநகரின் ' வீதிகளைப்பற்றி கூறலாம் .

******************************************************************----------29



                                                                                         பொருள்எழுதியவர் 
                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

Saturday, October 22, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 12


MEENATCHI AMMAN TEMPLE--MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 







                               திருநகரச்   சிறப்பு --பகுதி 2

பாடல் --102

இரும்பி னன்னதோள் வினைஞரார்த் தெறிந்துவாய்
                                                                                                   மடுக்குங்
கரும்பு தின்றிடி யேற்றொலி காட்டியின் சாட
சுரும்பு சூழ்கிடந் தரற்றிடச் சொரிந்துஞெ் சினத்தீ
அரும்பு கட்களி றொத்தன வாலையெந் திரங்கள்.  [11]


விளக்கம் --102

ஆலையில் உள்ள இயந்திரங்களில் ,, இரும்பைப்போன்ற வலிமையான தோள்களை உடைய 'வினைஞர்கள் --அதாவது ,தொழில் செய்யும் தொழிலாளர்கள் 'கரும்பைஎடுத்து --அதன்வாய்க்குள்        வைத்தவுடன் --அந்த இயந்திரங்கள் அவற்றை உள்ளே இழுத்து  ,,இடிபோன்ற ஒலியுடன் அரைத்து கரும்புச் சாற்றை கொடுக்கும் காட்சியானது ----- 

வண்டுகள் சூழ்ந்து ஒலிசெய்து கொண்டிருக்க --வெப்பம் நிறைந்த கோபமாகிய தீயைப்போன்ற நிறமுடைய கண்களைக்கொண்ட 'யானைகள்-- இனிய சாறு வழிந்தோட கரும்பை உண்ணும் --காட்சியைப் போல இருக்கின்றது .

                 **************************************************-----------11
பாடல் --103

பள்ள நீர்குடைந்* தஞ்சிறைப் பாசிபோர்த் தெழுந்த
வெள்ளை யன்னத்தைக் காரன   மெனப்பெடை வீழ்ந்த
உள்ள மீட்டல மரச்சிற குதறியுள் ளன்பு
கொள்ள வாசையிற் றழீஇக்கொடு குடம்பைசென் றணையும்.  [12]



விளக்கம் --103


நீரின் ஆழத்திற்கு ஊடுருவிச்சென்று வந்ததால் சிறகுகளில் பாசிபடிய  எழுந்து வந்த ஆண் அண்ணங்களை ---கரிய காகம் என்று எண்ணி ---
'பெண் அண்ணங்கள் '--அன்பில் விழுந்த தன்னுடைய உள்ளத்தை மாற்றிக்கொள்ள ---

உடனே அந்த 'ஆண் அண்ணங்கள் 'சிறகுகளை உதறி தன்னுடைய வெண்மை நிறத்தை காட்ட ---

'பெண் அண்ணங்கள்'உண்மையை புரிந்து உள்ளன்பு கொள்ள --
 'ஆண் அண்ணங்கள் 'அவைகளை ஆசையுடன் அணைத்துக்கொண்டு ,தன்னுடைய கூட்டிற்குள் சென்று சேருகின்றன .

           *************************************************-------------12
பாடல் --104

இரவி யாழியொன் றுடையதே ரீர்த்தெழு மிமையாப்
புரவி நாநிமிர்த் தயில்வன பொங்கர்வாய்த் தளிர்கள்
கரவி லார்மகத் தெழுபுகை கற்பக நாட்டிற்
பரவி வாட்டுவ பனியெனப் பங்கயப் பொய்கை. [13]


விளக்கம் ---104

சூரியனைப்போன்ற சக்கரம் ஒன்று உடைய தேரினை இழுக்கும் --கண்களை இமைக்காத தன்மை உடைய குதிரைகள் ---தங்களுடைய நாவினை நீட்டி உண்ணும் மரங்களின் இளம் தளிரானது ---

வஞ்சகமில்லாதவர்கள் செய்யும் வேள்வியிலிருந்து எழும் புகையானது --கற்பகநாடு என்னும்வானுலகத்திற்கு  சென்று ,அவர்களைவாட்டும்  பனியைப்போல எங்கும் பரவி  காணப்படுவதுபோல   ---

தாமரை மலர்கள் நிறைந்துள்ள குளத்தை சூழ்ந்து உள்ளது .


           ***********************************************-------------13
பாடல் --105

பிறங்கு மாலாவா யகத்துளெம் பிரானரு ளால்வந்
தறங்கொ டீர்த்தமா யெழுகட லமர்ந்தவா நோக்கிக்
கறங்கு தெண்டிரைப் பெரும்புறக் கடலும்வந் திவ்வூர்ப்
புறங்கி டந்ததே போன்றது புரிசைசூழ் கிடங்கு. [14]


விளக்கம் --105

சிறப்புமிக்க மதுரை மாநகரை தன்னுடைய இல்லமாக கொண்ட எம்பிரானாகிய சிவபெருமானின் அருளால் --நன்மைகளை அளிக்கும் தீர்த்தமாக --ஏழு கடலும் வந்து --அமைந்ததைப்பார்த்து ---

தூரத்தில் உள்ள ஓசை எழுப்புகின்ற தெளிந்த அலைகளை உடைய  பெரிய கடலானதும்   --இங்குவந்து ,இந்த ஊரின் வெளியே  தங்கிவிட்டதோ என்று எண்ணும்படி உள்ளது ----

இந்த மதுரையின் கோட்டைச்சுவரை சூழ்ந்துள்ள அகழி .

            ***************************************************--------------14

பாடல் --106


எறியும் வாளையு மடிக்கடி யெழுந்துடல் பரப்பிப்
பறியு மாமையும் வாளொடு கேடகம் பற்றிச்
செறியு நாண்மல ரகழியுஞ் சேண்டொடு புரிசைப்
பொறியு மேயன்றி   யுடன்றுபோர் புரிவது                                                                                                       போலும். [15]
விளக்கம் --106

பலவகை மலர்களால் நிரப்பப்பட்ட அகழியில் -- துள்ளிக்குதிக்கும் வாளைமீனையும்  ,அடிக்கடி மேலே வந்து உடலை பரப்பி அலையும் ஆமையையும் பார்க்கும் பொழுது  ----
-வானுயர்ந்து காணப்படும் கோட்டைச்சுவரில் உள்ள பொறிகளுடன்  -----------இந்த அகழியும்  இணைந்து 
---வாளோடு கேடயத்தையும் கையில் வைத்துக்கொண்டு -----
---பகைவர்களுடன் போர்புரிகின்றனவோ என்று எண்ணும்படி உள்ளது .

   ******************************************************----------------15
பாடல் --107


கண்ணி லாதவெங் கூற்றெனக் கராங்கிடந் தலைப்ப
மண்ணி னாரெவ ரேனுமிம் மடுவிடை வீழ்ந்தோர்
தெண்ணி லாமதி மிலைந்தவர்க் கொப்பெனச் சிலரை
எண்ணி னாரிரு ணரகநீத் தேறினு மேறார். [16]
விளக்கம் --107


பாரபட்சம் பாராது உயிர்களை எடுத்துச்செல்லும் எமதர்மராஜனைப்போன்றுமுதலைகள் அங்குமிங்கும் அலையும்
அகழியில் இந்த மண்ணுலகில் வாழும் எவரேனும் விழுந்தால்  -----

தெளிந்த ஒளியை உடைய நிலவை தன் சடைமீது கொண்ட சிவபெருமானுக்கு சமமானவர் என்று பிற தெய்வங்களை நினைப்பவர்கள் வீழும் நரகத்திலிருந்து ,அவர்கள் மீண்டாலும் மீளுவார்கள் ---

ஆனால் இந்த அகழியில் வீழ்பவர்கள் மீளமாட்டார்கள் .

   **************************************************---------------16
பாடல் --108

குமிழ லர்ந்தசெந் தாமரைக் கொடிமுகிழ் கோங்கின்
உமிழ்த ரும்பர ஞானமுண் டுமிழ்ந்தவாய் வேதத்
தமிழ றிந்துவை திகமுடன் சைவமு நிறுத்தும்
அமிழ்த வெண்டிரை வையையு மொருபுறத் தகழாம். [17]


விளக்கம் --108

பொய்கையில்     நீர்க்குமிழிகள்  செழிப்பாக காணப்படும்   செந்தாமரைக்கொடியில்  அரும்பிய மொட்டுப்போன்ற ---- ஸ்தனத்திலிருந்து [மார்பகம்]உமிழப்பட்ட  பெறுதற்கரிய அருமையான பரம்பொருளின்  ஞானப்பாலை உண்டு ---- 

அதனால் சிவஞானம் அடையப்பெற்ற 'திருஞான சம்பந்தரின் 'திருவாயால் --

வேதத்தை நிகர்த்த   பழமையான தமிழால் -வேதநெறியும் ,சைவநெறியும் நிலைத்து நிற்கும்படி அருளப்பட்ட மதுரைமாநகருக்கு அருகில்  ஓடும் ---

வெண்மையான நுரையை உடைய அலைகளையும் அமிர்தம் போன்ற சுவையையும் உடைய நீரையும் கொண்ட 'வையை 'நதி அந்நகரின் ஒரு பக்கத்திற்கு அகழி ஆக  விளங்குகின்றது .

         ***************************************************-------------17
பாடல் --109


பிள்ளை யும்பெடை யன்னமுஞ் சேவலும் பிரியாக்
கள்ள முண்டகச் செவ்வியாற் கண்வர் கண்ணும்
உள்ள முந்திரும் பாவகை சிறைப்படுத் தோங்கும்
புள்ள லம்புதண் கிடங்கிது புரிசையைப் புகல்வாம்.  [18]
விளக்கம் --109

குஞ்சுகளும் ,பெண் அன்னங்களும் ,அதன் ஆண் துணையும் பிரியாமல் ஒன்றாக இருப்பதையும் ---

இனிய தேனை உடைய தாமரைகள் நிறைந்து விளங்குவதையும் ,பார்ப்பவர்களின்  கண்களும் உள்ளமும் --அதைவிட்டு திரும்பமுடியாமல் தவிக்கும் ------

பறவைகள் ஒலிசெய்யும் குளிர்ந்த நீரையுடைய அகழியின் அடுத்துள்ள கோட்டை மதிலைப்பற்றி இனி பேசலாம்  .
  
            *********************************************************-------------18
பாடல் --110

மாக முந்திய கடிமதின் மதுரைநா யகர்கைந்
நாக மென்பதே தேற்றமந் நகர்மதில் விழுங்கி
மேக நின்றசை கின்றதவ் வெஞ்சினப் பணிதன்
ஆக மொன்றுதோ லுரிபட நெளிவதே யாகும்.  [19]


விளக்கம் --110


வானுலகத்தை ஊடுருவிச்செல்லும் அளவுக்கு உயர்ந்து விளங்கும் --காவல் மிகுதியாக உள்ள கோட்டை மதில்சுவரானது ----

மதுரையின் நாயகராம் எம்பிரானின் கையிலுள்ள 'நாகம் ' என்பதே உண்மை  .

அந்த மதில் சுவரை  விழுங்குவது போல தவழ்ந்து செல்லும் மேகம் --அங்குமிங்கும் அசைவது ---

கொடும் சினத்தை உடைய  அந்த நாகமானது --தன் உடலோடு ஒட்டியிருந்த தோல் --உறிவதன் பொருட்டு நெளிவதைப்போல இருக்கின்றது .

       ***************************************************----------------19
பாடல் --111

புரங்க டந்தபொற் குன்றுகோ புரமெனச் சுருதிச்
சிரங்க டந்தவர் தென்னரா யிருந்தனர் திருந்தார்
உரங்க டந்திட வேண்டினு முதவிசெய் தவரால்
வரங்க டந்திடப் பெறவெதிர் நிற்பது மானும். [20]


விளக்கம் --111

திரிபுரத்தை வெல்வதற்கு வில்லாக இருந்த 'மேருமலையானது '--கோபுரம் போல மாறி ---

வேதங்களின் தலைபோல விளங்கும் 'சுருதி'யையும் கடந்த இறைவன் [அதாவது வேதங்களாலும் அறியமுடியாத --என்று அர்த்தம் ]----

பாண்டியநாட்டின் அரசராக இருக்கும்போது --அவரை அறிந்து திருந்தாத பகைவர்களின் ஆணவத்தை அடக்குவதற்காக ------

அவருக்கு தேவைப்படும் உதவியை செய்து --அவரிடம் வரங்களைப்பெறலாம் என்ற எண்ணத்தினால் ---

அவர் கண்களில் படும்படி --கோட்டையின் வாயிலின் மீது --நிற்பதை பாருங்கள் .

*******************************************************----------------------20



                                                                                         பொருள்எழுதியவர் 
                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

Friday, October 14, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 11


MEENATCHI AMMAN TEMPLE--MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                     மதுரைக் காண்டம் 







                               திருநகரச்   சிறப்பு --பகுதி 1

பாடல் --92



மங்க லம்புனை பாண்டிநா டாகிய மகட்குச்
சங்க லம்புகை தோளிணை தடமுலை யாதி
அங்க மாம்புறந் தழுவிய நகரெலா மனைய
நங்கை மாமுக மாகிய நகர்வளம் பகர்வாம்.
1

விளக்கம் --92

மங்கலங்கள் நிறைந்த ' பாண்டியநாடு ' என்னும் பெண்மகளுடைய --வளையல்கள் ஒலிசெய்யும்  கைகளாகவும் ,தோள்களாகவும் ,பெரிய மார்பகங்கள் --ஆகிய அங்கங்களாக --சுற்றியுள்ள நகரெங்களெல்லாம் விளங்க ----

அந்த பருவப்பெண்ணின் அழகிய முகமாக விளங்கும் 'மதுரை மாநகரின் 'வளத்தைப்பற்றி கூறுகின்றேன் .

        ********************************************************------------1
பாடல் --93

கொங்கை யேபரங் குன்றமுங் கொடுங்குன்றுங் கொப்பூழ்
அங்க மேதிருச் சுழியலவ் வயிறுகுற் றாலஞ்
செங்கை யேடக மேனியே பூவணந் திரடோள்
பொங்கர் வேய்வனந் திருமுக மதுரையாம் புரமே.   [2]


விளக்கம் --93

மார்பகங்கள் ---திருப்பரங்குன்றமும்  ,கொடுங்குன்றமும் [பிரான்மலை ]ஆகும் ----

தொப்பூழ்  என்னும் அங்கம் தான் --திருச்சுழியல் 

அழகிய வயிறு ----குற்றாலம் 

சிவந்த கைகள் ----திருவேடகம் 

அழகிய உடல் ----பூவணம் 

திரண்ட தோள்கள் ------சோலைகள் சூழ்ந்த வேணுவனம் 

திருமுகம் -----மதுரை என்னும் நகர்தான் 


                   *********************************************-----------------------2
பாடல் --94

வடுவின் மாநில மடந்தைமார் பிடைக்கிடந் திமைக்கப்
படுவி லாரமே பாண்டிநா டாரமேற் பக்கத்
திடுவின் மாமணி யதன்புற நகரெலா மிவற்றுள்
நடுவி னாயக மாமணி மதுரைமா நகரம்.    [3]


விளக்கம் ---94

குற்றமில்லாது,   பெரிதாக  பரந்து விரிந்திருக்கும் நிலமகளின் மார்பின் நடுவில் அழகுற  இருக்குமாறு அமைக்கப்பட்ட' பொன்மாலை ' தான் 'பாண்டியநாடு '----

ஆரத்தின் மேல் பதிக்கப்பட்ட பலவிதமான  சிறந்த மாணிக்கற்கள்தான் --அந்நாட்டிலுள்ள புறநகரங்கள் எல்லாம் ---

இவற்றுள் நடுநாயகமாக அமைக்கப்பட்ட சிறப்புப்பெற்ற மணிதான் --'மதுரைமாநகரம் '

              ************************************************------------------------3
பாடல் --95

திரும கட்கொரு தாமரைக் கூடமே திருால்
மரும கட்குவெண் டாமரை மாடமே ஞானந்
தரும கட்கியோ கத்தனிப் பீடமே தரையாம்
பெரும கட்கணி திலகமே யானதிப் பேரூர்.  [4]


விளக்கம் --95

திருமகளாம் லட்சுமிதேவிக்கு, அவள் வாழும் தாமரைக்கூடம் [தாமரை இல்லம் ]ஆகவும்----

திருமாலின் மருமகளாம் கலைமகளுக்கு 'வெந்தாமரை மாளிகை 'ஆகவும் --

ஞானத்தை தரும் மலைமகளுக்கு 'ஞானப்பீடம் '-ஆகவும்--

நிலமகளுக்கோ ,அவள் அணியும் திலகம் ---ஆகவும்---

விளங்குகின்றது இந்த சிறப்புமிக்க பெரிய ஊர் .

                           ************************************************------------------4
பாடல் --96

திக்கும் வானமும் புதையிரு டின்றுவெண் சோதி
கக்கு மாளிகை நிவப்புறு காட்சியந் நகருள்
மிக்க வாலிதழ்த் தாமரை வெண்மக ளிருக்கை
ஒக்கு மல்லது புகழ்மக ளிருக்கையு மொக்கும்.  [5]


விளக்கம் --96

திசைகளையும் ஆகாயத்தையும் தன்னுள் புதைக்கும் இருளை --தின்று --வெண்மையான ஒளியை கக்கும் மாளிகைகள் நிறைந்த அந்த நகரின்  அழகிய வியப்பையளிக்கும் காட்சியானது ---

பெரிய இதழ்களை உடைய  கலைமகளின் இருப்பிடமான  வெண்மையானதாமரை போல் காட்சியளிக்கின்றது ----

அதுமட்டுமல்லாது ,புகழ் மகளின் இருப்பிடத்தைப்போலவும் உள்ளது .
            
                      *************************************************-------------------5
பாடல் --97

நெற்க ரும்பெனக் கரும்பெலா நெடுங்கழு கென்ன
வர்க்க வான்கமு கொலிகலித் தெங்கென வளர்ந்த
பொற்க வின்குலைத் தெங்குகார்ப் பந்தரைப் பொறுத்து
நிற்க நாட்டிய காலென நிவந்ததண் பணையே. [6]


விளக்கம் ---97

 நெற்பயிர்கள் எல்லாம் கரும்புபோல செழித்துவளர்ந்துள்ளன ----

கரும்புப்பயிர்கள்  எல்லாம் பாக்குமரம் போல தடித்து செழித்து வளர்ந்துள்ளன --

பாக்குமரங்கள் எல்லாம் அதைவிட தடிமனான தென்னை மரம் போல செழித்து உயர்ந்து வளர்ந்து காணப்படுகின்றது ---

பொன்போன்ற காய்கள் குலைகுலையாக காணப்படுகின்ற தென்னை மரங்களோ , வானத்தில் பந்தல் போல சூழ்ந்து காணப்படுகின்ற கரிய மழை மேகங்களுக்கு --அதைத்தாங்குகின்ற 'பந்தல் கால்களோ 'என்று என்னும்படி உயர்ந்து செழித்து காணப்படுகின்றது ---

இவ்வாறு செழித்து குளியர்ச்சியாக காணப்படுகின்றது இந்த நகரைச்சுற்றியுள்ள --'மருதநிலங்கள் '.

                   *******************************************************-----------------6
பாடல் --98

சிவந்த வாய்க்கருங் கயற்கணாள் வலாரியைச் சீறிக்
கவர்ந்த வான்றருக் குலங்களே கடிமணம் வீசி
உவந்து வேறுபல் பலங்களும் வேண்டினர்க் குதவி
நிவந்த காட்சியே போன்றது நிழன்மலர்ச் சோலை[7].


விளக்கம் ---98


சிவந்த வாயையும் ,கரிய நிறத்தில் மீனைப்போன்ற வடிவத்தில் உள்ள அழகிய கண்களை உடைய 'தடாதகைப்பிராட்டியார்  '---

இந்திரனை வென்று கொண்டுவந்த ஐந்துவகை தேவலோகத்து மரங்கள் [சந்தனம் ,அரிசந்தனம் ,மந்தாரம் ,பாரிஜாதம் ,கற்பகம் ]----

மிகுதியான மணத்தினை பரப்பி --மேலும், தன்னிடம் வேண்டுபவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியோடு தானே முன்வந்து  --அவர்கள் கேட்கும் பல நல்லபயனுள்ளவற்றை கொடுத்து உதவிய --காட்சியைப்போன்று உள்ளது ---

அந்நகரில்  ---குளிந்த நிழலை வழங்கிக் கொண்டிருந்த ---அழகிய மலர்கள் நிறைந்த சோலைகள் .

              ******************************************************------------------------7
பாடல் --99

ஒல்லொ  லிக்கதிர்ச் சாவிகள் புறந்தழீஇ   யோங்க 
மெல்லி   லைப்பசுங்  கொடியினால் வீக்குறு பூகம் 
அல்லெ  னும்களத தண்ணற  னணி
விழாத்   தருப்பைப்                                            

புல்லொ   டும்பிணிப்  புண்ட பொற்  கொடிமரம்   போலும்.          [8]                                     
விளக்கம் --99

ஓல் என்ற ஒலியுடன் இசைபாடிக்கொண்டிருக்கும் ,வளர்ந்துமுற்றிய நெற்பயிர்களை  சுற்றி ,புறத்தே அமைந்திருந்த [வேலிபோல் ]--மெல்லிய வெற்றிலை கொடியால் சுற்றப்பட்டிருந்த ---ஓங்கிவளர்ந்திருந்த பாக்குமரமானது ---

நடனம் ஆடுவதை தன்னுடையதாக  கொண்டுள்ள அண்ணலின் [மற்றோர்  அர்த்தம் ---உயிர்களின் துன்பங்களை களைந்தெறியும் இரக்கம் மிகுந்தவரான  அண்ணல் ]--திருவிழாவில் --

தருப்பை புல்லினால் சுற்றப்பட்டு விளங்கும் கொடிமரம் போல உள்ளது .

                    *************************************************---------------------8


பாடல் --100


சீத வேரியுண் டளிமுரல் கமலமேற் செருந்தி
போத வேரியு மலர்களுஞ் சொரிவன புத்தேள்
வேத வேதியர் செங்கரம் விரித்துவாள் மனுக்கள்
ஓத வேமமும் உதகமும் உதவுவா ரனைய.   [9]
விளக்கம் --100

குளிர்ச்சியான தேனை பருகியதால் மகிழ்வுற்ற வண்டுகள் --அந்த தேனை தனக்கு அளித்த தாமரை மலரின் மீது மகிழ்வுடன் ஒலியெழுப்பியபடி இருக்கின்றன ---

அந்த தாமரை மலரின்மீது 'செருந்தி மரங்கள் 'மலர்களையும் தேனையும் சொரிகின்றன ----

இந்த காட்சியானது --

என்றும் புதுமையுடன் விளங்கும் வேதத்தை நன்கு கற்றுணர்ந்த அந்தணர்கள் ,தங்களுடைய சிவந்தகைகளை விரித்து ,வாயினால் மந்திரங்களை சொல்லிக்கொண்டே  --பொருளையும் ,நீரையும் பிறருக்கு தானமாக கொடுக்கும் காட்சியைப்போன்று தோற்றமளிக்கின்றது .
  
              *************************************************-----------9
பாடல் --101

விரைசெய் பங்கயச் சேக்கைமேற் பெடையொடு மேவி
அரச வன்னநன் மணஞ்செய வம்புயப் பொய்கை
திரைவ ளைக்கையா னுண்டுளி செறிந்தபா சடையாம்
மகர தக்கலத் தரளநீ ராசனம்  வளைப்ப.    [10]


விளக்கம் --101

நறுமணம் வீசுகின்ற தாமரை மலரென்னும் இருக்கையில் 'அரச அண்ணங்கள் 'தன்னுடைய பெண் இணையுடன் கூடி திருமணம் செய்யும் மணமக்கள் போல வீற்றுருக்க ----

தாமரை மலர்கள் நிறைந்து காணப்படும் அந்த குளமானது  [பொய்கை ] --சங்குகள் வளையல் போல விளங்கும் அலையாகிய தன்னுடைய கைகளால் ----

நுண்ணிய நீர்த்துளிகள் முத்துக்கள் போல நிறைந்துள்ள பசுமையான மரகதத்தட்டு போன்று  காட்சியளிக்கும் தாமரை இலைகளை கொண்டு -- ஆரத்தி எடுப்பதுபோல அசைந்து கொண்டிருக்கின்றன .

********************************************************---------10



                                                                                      பொருள்எழுதியவர் 
                                                                                       DR.S.வீரம்மா தேவி .MBBS