JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Friday, December 25, 2020

திருவிளையாடல் புராணம்----பகுதி 28

திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 

                               மதுரைக் காண்டம்



                                            
                              தீர்த்த  விசேடப்  படலம் 

                                        பகுதி --2
பாடல்  268

குடைந்து தர்ப்பணமும் செய்து தானமும் கொடுத்து                                                 அம்மாடே 
அடைந்து எழுத்து ஐந்தும் எண்ணி உச்சரித்து                                           அன்பால் எம்மைத் 
தொடர்ந்து வந்து இறைஞ்சிச் சூழ்ந்து துதித்து                                      எமை உவப்பச் செய்தோர் 
உடம்பு எடுத்ததனால் எந்த உறுதி உண்டு அதனைச்                                                 சேர்வார்.



விளக்கம் --268

இந்த தீர்த்தத்தில் நன்றாக மூழ்கி குளித்து ---அதன் அருகிலிருந்து தர்ப்பணம் ,தானம் முதலியவைகளை செய்து --அத்துடன் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதில் இருத்தி உச்சரித்து ---
மிக்க அன்புடன் என்னிடம்  தொடர்ந்தது வந்து ---பணிவுடன் என்னை சுற்றிசுற்றி வந்து வணங்கி --என்னை மகிழ்விப்பவர்கள்  ---
உடம்பு எடுத்ததால் அடைய  வேண்டிய பயனான --முக்தியை உறுதியாகஅடைவார்கள் .

********************************************************************************* 

பாடல்  269

இந்த நீர் எம்மை ஆட்டின் ஏழ் இரண்டு உலகின்                                                        மிக்க 
அந்தம் இல் தீர்த்தம் எல்லாம் ஆட்டிய பயன்                                                     வந்து எய்தும் 
வந்து இதின் மூழ்கி இங்கு வைகும் நம் குறியை                                                        உங்கள் 
சிந்தையில் ஆர்வம் பொங்கப் பூசனை செய்மின்                                                        என்னா.



விளக்கம் --269

இந்த குளத்தின் நீரால் எம்மை குளிப்பாட்டினால் ---பதினான்கு உலகில் உள்ள தீர்த்தத்தினால் அபிஷேகித்த பலன் கிடைக்கும் --
இந்த தீர்த்தத்தில் மூழ்கி குளித்து --இங்குள்ள உருவமற்றவனின் உருமான சிவலிங்கத்தை --மனதில் மிகுந்த ஆசை போங்க --பூசனை செய்யுங்கள் --என்று சொல்லி --

*********************************************************************************



பாடல்  270

விண்ணவர் தம்மின் மேலாம் வேதியன் ஆகி நின்ற 
பண்ணவன் தான் அந்நீரில் படிந்து தன்ன                                                 உச்சையாலே 
அண்ணல் அம் கணத்தி நோரை மூழ்கு வித்து                                                அனாதி ஆய 
புண்ணிய விலிங்கம் தன்னுள் புகுந்து இனிது                                           இருந்தான் மன்னோ.




விளக்கம் --270

தேவர்களுக்கு எல்லாம் மேலான அந்தணனாக நின்ற இறைவன் --தான் அந்த நீரில் நன்குமூழ்கி பிறகு--தன்னுடைய ஆணையால் ---பெருமைமிகுந்த தன்னுடைய கணத்தினர்களையும் மூழ்கி குளிக்கவைத்து ---

ஒப்புஉவமையற்றதாய் தனித்து நின்ற புண்ணிய லிங்கத்தினுள் புகுந்து --இனிதாக இருந்தான் ---என்பதை தெரிந்து கொள்ளுங்கள் .

*********************************************************************************



பாடல்  271

அந்தமா நீர் நந்தி ஆதியோர் விதியால் சோம 
சுந்தரன் முடிமேல் ஆட்டித் துகள் அறப்பூசை                                                 ஆற்றிச் 
சிந்தையில் விழைந்த எல்லாம் அடைந்தனர்                                          செம்பொன் கஞ்சம் 
வந்தவாறு இது அத்திர்த்த மகிமையும் உரைப்பக்                                              கேண்மின்.


விளக்கம் --271

அந்த பெருமைமிக்க தீர்த்தத்தினால் --நந்திமுதலான கணங்கள் 
 எல்லாம் --ஆகமவிதிப்படி "சோமசுந்தரப்பெருமானின் "திருமுடிமீது திருமஞ்சனம் செய்து --குற்றம் இல்லாத பூசனைகள் செய்து --
அவர்களின் ஒருமுகப்பட்ட மனதில் விரும்பியனவற்றை எல்லாம் அடைந்தார்கள் .
சிவந்த பொன்னிறமான தாமரையை உடைய இத்தீர்த்தம் உருவாகிய கதை இதுதான் --
இத்தீர்த்தத்தின் மகிமையை இன்னும் கூறுகின்றேன் --கேளுங்கள் --


*********************************************************************************





பாடல்  272


வளை எறி தரங்க ஞான வாவியை நோக்கில் பாவத் 
தளையறு மூழ்கின் வேண்டும் காமியம் எல்லாம்                                                 சாரும் 
உளம் உற மூழ்கும் எல்லை முழுக்கு ஒன்றற்கு                                              உலகத்து உள்ள 
அளவறு தீர்த்தம் எல்லாம் ஆடிய பயன் வந்து                                                 எய்தும்.



விளக்கம் --272

சங்குகளை வீசுகின்ற அலைகளை உடைய இந்த "ஞான குளத்தை "பார்த்தால் ---பாவக்கட்டிலிருந்து விடுபடுவார்கள் --
இதில் மூழ்கினால் வேண்டும் இஷ்டப்பொருள்கள் எல்லாம் கிடைக்கும் --
உள்ளத்தில் மிகுந்த விருப்போடு மூழ்குபவர்களுக்கு -ஒரு முறை முழுங்கி குளித்தாலே ---உலகத்திலுள்ள அனைத்து தீர்த்தங்களிலும் மூழ்கிகுளிப்பதால்  ஏற்படும் பலன் கிடைக்கும் .


*********************************************************************************



பாடல்  273

மெய்யை மண்ணாதி கொண்டு விதிவழி சுத்தி செய்து 
மையறு வருண சூத்த மந்திரம் நவின்று மூழ்கிற்று 
உய்யமா தீர்த்தம் எல்லாம் தோய்ந்து நான்                                மறையும் மாய்ந்தோர் 
கையில் எப் பொருளும் ஈந்த காசறு பேறு நல்கும்.




விளக்கம் --273

உடலை மண் முதலாக, சாத்திரங்களில் சொல்லப்பட்டுள்ள பொருள்களை கொண்டு சுத்தம் செய்து ---குற்றமில்லாமல் "வருணமந்திரத்தை "நாவினால் நன்றாக உச்சரித்து --மூழ்கிகுளித்தால் --

உலகிலுள்ள சிறப்பு பெற்ற தீர்த்தங்களிலெல்லாம் குளித்து --நான்குவேதங்களையும் குற்றமில்லாமல் கற்றவர்களுக்கு --அவர்கள் விரும்பும் பொருளை அவர்களின் கையில் கொடுத்ததினால் ஏற்படும்  ----

அளவிட்டு கூறமுடியாத சிறப்புகள் எல்லாம் கிடைக்கும் 

*********************************************************************************




பாடல்  274


தெய்வ இத் தீர்த்தம் தன்னை நினைவு இன்றித்                                                 தீண்டினாலும் 
அவ்விய வினையும் நீந்தி அரும் பெறல் வீடுசேர்வர் 
இவ்வுரை மெய்யே ஆகும் என் எனின் மனத்தாறு                                                 அன்றி 
வெவ் அழல் தீண்டினாலும் சுடும் அன்றி விடுமோ                                                 அம்மா.


விளக்கம் --274

இந்த தெய்வத்தன்மை வாய்ந்த தீர்த்தத்தை --தன்னையறியாமல் தொட்டாலும் ---பலஜென்மங்களாக தொடர்ந்து வரும் கர்மபலன்கள் எல்லாம் நீங்கி --பெறுவதற்கரிய வீடுபேறு கிடைக்கும் --
இந்த வாக்கியம் உண்மை --எவ்வாறு என்றால் 

மனத்தினால் நினைக்காமலே -வெம்மையான  தீயினை தொட்டாலும் --அது சுடாமல் விட்டுவிடுமா ? அம்மா !

*********************************************************************************

பாடல்  275

ஆரும் அந்நீரில் என்றும் ஆடினர் சீவன் முத்தி 
சேருவரம் நீராடும் சிறப்புறு பயனுக்கு ஒவ்வா 
வாருணம் ஆக்கின் நேய மந்திரம் இவை முன் ஆன 
பேர் உணர்வு அளிக்கும் நானம் செய்தவர் பெறும்                                                 பேறு எல்லாம்.




விளக்கம் --275

பெருகுகின்ற இந்த நீரில் --எல்லா நாட்களிலும் மூழ்கிகுளித்தவர்கள் --ஜீவன் முக்தியை அடைவார்கள் --
இதில் நீராடுவதன் பயனை எதற்கு ஒப்பாக சொல்லமுடியும்? --
வருணமுழுக்கு ,ஆக்கிநேயமுழுக்கு ,ஞானமுழுக்கு --முதலியவற்றை செய்பவர்கள் அடையும் பலன்கள் கூட இதற்க்கு ஒப்பாகாது --


*************************************************************************************



பாடல்  276

அன்ன நீர் அதனையும் ஆடி ஆலவாய் உடைய                                                 நாதன்
தன்னையும் பணிவோன் மேலைப் பரகதி தன்னைச்                                                 சாரும்
என்ன நன் நூலில் சொன்ன பவித்திரம் எவைக்கும்                                                 மேலாய்ப்
பன்னரும் புனிதம் ஆன பவித்திரம் ஆகி நிற்கும்.



விளக்கம் --276

மேலும் இந்த நீரில் நீராடி ஆலவாயில் எழுந்தருளியுள்ள இறைவனை பணிகின்றவன், மறுவுலக இன்பமான முக்தியை அடைவான் --
சிறந்த நூல்களில் எல்லாம் சொல்லப்பட்ட புனிதசெயல்கள்  எல்லாவற்றிற்கும் மேலானதாகவும் --செய்வதற்கரிய  புனிதத்தை செய்து --அதனால் பவித்திரம் அடைந்தவனாகவும்  விளங்குவான் .


*********************************************************************************


பாடல்  277

ஆதரவு இலனாய் அந்நீர் ஆடினோன் சுவர்க்கம்                                                 சேரும் 
ஆதரவு உளனாய் மூழ்கி வானவர் ஆதி                                                 ஆனோர்க்கு 
ஆதர அரிசி எள்ளுத் தருப்பணம் அமையச்                                                 செய்தோன் 
ஆதர வேள்வி முற்றும் ஆற்றிய பயனைச் சேரும்.



விளக்கம் --277

இந்நீரின் மகிமையை அறியாமல் இந்தநீரில் நீராடியவன் -சுவர்க்கத்தை அடைவான் ---

இந்நீரின் மகிமையை அறிந்து விருப்புடன் மூழ்கி நீராடியவன் --தேவர்களுக்கு விருப்புடன் அரிசி ,எள்  முதலிய தர்ப்பணங்களை --சாஸ்திரத்தில் சொல்லியபடி செய்தவன் ---
விரும்பத்தகுந்த வேள்விகள் அனைத்தையும் செய்வதனால் உண்டாகும் பயன்கள் அனைத்தையும் அடைவான் .

*********************************************************************************


பாடல்  278


னை மா தலங்கள் தம்மிலிருந்து செய் விரதம்       பூசை
தான மா தரும் ஓமம் தவம் செபம் தியானம்       தம்மால்
ஆன மா பயனில் கோடி அதிகம் ஆம் அடைந்து     மூழ்கி
ஞானம் மாதீர்த்த ஞாங்கர் இருந்து அவை நயந்து                                                 செய்யின்.





விளக்கம் --278

மற்ற சிறப்புமிக்க தலங்களில் இருந்து செய்யப்படும் --விரதம் ,பூசை ,தானம், தருமம் ,ஓமம் ,தவம் ,செபம் ,தியானம் ---முதலியவைகளால் கிடைக்கும் மிகச்சிறந்த பலனைவிட --கோடியளவு  அதிக பலன்  --இந்த ஞானம் வழங்கும் தீர்த்தத்தில் மூழ்கி நீராடி --இதனருகிலிருந்து அந்த நற்காரியங்களை செய்தால் --கிடைத்துவிடும் 

****************************************************************************************



பாடல்  279

பிறந்த நாள் அந்நீர் மூழ்கின் மேலை வெம்                                            பிறவிப் பௌவம்
மறிந்திடும் மறி தேள் கும்ப மதிகளின் மூழ்கித்                                                 தென்பால்
உறைந்தவர் பொருட்டு பிண்டம் உதவினால்                                           அவர்தம் ஆழ்ந்து
நிறைந்திடு பிறவிப் பௌவ நின்று மேல் எழுவர்                                                 அன்றே.




விளக்கம் --279


பிறந்தநாளில் அந்த நீரில் மூழ்கினால் ---தொன்றுதொட்டுவருகின்ற பிறவிக்கடல் வற்றும் --
சித்திரை ,மாசி ,கார்த்திகை மாதங்களில் --இந்நீரில் மூழ்கி --தென்திசையில் சென்று வாழ்கின்ற பித்ருக்களுக்கு "பிண்டம் "வைத்து உதவினால் ---அவர்கள் தங்களை வருத்தும் பிறவிக்கடலிலிருந்து மேலே எழுவார்கள் .

****************************************************************************



பாடல்  280

அத்தட மருங்கின் யாவர் தென் புலம் அடைந்தோர்                                                 தங்கள் 
சித்த மாசு அகற்ற வேண்டிச் செய் கடன் முடிக்கின்                                                 அன்னோர் 
எத்தனை எண் நேர்ந்தாலும் எள்ளுக்கா ஆயிரம்                                                 ஆண்டாக 
அத்தனை ஆண்டு மட்டும் அவரை விண் ஆள                                                 வைப்பார்.



விளக்கம் --280

ந்த குளத்தின் அருகிலிருந்து --தென்திசையில் வாழுகின்ற தன் முன்னோர்களுக்கு --அவர்கள் மனம் முதலியவற்றால் செய்த பாவம் நீங்க --செய்யவேண்டிய காரியங்களை செய்தால் --

அப்படி செய்யும் வம்சத்தினர்  --
எத்தனை "எள் "தானமாக கொடுத்தாலும் --அந்த "எள் " ஒன்றிற்கு ,ஒரு ஆயிரம் ஆண்டாக ,கொடுக்கப்பட்ட "எள்ளு"க்கு ஈடான அளவு ஆண்டுகள் --அவர்களின் பித்ருக்கள் தேவர்களுடைய உலகை அடைந்து வாழ வகை செய்தவர்கள் ஆவார்கள் .


***************************************************************************************************************************************************************************************************************************************************

                                                                                      பொருள் எழுதியவர் 
                                                                               DR.S.வீரம்மாதேவி .M.B.B.S