JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Sunday, April 22, 2018

திருவிளையாடல் புராணம்----பகுதி 25

திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                               மதுரைக் காண்டம்



                                            
                              தல  விசேடப்  படலம் 

                                        பகுதி --1
பாடல்  233  


நாட்டம் ஒரு மூன்று உடைய நாயகனுக்கு அன்பு
                                    உடையீர் நயந்து நீவிர் 
கேட்ட தலம் ஈண்டு உரைத்த திருவால வாய்
                           அதனுள் கிளைத்துப் பொன்னம் 
தோட்டலர் தாமரை முளைத்த தொரு தடமும் சுந்தரச்
                                    செம் சோதி ஞான 
ஈட்டம் என முளைத்த சிவலிங்கம் ஒன்று உள 
                           இன்னும் இசைப்பக் கேண்மின்---------------------------1




விளக்கம் 233

         கண்கள்  ஒரு மூன்று உடைய நாயகனிடம் {சிவபெருமானிடம் } அன்புடைய  நீங்கள் ---விரும்பி கேட்ட இடம் ---இப்போது  நான் கூறிய "திருஆலவாய் "---

     அந்த   இடத்தில்  பொன்னைப்போல ஒளிரும் இதழ்களுடன்  செழித்து  வளர்ந்த தாமரை மலர்கள்   நிறைந்திருந்த  ஒரு    குளமும் ---

""அழகான   சிவந்த ஜோதியான" ஞான ஒளி" --யைப்போன்று  --தானே முளைத்த  "சிவலிங்கம் " ஒன்றும்  உள்ளது --

இன்னும் -கேட்க  இனிமையான இசையைப்போல் இருக்கும் --இதன்  சரிதத்தை  சொல்கிறேன்  --தயை கூர்ந்து  கேளுங்கள் .

*******************************************************************************
                 

பாடல்  234

திருவால வாய்க்கு இணையா ஒருதலமும் தெய்வ
                                    மணம் செய்ய பூத்த 
மருவார் பொன் கமல நிகர் தீர்த்தமும் அத்
                           தீர்த்தத்தின் மருங்கின் ஞான 
உருவாகி உறை சோம சுந்தரன் போல் இகபரம் 
                                 தந்து உலவா வீடு 
தருவானும் முப்புவனத் தினும் இல்லை உண்மை 
                                    இது சாற்றின் மன்னோ.





விளக்கம் 234

"திரு ஆலவாய்க்கு ' இணையான ஒரு திருத்தலமும் --

தெய்வமணம்  நிறைந்து வீச பூத்து நிற்கும் பொன்னிறமான  தாமரை மலர்கள் நிறைந்த  குளமும் --

அந்த குளத்தின் அருகில் --ஒரு பக்கத்தில் --ஞானத்தின் உருவமாக வீற்றிருக்கும் "சோமசுந்தர பெருமான் "--போல --

இந்த உலகத்தின் சுகம் ,மேலுலகத்தின் சுகம் --ஆகியவற்றை  தந்து --
மேலும் "மீண்டும்  பிறவா தன்மையாகிய --முக்தியையும் "தருபவன் --

மூன்று  உலகத்திலும் யாரும் இல்லை ---

இது உண்மை  என்று ஆணித்தரமாக சொல்லுகின்றேன் --நம்புங்கள் .

******************************************************************************


பாடல்  235

அவ்வகைய மூன்றின் முதல் தலப் பெருமை தனைச் 
                           சுருக்கி அறையக் கேண்மின் 
எவ்வகைய உலகத்தும் தருமதலம் அதிகம் அவற்று 
                                                   ஈறு இலாத 
சைவ தலம் அதிகம் அவற்று அறுபத்து எட்டு அதிகம் 
                                    அவை தமில் ஈர் எட்டு 
தெய்வ தலம் அதிகம் அவற்று அதிக தல நான்கு 
                           அவற்றைச் செப்பக் கேண்மின்



விளக்கம் 235

அந்த  மூன்றில் --முதலில்  இடத்தின் பெருமையை  சுருக்கமாக கூறுகின்றேன் --கேளுங்கள் --
பல வகைப்பட்ட  இடங்களை  உடைய இந்த உலகத்தில் --புண்ணிய தலங்கள் --உயர்ந்தவை --
அவற்றுள் ஈடுஇணையற்ற சைவத்தலங்கள்  உயர்ந்தவை --
அந்த சைவத்தலங்களுக்குள்  68 உயர்ந்தவை ---
அவற்றுள்  16 தெய்வத்தலங்கள் உயர்ந்தவை --
அவற்றுள் அதிக சிறப்புவாய்ந்தவை  4 தலங்கள் ஆகும் --
அவற்றை கூறுகின்றேன் கேளுங்கள் --

பாடல்  236

அன்னமலி வயல் புலியூர் காசி நகர் காளத்தி ஆல 
                                                      வாயாம் 
இன்ன வளம் பதினான்கில் திரு வால வாய் அதிகம் 
                                             எவ்வாறு என்னின் 
மின்னவிர் அம்பலம் காணக் காசிநகர் வதிந்து இறக்க 
                                             வியன் காளத்திப் 
பொன் நகரம் பத்தியினால் வழிபாடு செய அளிக்கும் 
                                             போகம் வீடு.




விளக்கம் 236

அன்னங்கள்  நிறைந்த வயல்களை  உடைய  "சிதம்பரம் ","காசிநகரம் "'காளத்தி ""ஆலவாய் "--ஆகிய  இவை நான்கும் தான் ஆகும் .
இந்த வளம்மிக்க திருத்தலங்களாகிய நான்கில் ---"திருஆலவாய் "தான் உயர்ந்தது ---

எப்படி என்றால் --
மின்னலைப்போல் ஒளிர்கின்ற அம்பலத்தையுடைய "சிதம்பரம் "காண்பதினாலேயும் ---
"காசிநகர் "அங்கு சென்று இறப்பதினாலேயும் --
"வியப்பிற்குரிய காளத்தி என்ற பொன்னகரம்  "பக்தியுடன் வழிபடுவதினாலேயும் ---

இந்த உலகத்திற்குண்டான இன்பங்களையும் --மறு உலகத்தின் முக்தியையும் --அளிக்கும் .

*********************************************************************************

பாடல்  237



அறம் தழையும் திருவால வாய் கேட்டவுடன் போகம்
                                             அளிக்கும் ஈண்டு
பிறந்து இறவாப் பேர் இன்பக் கதியளிக்கும் இது அன்றிப்
                                             பிறழாதெங்கும்
நிறைந்தபரன் எத்தலமும் படைப்பான் இத்தலத்தை முதன்
                                             நிருமித்து இங்ஙன்
உறைந்த தருளினான் அன்றி இன்னம் உளது இதன்
                                    பெருமை உரைப்பக் கேண்மின்.


விளக்கம் 237

அறங்கள்  சிறந்து  வளர்ந்து கொண்டிருக்கும் "திரு ஆலவாய் " --பெயரை கேட்டவுடன் எல்லா இன்பங்களையும் அளிக்கும் --

மேலும் "பிறந்து இறக்கும் " தன்மையிலிருந்து விடுவித்து "முக்தி "என்ற இன்பநிலையை  கொடுக்கும் ---

இது மட்டுமல்லாமல் --சிறு இடத்தையும் விடாமல் ,எங்கும் நிறைந்துள்ள "பரம்பொருள் "---மற்ற இடங்களை படைக்கும்முன் --இந்த இடத்தை முதலில் படைத்து ,நிலைநிறுத்தி --இந்த இடத்தில் வந்து நிலையாக தங்கியிருந்து  --தன் கருணையை அனைத்துயிர்களுக்கும் வழங்கிக்கொண்டிருக்கின்றான் ----

இதன் பெருமை இன்னும் உள்ளது --அதையும் சொல்லுகின்றேன் ,கேளுங்கள் .

********************************************************************************



பாடல்  238

திருவால வாய் என்று கேட்டவரே அறம் பெறுவர் 
                                             செல்வம் ஓங்கும் 
திருவால வாய் என்று நினைத்தவரே பொருள் அடைவர்
                                                  தேவ தேவைத் 
திருவால வாயிடத்துக் கண்டவரே இன்ப நலம் சேர்வர்
                                                            என்றும் 
திருவால வாயிடத்து வதிந்தவரே வீட்டு நெறி சேர்வர்
                                                            அன்றே.


விளக்கம் 238

"திரு ஆலவாய் "என்ற பெயரை பிறர்  சொல்ல கேட்பவர்கள் --தருமத்தை செய்தவர்கள் ஆவார்கள் --அவர்களின்  செல்வம் வளர்ந்துகொண்டிருக்கும் --

"திரு ஆலவாய் "என்று நினைக்கின்றவர்கள் --தான் விரும்பும் பொருள்களை  அடைவார்கள் --

தேவர்களுக்கு எல்லாம் தலைவனான  இறைவன்  உறையும் "திரு ஆலவாயை "நேரில் தரிசித்தவர்கள் தான் --இன்பங்களை அனைத்தும் பெற்று நலம் பெறுவார்கள் --

எப்பொழுதும் "திரு ஆலவாயில் "வசிப்பவர்கள் --முக்தியை  அடைவார்கள் --இதை மாற்றம் இல்லை .

*********************************************************************************
பாடல்  239


சுர நதி சூழ் காசிமுதல் பதிமறுமைக்கு கதி அளிக்கும்
                                                 தூநீர் வைகை 
வரநதி சூழ் திருவால வாய் சீவன் முத்தி தரும்
                                             வதிவோர்க்கு ஈது 
திரன் அதிகம் பரகதியும் பின்கொடுக்கும் ஆதலின்
                                             இச் சீவன் முத்தி 
புரன் அதிகம் என்பது எவன் அதற்கு அதுவே ஒப்பாம்
                                             எப் புவனத்து உள்ளும்.




விளக்கம் 239

வானுலகிலிருந்து  வந்திறங்கிய "சுரநதியாகிய --கங்கை "நதி சூழ  இருக்கும் "காசி  " எனும் சிறந்த திருத்தலம் --நாம் இறந்த பின் நமக்கு முக்தியை  அளிக்கும் --

தூய்மையான நீரை உடைய "வைகை "எனும் வரம் தரும் நதி சூழ உள்ள "திரு ஆலவாய் "--இங்கு வசிப்பவர்களுக்கு --வாழும் காலத்திலேயே "ஜீவன்  முக்தியை" கொடுக்கும் சக்தி அதிகம் -----இறந்த பின் "பிறவா முக்தியையும் "கொடுக்கும் --

ஆதலால் --வாழும்போதே "ஜீவன் முக்தியை "தரும் தன்மை அதிகம் ஆதலால் --இந்த தலத்திற்கு இத்தலமே  சமம் ஆகும் --

எல்லா  உலகத்திலும் -- இதற்கு இணையாக உள்ள தலம் --இல்லை 

*********************************************************************************

பாடல்  240

ஆதலின் இப் பதி விட்டு பிற பதியில் போய்
                           நோற்போர் அங்கை கொண்ட 
சீதள வானமும் தேய்ப்பத் தித்திக்கத் தேம் பெய்து 
                                             செய்த தீம் பால் 
ஓதனத்தைக் கைவிட்டுப் புறம் கையை நக்குவார் 
                                             ஒப்பார் இந்த 
மாதலத்தின் பெருமைதனை யாவரே அளவிட்டு 
                                             வழுத்தற் பாலார்





விளக்கம் 240

அதனால் --இத்தகைய சிறப்பு பெற்ற --இத்தலத்தை  விட்டு விட்டு --வேறு  தலத்திற்கு  சென்று தவம் செய்பவர்கள் ---

அவர்களின்  உள்ளங்கையில்  வைக்கப்பெற்ற --உடலுக்கு நலம் தர வல்ல --இனிய தேனும் பாலும் கலந்த "பால் சோற்றை "--விட்டு விட்டு --

தன்னுடைய புறங்கையை நக்குபவர்களுக்கு --சமமாவார்கள் .

இந்த  உயர்வுபெற்ற தலத்தின் பெருமையை யார்தான் அளவிட்டு சொல்ல முடியும் .---ஒருவராலும் முடியாது .

*********************************************************************************



பாடல்  241

மற்றைய தலங்கள் தம்மில் பரிமகம் வாச பேயம் 
அற்றம் இல் சோடசாக அக்கினி இட்டு ஓமம் யார்க்கும் 
முற்றரும் இராச சூய முதன் மக முடித்த பேறும் 
செற்றம் இற ரிச பூர்ண முதல் இட்டி செய்த பேறும்.




விளக்கம் 241

மற்ற பிற தலங்களில் --செய்யப்பெற்ற --அசுவமேதம் ,வாசபேயம் ,குற்றம் இல்லாத "சோடசாகம் ",அக்கினி ஹோமம் ---
யாரும் செய்வதற்கு சிரமமான "இராசசூய யாகம் "--முதலிய யாகங்கள் தரும் பலனும் ----

குற்றம் இல்லாத பரிபூரணமான பூசை ,வேள்வி --முதல் --தானம் வரை செய்யப்பெற்றதால்  வரும் பலனும் -------

*****************************************************************************

பாடல்  242

எள் இழுது அன்னம் கன்னி இவுளி தேர் யானை 
                                                      இல்லம் 
வெள்ளியான் பொன் பூண் ஆடை விளைவொடு
                                             பழனம் உன்னாத் 
தள்ளரும் அடிமை ஆதி தானங்கள் செய்த பேறும் 
வள்ளறன் காசி ஆதிப் பதிகளில் வதிந்த பேறும்.





விளக்கம் 242


எள்,நெய் ,அன்னம்  ,கன்னிப்பெண் ,குதிரை ,தேர் ,யானை ,இல்லம் ,வெள்ளி ,பசு ,பொன் ,அணிகலன் ,ஆடை ,நன்கு விளைந்த விளைநிலம் ,என்றும் நம்மைவிட்டு நீங்காமல் நமக்கு பணிவிடை செய்யும் பணியாள் --முதலிய தானங்கள் தருவதால் உண்டாகும் நற்பலனும் ---
கேட்டததை எல்லாம் கொடுக்கும் வள்ளலாகிய "சிவபிரான் "வாழும் காசி  முதலிய சிறப்புப்பெற்ற இடங்களில் வாழுவதால் உண்டாகும் நற்பலனும் --

********************************************************************************* பாடல்  243

கங்கை காளிந்தி வாணி காவிரி கண்ண வேணி 
துங்க பத்திரை தீம் பாலி தூய தன் பொருநை 
                                                      முன்னாச் 
சங்கையில் நதிகள் முற்றும் ஆடிய தவத்தின் பேறும் 
மங்கல மதுரை தன்னில் வைகலும் வதிவோர்க்கு 
                                                      எய்தும்.




விளக்கம் 243

கங்கை ,காளிந்தி ,சரஸ்வதி ,காவிரி ,கிருஷ்ணை ,துங்கபத்திரை ,சுவைநிறைந்த பால் போன்று தித்திக்கும் தூய்மையான  பொருநை ---முதலிய  நதிகள் போன்று அளவில்லாத நதிகளில் முழுகி --தவம் செய்வதால் வரும் --நற்பயனும் --

மங்களம் நிறைந்த மதுரையில் --நாள்தோறும் வசிப்பவர்களுக்கு உண்டாகும்  .



                                                                               பொருள்எழுதியவர் 

                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS

***************************************************************************************************************************************************************************************************************************************************

Saturday, April 14, 2018

திருவிளையாடல் புராணம்----பகுதி 24

திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                               மதுரைக் காண்டம்



                                                 புராண வரலாறு 


                                        பகுதி 2





பாடல் --219


என்ற போது எதிர் முகம் மலர்ந்து இருள் மல வலியை
வென்ற சூதனும் தலங்களின் விசேடமாய்ந்து தம்பொன்
குன்ற வார் சிலை யானிடம் கொண்டு உறை பதியுள்
ஒன்று கேட்க வீடு அளிப்பதாய் உளது மற்று அதுதான்.-------(12)

விளக்கம்--219

அப்படி அவர்கள் கேட்ட உடனே --அவரின் முகம் மலர்ந்து விட்டது .
அந்த முகமலர்ச்சியுடனே --ஆணவம் என்ற இருளை மிகுந்த முயற்ச்சியுடன்  வென்ற 'சூத மாமுனியும் '--

பல திருத்தலங்களின்  சிறப்புகளை  ஆராய்ந்து ---

அழகிய பொன் குன்றாகிய -நீண்ட வில்லினை உடைய இறைவன் 
- தான் இருப்பதற்கு ஏற்ற இடம்  என்று கருதி வந்து தங்கியிருக்கும்  இடங்களுள் --

பெயரை கேட்டவுடனே முக்தியை அளிக்க வல்ல இடம் ஒன்று உள்ளது --

மற்றவை எல்லாம் அதற்கு பின்தான் .
*********************************************************************************
பாடல் --220

முற்ற ஓதிய புராணம் மூ ஆறினுன் காந்தம்
பெற்ற ஆறு சங்கிதை அவை ஆறும் தம் பெயரால்
சொற்ற பேர் சனற் குமர மா முனிவன் சூதன்
கற்றை வார் சடைச் சங்கரன் மால் அயன் கதிரோன்.--------(13)
விளக்கம்--220

படிப்பதற்கு தகுதியான முழுமையான நூல்களாகிய  பதினெட்டு புராணங்களில் ---கந்த புராணமானது  ஆறு சங்கிதைகளை கொண்டது --
அந்த ஆறையும் -தங்கள் பெயரால் சொன்னவர்கள் 

 பெருமை மிக்க சனற்குமாரர் ---சூத மாமுனிவர் --அடர்த்தியான நீண்ட சடையை உடைய சங்கரர் ---திருமால் ---பிரமன் ---சூரியன் .

*******************************************************************************
பாடல் --221


இன்ன ஆறனுள் சங்கர சங்கிதை என்று
சொன்ன நூலினை உணர்த்தினான் சங்கரன்                                                    துணைவிக்கு
அன்ன போது அவள் மடியினில் இருந்து கேட்டு                                                    அதனை
மின்னு வேல் பணி கொண்ட வேள் வெளிப்பட
                                                   உணந்தான்.--------------------------------------------(14)

விளக்கம்--221

இந்த ஆறு சங்கிதையில் --'சங்கர சங்கிதை " என்னும் நூலை சங்கரன் தன்னுடைய மனைவிக்கு கூறினார் 

அந்த நேரத்தில் அவ்வம்மையாரின் மடியிலிருந்து கேட்ட  --ஒளிவீசுகின்ற "வேலை"தாங்கி மக்களை காப்பாற்றும் பணியை ஏற்றுக்கொண்ட "குமரவேள் "---அந்த நூலின் உட்பொருளை தெளிவாக புரிந்துணர்ந்து  கொண்டார் .
*********************************************************************************  
பாடல் --222


குன்று எறிந்த வேள் வழிபடு குறு முனிக்கு உரைத்தான்
அன்று தொட்டு அஃது அகத்திய சங்கிதை ஆகி
நின்ற தன்னது கேட்பவர்க்கு அரன் அடி நீழல்
ஒன்றும் இன்ப வீடு அளிப்பதா ஒரு தலன் உரைக்கும்.-------(15)


விளக்கம்--222
கிரௌஞ்ச மலையை பிளந்த "குமரவேள் "--தன்னை வழிபட்ட குறுமுனியான "அகத்திய  முனிவருக்கு " அந்நூலை கூறினார் .

அன்றுமுதல் அஃது  "அகத்திய சங்கிதை "என்ற பெயர் பெற்று நிலைபெற்றது --

அந்த நூல்---அதை  கேட்பவர்களுக்கு --இறைவனின் திருவடி நிழலில் ஒன்றி கலக்கும் இன்பமான "முக்தி "யை  அளிக்கவல்ல ஒரு திருத்தலத்தை பற்றி கூறுகின்றது . 

******************************************************
பாடல் --223


அதிக அப்பதியாது எனில் ஆலவாய் கேட்கக்
கதி அளிப்பது என்று ஓதிய சூதனைக் கதியின்
மதியை வைத்தவர் அன்னதைப் பகர் என வந்த
விதியினில் புகல் கின்றனன் வியாதன் மாணாக்கன்.---(16)

விளக்கம்--223

சிறந்த அந்த திருப்பதி எது என்று கேட்டால் --அது தான் "திருவாலவாய் "--பெயரை கேட்ட உடன் "முக்தியை "அளிக்கவல்லதும்  இதுவே --என்று கூறிய  "சூதரை "

வீடுபேற்றின் மீது தங்களின் விருப்பத்தை செலுத்திய அந்த முனிவர்கள் --"அந்த திருப்பதியை  பற்றி கூறுங்கள் "என்று கேட்க --

வழிவழியாக அது எப்படி சொல்லப்பட்டதோ அப்படி சொல்ல ஆரம்பித்தார் --வியாசரின்  மாணாக்கர் .

*********************************************************************************
பாடல் --224

புதிய தாமரை மேவிய பழமறைப் புத்தேள்
விதியினால் கடுநடைப் பரி மகம் செய்வான் வேண்டிக்
கதியை மாய்ந்தவர்க்கு உதவு தண்துறை கெழுகாசிப்
பதியின் மைந்தரோடு எய்தினான் பண்டு ஒரு வைகல்.----(17)



விளக்கம்--224

புதிய தாமரை மலரில் வாழும் --பழமையான வேதங்களை உணர்ந்த "பிரம்மதேவன் "--

அந்த வேதவிதிப்படி --கடுநடையுடைய  துரக வேள்வி {அசுவமேத யாகம் }செய்ய விரும்பி --

இறந்தவர்களுக்கு  நற்கதியை அளிக்கவல்ல --குளிர்ச்சியான நீர்த்துறைகளை கொண்ட "காசித்திருத்தலத்திற்கு "தன் மைந்தர்களோடு ஒரு நாள் காலைப்பொழுது வந்து சேர்ந்தார் 

**********************************************************************************
பாடல் --225

அகத்தியன் வியாதன் நாரதன் சனகன் ஆதி நான்                                 முனிவர் கோதமன்நூல்
சிகைத் தெளி உணர்ந்த பராசரன் வாமதேவன்                                 வான்மீகியே வசிட்டன்
சகத்து இயல் கடந்த சுகன் முதன் முனிவர் தம்                               மொடும் பத்து வெம்பரிமா
மகத் தொழில் முடித்து மற்று அவர்க்கு உள்ள                               மகிழுற வழங்கும் வழங்கா.-----------(18)



விளக்கம்--225

அகத்தியன் ,வியாதரன் ,நாரதன் ,சனகன்  முதலிய நான்கு  முனிவர்,

கௌதமன் ,மறை  நூல்களின்  தலைமை பொருளான இறைவனை உணர்ந்த  பராசரன் ,வாமதேவன் ,வான்மீகி ,வசிட்டன் ,உலகத்தின் இயல்பை கடந்த சுகன் ----முதலிய முனிவர்களுடன் அஸ்வமேத யாகத்தை முடித்து -----அந்த முனிவர்களின்  மனம் மகிழும் வண்ணம் ---கொடுக்க வேண்டியனவற்றை வழங்கி ----
******************************************************
பாடல் --226


த்திய உலகில் சரோருகக் கிழவன் சார்ந்த பின்                                          புலப் பகை சாய்த்த
அத்திரு முனிவர் அனைவரும் காசி அடிகளை                                        அடைந்தனர் பணிந்து
முத்தி மண்டபத்தின் அற முதல் நான்கு மொழிந்த                                   அருள் மூர்த்தி சந்நிதியில்
பத்தியாய் இருந்து நாரத முனியைப் பார்த்து ஒரு                                         வினா வுரைபகர்வார்.-----------------(19)






விளக்கம்--226

தாமரை மலருக்கு  உரியவரான பிரமன் --சத்திய உலகிற்க்கு  சென்ற பின் ---
பகைவர்களான  தன்  புலன்களை வென்ற  அந்த சிறந்த முனிவர்கள் அனைவரும்  --காசி மாநகரை அடைந்தனர் ---
அங்கு முக்தி மண்டபத்தில்  அறம்  முதலான நான்கு உறுதிப்பொருள்களையும் --சனகாதி முனிவர்களுக்கு  --உரைத்தருளிய தட்சிணாமூர்த்தி  சந்நிதியில் பணிந்து வணங்கி பக்தியுடன் அமர்ந்து --நாரதமுனியை பார்த்து --ஒரு கேள்வியை கேட்கத்துவங்கினர் .

******************************************************
பாடல் --227

தலம் முதல் மூன்றும் சிறந்த தோர் சைவத் தல                               முரை என்ன நாரதன் தான்
கலை முழுது உணர்ந்த சனற்குமாரன் பால் கற்றவன்                                  வியாதனாம் அவன்பால்
நலம் உறக் கேண்மின் என அவன் கதிர் வேல்                         நம்பிபால் மறைமுதல் அனைத்தும்
அலைவற உணர்ந்தோன் குறுமுனியாகும் அவன் இடை                                கேண்ம் என விடுத்தான்.----------------(20)





விளக்கம்--227

மூர்த்தி ,தலம் ,தீர்த்தம் ---ஆகிய மூன்றிலும் சிறந்த சைவ தலம் --ஒன்றை கூறுக ? என்று கேட்க 

நாரதன் --கலைகள் முழுவதையும் உணர்ந்த 'சனற்குமாரனிடம்  'கற்றவன் 'வியாதன் '--எனவே அவரிடம் நன்மை பெருக கேட்பதே சிறப்பு --என்று கூற --
அவன் --ஒளி சிந்தும்  வேற்படையை  உடைய  முருகவேளிடத்து --வேதம் முதல் எல்லாக் கலைகளையும் சந்தேகம் இல்லாமல் கற்றுணர்ந்தவர்  குறுமுனியாகும் ---அவரிடம் கேளுங்கள் --என்று 
கூறினார்.

*********************************************************************************
பாடல் --228


மால் அய மாதவனை அடைந்து கைதொழுது வாழ்த்தி                                                                                                                                            வாதாவி வில்வலனைக்
கொலை புரி தரும மூர்த்தியே விந்தக் குன்று     அடக்கிய தவக் குன்றெ
அலைகடல் குடித்த அருள் பெரும் கடலே அரும் தமிழ்க் கொண்டலே                                                                                                                                        தென்பார்
துலை பெற நிறுத்த களைகணே என்று சுருதி ஆயிரம்                                                                                                                                             எனத் துதித்தார்.-----(21)





விளக்கம்--228

பொதிய மலையில் வாழும் சிறந்த தவத்தை உடைய அகத்திய முனிவரிடம்  சென்று --கைகுவித்து  வணங்கி --அவரை வாழ்த்தி ---
வாதாவி என்ற கொடிய அரக்கனை கொலை புரிந்து தருமத்தை காத்த மூர்த்தியே ----
விந்திய மலையின்  அகந்தையை அடக்கிய தவக்குன்றே ----
அலைவீசும் கடலை குடித்த அருட்பெரும் கடலே --
அருமையான தமிழை  தன் பால் கொண்டவரே -- 
தென் திசை தாழாமல் நிலை பெற்றிருக்க வைத்த ஊன்றுகோலே --

இப்படியான  உன் பெருமை ஆயிரமாயிரம்  உள்ளது --

என்று துதித்தார்கள் .


*********************************************************************************
பாடல் --229

மூவகைச் சிறப்பும் உள்ளது ஓர் தான மொழிக என முகம் மலர்ந்து                                                                                                                          அருள்         கூர்ந்து
யாவையும் உணர்ந்தோன் முத்தி மண்டபத்தில் ஈர்   இரு தொகையின்                                                                                                               வந்து இறக்கும்
சேவல் கடமையும் ஐம் கரன் தனையும் சேவலம்     கொடி உடை வடிவேல்
காவலன் தனையும் வட நிழல் அமர்ந்த கண் நுதல்  பரனையும் பணியா.-                                                                                                       ---------------------------------{22}


விளக்கம்--229

மூவகை சிறப்பும் உள்ள ஒரு தலத்தை கூறுங்கள் --என்று கேட்க 

அதைக்கேட்டு  ,,எல்லாவற்றையும்  உணர்ந்திருந்த அகத்திய முனி --தன் இருதயத்தில் பெருகிய கருணையால் மலர்ந்த முகத்துடன் ---
முக்தி மண்டபத்தில் வந்து இறங்கும்  நான்கு கோழிகளையும் {இவைகளின்  கதை "காசிக் காண்டத்தில் " உள்ளது }--
ஐந்து  கரத்தானான விநாயகப் பெருமானையும் --
சேவல் கொடியுடைய --நம் காவலனாகிய --வடிவேல் முருகனையும் --
வடவிருட்சமான  'கல்லால மர ' நிழலில் தியானத்தில் அமர்ந்திருக்கும் --நெற்றிக்கண்ணை உடைய பரம்பொருளான

 "தட்சிணா மூர்த்தியையும் " தாழ்மையுடன் வணங்கி  --
******************************************************பாடல் --230

அம் கயல் கண்ணி தன்னையும் எந்தை ஆல                                        வாயானையும் இதய
பங்கயத்து இருத்திச் சமாதியில் இருந்து பரவசம்                                    அடைந்து பார்ப் பதிக்குச்
சங்கரன் அருளிச் செய்த சங்கிதையை தாரகன் உடல்
                                               இரண்டாகச்
செம்கை வேல் விடுத்த சேவகன் எனக்குத்
                    தெருட்டினான் அனைய சங்கிதையில்.--------------{23}






விளக்கம்--230

மீனையொத்த கண்களையுடைய  "அங்கயற்கண்ணி அம்மையையும் "--
நம் தந்தையான "ஆலவாய்  அண்ணலையும் "--
தன்னுடைய "இருதய தாமரையில்"அமர்த்தி --ஆழ்நிலை தியானத்தில் இருந்து --பரவசம் அடைந்து ---
"பார்வதி தேவிக்கு " சங்கரனார் கூறிய "சங்கர சங்கிதையை "--
தாரகன் என்ற அசுரனின் உடல் இரண்டாக பிளக்குமாறு --தன்  சிவந்த கைகளால் "வேல்  " செலுத்திய --அடியவர்களுக்கு  காவல்காரனாக  இருந்து காப்பாற்றும் சேவகனான்  "முருகப்பெருமான் "----
எனக்கு  தெளிவுபெற விளக்கினான் --
அந்த  "சங்கிதையில் "--
*********************************************************************************
பாடல் --231

பெறற்கு அரும் தவம் செய்து அகம் தெளிந்து அரிதில்   பெறும் கதி                                                                                                              கேட்பவர்க்கு எளிதாய்
உறப்படும் தல நீர் வினாய முச் சிறப்பு உள்ளது   எத்தலத்தினும் கழிந்த
சிறப்பின் ஆம் எண் எண் திருவிளையாடல் செய்து    அருள் வடிவு                                                                                                                       எடுத்து     என்றும்
மறைப் பொருள் விளங்கும் ஆலவாய் அதனை மண்ணின் மேல் சிவன்                                                                                                                 உலகு என்னும்.------{24}




விளக்கம்--231

கடினமான தவத்தை  செய்து --மனம் தூய்மை பெற்று ---அடையக்கூடிய மோட்சத்தை --

பெயரை கேட்ட உடனே கிடைக்கும் படி செய்யக்கூடிய --சிறந்த தீர்த்தம்  முதலான  மூன்று  சிறப்புகளை  உடைய இடம் --ஒன்று உள்ளது--

எந்த இடத்திற்கும் இல்லாத சிறப்பாக --   --இறைவன்  கருணை மிகுதியால் மனித வடிவம்  எடுத்து ---8*8  ஆக 64 --திருவிளையாடல்கள்  புரிந்ததாலும் -- 

அந்த திருவிளையாடல்களால் "வேதத்தின்  பொருளை " எளிய  மக்களும் புரிந்து கொள்ளும்படி என்றென்றும் விளக்கிக்கொண்டிருக்கும்  "ஆலவாய் "என்று கூறப்படும் இடத்தை --

இந்த பூமியில் உள்ள "சிவலோகம் "என்று கூறுவார்கள் .
********************************************************************************
பாடல் --232


அத்தலத்து அனைய மூவகை சிறப்பும் அளவு இலா                                                                                                                                            உயிர்க்கு எலாம் கருணை
வைத்தவன் செய்த திருவிளையாட்டும் வரையும் கிழிய                                                                                                                                                       வேல் எடுத்த
வித்தகன் எனக்கு விளம்பிய வாறே விளம்புவன்      உமக்கு என வந்த
உத்தம முனிவர் யாவரும் கேட்க உணர்த்துவான்       கடல் எலாம்                                                                                                                                                   உண்டான்.--{25}

விளக்கம்--232

அந்த தலத்தில் நிறைந்திருக்கின்ற மூன்றுவகை சிறப்புகளையும் --
எண்ணிக்கையிட்டு  கூறமுடியாத அளவு --அனைத்து  உயிர்களுக்கும் கருணை செய்பவனாகிய இறைவன் புரிந்த திருவிளையாடல்களை --

கடலை கிழிக்க வேல் எறிந்த "வித்தகனாகிய "முருகக்கடவுள் ---எனக்கு விளக்கமாக சொல்லியபடி  உங்களுக்கு சொல்லுகின்றேன் --

என்று தன் முன் வந்து கேட்ட உத்தம முனிவர்கள் அனைவரும் உள்ளத்தால் உணரும் வகையில் கூறத்தொடங்கினார்  ---
எல்லா கடலையும் குடித்த  அகத்திய முனிவர் .


                                               புராண வரலாறு 
                                      முற்றும் 



                                                                              பொருள்எழுதியவர் 

                                                                            DR.S.வீரம்மா தேவி .MBBS


***********************************************************************************************************************************************************************************************************************************************