JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Friday, September 2, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 10


MEENATCHI AMMAN TEMPLE--MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 






                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி 6

பாடல் --82


ஏக மாகிய மேருவும் பொதியமே யிரும்பொன்
ஆகு மேருவைச் சூழ்ந்தசாம் பூநத யாறு
நாக ராடுதண் பொருநையே நாவலா றுடுத்த
போக பூமியும் பொருநைசூழ் பூமியே போலும்.


விளக்கம் ---82


ஒன்றே ஒன்றுதான் இதற்க்கு இணையாக வேறு இல்லை எனப்படும் --ஏகமான மேருமலையும் பொதியமலை க்கு  நிகரானது என்று சொல்லப்படும்படிதான் உள்ளது --அவ்வளவு சிறப்பு பெற்று  விளங்குகின்றது பொதியமலை ---

அந்த பொன்போல ஒளிரும் மேருமலையை சுற்றி ஓடும் 'சாம்பூநதம் 'என்னும் ஆறு ,நாகர்கள் என்னும் தேவர்கள் நீராடி மகிழும் 'பொருநை நதி 'க்கு சமமானதே --

அந்த 'சாம்பூதநதம் 'ஆற்றிற்கு அடுத்து உள்ள    'போகபூமி 'யும் --பொருநை நதியால் சூழப்பெற்ற பாண்டிய நாட்டிற்கு நிகராகத்தான் விளங்குகின்றது .

                   **************************************************---------------51


பாடல் --83

சிறந்த தண்டமி ழாலவாய் சிவனுல கானாற்
புறந்த யங்கிய நகரெலாம் புரந்தரன் பிரமன்
மறந்த யங்கிய நேமியோ னாதிய வானோர்
அறந்த யங்கிய வுலகுரு வானதே யாகும்.
விளக்கம் ---83

சிறந்த தன்மைகள் அனைத்தையும் ஒருங்கே பெற்ற தமிழ்மொழியை உடைய ஆலவாய் எனப்படும் 'மதுரை  மாநகரம் '--'சிவலோக வடிவமே '--

அந்த நகரத்திற்கு வெளியே சுற்றிலும் காணப்படும் நகரங்கள் யாவும் --இந்திரன் ,பிரம்மா ,வீரம் செழித்து விளங்கும் சக்கரப்படையை உடைய திருமால்  முதலிய வானவர்கள் வாழும் ----அறத்தை நிலைகொண்ட உலகைப்போலவே விளங்குகின்றது .

                                      *******************************************-----------------------52


பாடல் --84

வளைந்த நுண்ணிடை மடந்தையர் வனமுலை மெழுகிக்
களைந்த குங்குமக் கலவையுங் காசறைச் சாந்தும்
அளைந்த தெண்டிரைப் பொருநையோ வந்நதி ஞாங்கர்
விளைந்த செந்நெலும் கன்னலும் வீசுமவ் வாசம்.
விளக்கம் --84

வளைந்த மெல்லிய இடையை உடைய பெண்கள் ---தங்களுடைய மார்பகத்தில் பூசி பின் கழுவும் ---குங்குமக்கலவையும் கஸ்த்தூரியும் சந்தனமும் ---பொருநைநதியில் கலந்து ஓடுவதால் --அந்த நதியில் மட்டுமா அதன் வாசனை வீசுகின்றது ---

அந்த நதியின் நீர் பாய்வதால் விளைந்த  செந்நெல்லிலும் கரும்பிலும் அந்த மணம் வீசுகின்றது .

                       ******************************************-----------------------53


பாடல் --85

பொதியி லேவிளை கின்றன சந்தனம் பொதியின்
நதியி லேவிளை கின்றன முத்தமந் நதிசூழ்
பதியி லேவிளை கின்றன தருமமப் பதியோர்
மதியி லேவிளை கின்றன மறைமுதல் பத்தி.
விளக்கம் --85

பொதியமலையிலே சந்தனமரங்கள் விளைகின்றது ---

பொதியமலையிலிருந்து வரும் நதியில் முத்துக்கள் விளைகின்றன ---

அந்த நதியால் சூழப்பட்ட நாட்டிலே தருமங்கள் விளைகின்றன ---

அந்த நாட்டில் வாழும் மக்களின் மதியிலே [மனதிலே ]வேதமுதல்வனாம் இறைவனின் மீது பக்தி  விளைகின்றன ----

                  ****************************************************----------------54
பாடல் --86

கடுக்க வின்பெறு கண்டனுந் தென்றிசை நோக்கி
அடுக்க வந்துவந் தாடுவா னாடலி னிளைப்பு
விடுக்க வாரமென் காறிரு முகத்திடை வீசி
மடுக்க வுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்றோ.


விளக்கம் --86

விஷத்தை அவிர்பாகமாக பெற்று அதை தன் கழுத்தில் நிறுத்தி நீலகண்டனாகிய இறைவனும் --

தென்திசையாம் பாண்டியநாட்டை  விரும்பி அருகில் வந்து  நடனம் ஆடுகின்றான் --

ஏனென்றால் அங்குதான் அப்படி இறைவன் நடமாடியதால் ஏற்படும் களைப்பு ---

பொதியமலையிலிருந்து சந்தனத்தை சுமந்துவரும் மெல்லிய தென்றல் காற்று அவரின் முகத்தில் பட்டு தடவிச் செல்வதால் நீங்குகின்றது --

மேலும்அதைத் தொடர்ந்துவரும் 'தமிழ் 'அவருடைய திருச்செவியில் விழுவதால் ஏற்படும் இன்பத்தை அனுபவிப்பதற்காகவும் அல்லவா !!

               *********************************************************------------------55
பாடல் --87


விடையு கைத்தவன் பாணினிக் கிலக்கண மேனாள்
வடமொ ழிக்குரை தாங்கியல் மலயமா முனிக்குத்
திடமு றுத்தியம் மொழக்கெதி ராக்கிய தென்சொல்
மடம கட்கரங் கென்பது வழுதிநா டன்றோ.
விளக்கம் ---87

இடபவாகனத்தை [ரிஷப வாகனம் ] செலுத்தும் இறைவனான சிவபெருமான் --முன்னொருகாலத்தில்' பாணினி முனிவருக்கு 'வடமொழியாம் சமஸ்கிருத மொழியின்' இலக்கணத்தை  போதித்தருளினார் ----

அந்த பெருமானே,, பொதியமலையில் வாழும் அகத்திய முனிவருக்கு திடமாக பயிற்றுவித்து --அந்த வடமொழிக்கு எதிர்  இணையான 

பெருமைமிகுந்தமொழியாகவும் தென்னாட்டுக்கு  உரிய மொழியாகவும்  விளங்கச்செய்த --

 'தமிழ் மொழி 'என்னும் நங்கைக்கு --நடனமாடும் அரங்கம் --என்பது --

இந்த பாண்டியநாடல்லவா !

                        *********************************************--------------------56
பாடல் --88


கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக்* கிடந்ததா வெண்ணவம் படுமோ.
விளக்கம் ---88

நெற்றிக்கண்ணை உடைய முதற்கடவுளாகிய 'சிவபெருமான் 'வந்து இங்கு தமிழ்ச்சங்கத்தில் அமர்ந்து ---

இலக்கண வரம்புகளை எல்லாம் மிக்க ஆழமாக ஆராய்ந்து --குற்றங்குறைகளை எல்லாம் நீக்கி செம்மைப்படுத்திய ---

என்றும் பசுமையுடன் [இளமையுடன் ]விளங்கும் 'தமிழ் மொழியை '--

மற்ற இடங்களில் காணப்படும் இலக்கண வரம்பு இல்லாத பிறமொழிகளைப்போல எண்ணி ---

இடையில் வந்த மொழி ,இதற்க்கு என்ன சிறப்பு உள்ளது --என்பது போல சாதாரணமாக எண்ணவும் முடியுமா ??

                      **********************************************  ----------------------57
பாடல் --89

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்.

விளக்கம் --89

அடியவர்களின் தலைவனான சிவபெருமானை ,தூதுசொல்ல அனுப்பியதும் ----

முதலை  உண்ட பாலகனை  அழைத்து உயிருடன் கொடுத்ததும் ---

சாம்பல் குவியலில் இருந்த எலும்பை பெண்ணுருவுவாக எழுப்பியதும் ---

மறைகளான வேதங்களால் மூடப்பட்ட கதவை திறந்ததும் ---

கன்னியான இனிமையும் குளிர்ச்சியும் நிறைந்த தமிழ்ச்சொல்லினால் தானே !!!!

மற்ற இடங்களில் காணப்படும் வேற்றுமொழி சொற்களால் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடந்ததா -----

அப்படி நடந்தது என்று ,,உங்களால் உரக்க பெருமையுடன் சொல்லமுடியுமா ---சொல்லுங்கள் ??


              ***********************************************--------------------58
பாடல் --90


வெம்மை யால்விளை வஃகினும் வேந்தர்கோல் கோடிச்
செம்மை மாறினும் வறுமைநோய் சிதைப்பினுஞ்                                                                                                                        சிவன்பாற்
பொய்ம்மை மாறிய பத்தியும் *பொலிவுங்குன் றாவாத்
தம்மை மாறியும் புரிவது தருமமந் நாடு.
விளக்கம் --90

மழையின்மையால் வெப்பம் மிகுந்து அதனால் விளைநிலங்கள் பாழ்பட்டு   வறுமை வந்தாலும் ----

அரசனின் நல்ல ஆட்சியின் செழுமை மாறினாலும்  ----

வறுமை என்னும் நோய் வந்து சிதைத்தாலும் ---

சிவனின் மீது கொண்ட பொய்மை இல்லாத மெய்யான பக்தி--தன்னுடைய  பொலிவு குன்றாமல் --நிறைந்து காணப்படும் ---தன்மை கொண்டது ---

இந்த தருமம் தழைத்தோங்கியுள்ள 'பாண்டியநாடு '.


     ********************************************************------------------------59
பாடல் --91


உலகம் யாவையு மீன்றவ ளும்பரு ளுயர்ந்த
திலக நாயகி பரஞ்சுடர் சேயென மூன்று
தலைவ ரான்முறை செய்தநா டிஃதன்றிச் சலதி
சுலவு பாரினுண் டாகுமோ துறக்கத்து மஃதே.
விளக்கம் ---91

அனைத்து உலகங்களை பெற்றவளும் ,சக்திகளில் உயர்ந்த திலகம் போன்ற நாயகியும் ----

பரஞ்சுடரும்  [சிவபெருமான் ]---

பரஞ்சுடரின் மகனும் [முருகன் ]---

ஆகிய மூன்று தலைவர்களாலும் ஆட்சி செய்யப்பட நாடு இந்தப்பாண்டிய நாடு ' ---

இந்த நாடல்லாது ,,இந்த உலகில் வேறு எந்த நாடாவது இப்படிப்பட்ட சிறப்பை பெற்றிருக்கின்றதா ?

விண்ணுலகத்திலும் இப்படிப்பட்ட சிறப்பை பெற்ற இடம் உள்ளதா ?

இல்லை --                                                   ---------------------------------------------------------60

***********************************************************************************************************************************************************************************************************************************

                                                திருநாட்டு சிறப்பு முற்றிற்று 



                                                                        பொருள்எழுதியவர் 
                                                                          DR.S.வீரம்மா தேவி .MBBS





Thursday, September 1, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 9


COSALAI--MEENATCHI AMMAN TEMPLE--MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 






                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி 5

பாடல் --72

                ஆறு சூழ்கழிப் புலால்பொறா தசைந்துகூன் கைதை
                    சோறு கால்வன வாம்பல்வாய் திறப்பன துணிந்து
                         கூற வாரெனக் குவளைகண் காட்டிடக் கூடித்
                             தூறு வாரெனச் சிரித்தலர் தூற்றுவ முல்லை.


விளக்கம் --72

ஆறு  போல சூழ்ந்து  விளங்கிய உப்பங்கழிகளில் எழுந்த புலால் நாற்றத்தால் நடுங்கிய தாழம்பூ செடிகள் ---தன்னிடமுள்ள மகரந்தங்களை ---சோறு போல கொட்டுகின்றது  ---

பிறர் செய்த தவறுகளை துணிந்து கூறுபவதற்காக  வாயை திறப்பது போல -- ஆம்பல் மலர்கள் மலர்ந்து விளங்குகின்றது ----

தவறுகளை தட்டி கேட்பவர்கள் இருக்கிறார்கள் பார் --என்று ஜாடைகாட்டுபவர்களின் விரிந்த கண்களைப்போல---குவளை மலர்கள்   மலர்ந்து காணப்படுகின்றன ----

பிறர் குற்றத்தை கூடிக்கூடி பேசி தூற்றுபவர்களைப்போல ---முல்லைக்  கொடிகள் மலர்ந்த மலர்களை கீழே பொழிகின்றன ----

                  *********************************************-----------------41
பாடல் --73

               
துள்ளு சேல்விழி நுளைச்சியர் சுறவொடு மருந்தக்
கள்ளு மாறவுங் கூனலங் காய்தினை யவரை
கொள்ளு மாறவுங் கிழங்குதேன் கொழுஞ்சுவைக் கன்னல்
எள்ளு மாறவு மளப்பன விடைக்கிடை முத்தம்.
விளக்கம் --73

துள்ளுகின்ற கெண்டை மீன்போன்ற கண்களை உடைய நெய்தல் நிலப்பெண்கள் -----

சுறாமீனுடன் உண்ணும் பொருட்டு -- கள் --என்னும் மதுவை வாங்குவதற்காகவும் ----

கூனலங்காய் --என்னும் புளியங்காய் ,தினை ,அவரை ,கொள்ளு --வாங்குவதற்காகவும் ----

கிழங்கு ,தேன் ,செழுமையான இனிய கரும்பு ,எள்ளு --முதலியவற்றை வாங்குவதற்காகவும் ----

இந்த பொருள்களின் அளவுக்கு அளவு முத்துக்களை  அளந்து கொடுத்தார்கள் --

               ***********************************************------------------------42
பாடல் --74

              அவமி கும்புலப் பகைகடந் துயிர்க்கெலா மன்பாம்
                    நவமி குங்குடை நிழற்றிமெய்ச் செய்யகோ னடாத்திச்
                        சிவமி கும்பர ஞானமெய்த் திருவொடும் பொலிந்து
                      தவமி ருந்தர சாள்வது தண்டமிழ்ப் பொதியம்.

விளக்கம் --74

துன்பம் நிறைந்த 'புலன்கள்'என்னும் பகையை கடந்து செல்வதற்கு ---அனைத்து உயிர்களுக்கும் ----

அன்பினாலான  --ஒன்பது விதமான ---புதுமையான வழிமுறையை  வகுத்தது கொடுத்து ---

உண்மைப்பொருளை அறிந்து கொள்ள --ஜீவப்பசுக்களுக்கு  வழியைக்காட்டி ----

ஆனந்தம் நிறைந்த பரம்பொருளின் உண்மைத்தன்மையை காட்டிக்கொடுக்கும் ---'தவம் 'என்னும் செயல் நிறைந்து காணப்படுகின்றது   ---

பெருமைநிறைந்த 'தமிழை 'உடைமையாக கொண்ட பொதியமலையில்.  

       ******************************************************----------------43

பாடல் --75

               வான யாறுதோய்ந் துயரிய மலயமே முக்கண்
                 ஞான நாயக னம்மலை போர்த்தகார் நால்வாய்
                   யானை யீருரி யம்மழை யசும்பதன் புண்ணீர்
                   கூனல் வான்சிலை குருதிதோய் கோடுபோன் றன்றே.

விளக்கம் --75

ஆகாய கங்கையை தொட்டு பேசி மகிழும் அளவுக்கு உயர்ந்து விளங்கும் பொதியமலை --அந்த கங்கையை தலைமீது கொண்டுள்ள முக்கண்ணனாம் சிவபெருமானை போல விளங்குகின்றது ---

அந்த மலையின் மீது போர்வைபோல கவிழ்ந்திருக்கும் கரிய மழைமேகமானது  ,அந்த சிவபெருமானால் அழிக்கப்பட்டு ,தோலுரிக்கப்பட்ட ,யானை உருவத்தில் இருந்த அரக்கனாம் 'கஜாசுரன் 'தோலான 'யானைத்தோல் 'போல இருந்தது ----

அந்த கரிய மழை மேகம் பொழிந்த மழைநீரானது ---யானையின் குருதிபோல இருந்தது ---

அம்மழை மேகத்தில் தெரிந்த வளைந்த 'வானவில் '--இரத்தம் தோய்ந்த அந்த யானையின் கொம்பு போல காட்சியளிக்கின்றது .

                              *****************************************---------------------------44
பாடல் --76

               சுனைய கன்கரைச் சூழல்வாய்ச் சுரும்புசூழ் கிடப்ப
                நனைய விழ்ந்தசெங் காந்தண்மே னாகிள வேங்கைச்
               சினைய விழ்ந்தவீ கிடப்பபொன் றோய்கலத் தெண்ணீர்
                     அனைய பொன்சுடு நெருப்பொடு கரியிருந் தனைய.

விளக்கம் ---76

சுனையும் ,அந்த சுனையின் அகன்ற கரையில் மொய்த்துக்கொண்டிருக்கும் வண்டுகளும் ----

மொட்டு விரிந்த செங்காந்தள் மலர் மீது இளமையான வேங்கைமரத்தின் கிளைகளில் மலர்ந்த மலர்கள் உதிர்ந்து   கிடந்த தோற்றமானது---

தங்கத்தை  உருக்க நெருப்புமூட்டுவதற்காக அடுப்பில் போடப்பட்டிருக்கும் கரியையும் ,

அந்த நெருப்பின்மீது காய்ச்சப்பட்டுக்கொண்டிருக்கும்  ஒளிரும் பொன்னையும் ,  காய்ச்சித்  தோய்க்கப் பயன்படுத்த   அருகில் வைக்கப்பட்டிருக்கும் தெளிந்த நீரையும்  ஒத்திருந்தது --


                            ***************************************-----------------------------45
பாடல் --77
                
குண்டு நீர்ப்படு குவளைவாய்க் கொழுஞ்சினை மரவம்
வண்டு கூப்பிடச் செம்மறூய்ப் புதுமது வார்ப்ப
அண்டர் வாய்ப்பட மறைவழி பொரிசொரிந் தானெய்
மொண்டு வாக்கிமுத் தீவினை முடிப்பவ ரனைய.
விளக்கம் --77

ஆழமான சுனை நீரிலுள்ள செங்குவளை மலர்களில் மொய்த்திடும் வண்டுகள் ஒலியெழுப்பிக்கொண்டிருக்க ----

செழுமையான பூக்களை கீழே தூவி  ,புதிய மதுவாகிய தேனை சொரியும் செழுமையான கிளைகளை உடைய குங்கும மரத்தின் தோற்றம் ---

தேவர்களின் வாய்க்கு உணவாக செல்வதற்காக ,வேதம் சொல்லிய முறைப்படிவேள்வித்தீயில்  'நெற்பொரியை  'சொரிந்து ,பசுநெய்யை  செழுமையாக  ஊற்றி ,மூன்றுவகையான நெருப்பையும் பேணி காப்பவரைப்போல இருந்தது --

               *******************************************************---------------------46
பாடல் --78

                
அகிலு மாரமுந் தழன்மடுத் தகழ்ந்தெறிந் தழல்கால்
துகிரு மாரமுந் தொட்டெறிந் தைவனந் தூவிப்
புகரின் மால்கரி மருப்பினால் வேலிகள் போக்கி
இகலில் வான்பயி ரோம்புவ வெயினர்தஞ் சீறூர்.


விளக்கம் --78


எயினர் என்னும் குறவர்கள் தங்கள் சிறிய ஊர்களில் --

அகில் ,சந்தன மரங்களை தீயிட்டு கொளுத்தி ,அதன் வேர்களை தோண்டி எடுத்து எறிவார்கள் ---

அப்படி வேர்களை அடியோடு தோண்டி எடுக்கும் போது கிடைக்கும் பவளத்தையும் முத்தையும் எறிந்துவிட்டு --நிலத்தை நன்கு பண்படுத்தி --

அதில் மலைநெல்லை தூவி --பயிரிட்டு ---குற்றமில்லாத பெரிய யானையின் தந்தங்களைக்கொண்டு வேலி அமைத்து ---[குற்றமில்லாத --என்றால் --யானைகளை தந்தத்திற்காக கொல்லாமல் தானாக இறந்த யானைகளின் தந்தத்தை எடுத்து --என்று அர்த்தம் ] ---

ஓய்வில்லாமல் உழைத்து வானம் பார்த்து அதாவது இயற்கையை அறிந்து பயிர்களை பாதுகாத்து வளர்த்தார்கள் .

                       **********************************************---------------------------47
பாடல் --79

              
அண்ட வாணருக் கின்னமு தருத்துவோர் வேள்விக்
குண்ட வாரழற் கொழும்புகை கோலுமக் குன்றிற்
புண்ட வாதவே லிறவுளர் புனத்தெரி மடுப்ப
உண்ட காரகிற் றூமமு மொக்கவே மயங்கும்.
விளக்கம் ---79

     தேவர்களுக்கு இனிய அமுதமாகிய உணவை வேள்வி மூலமாக அளிப்பவர்களின் , வேள்வித்தீயிலிருந்து வெளிவரும் புகையினால் சூழப்பெற்றிருக்கும் அந்த பொதியமலைக்குன்றில் ---

புலால் நீங்காத வேலினை உடைய [அதாவது ,அவர்களின் ஆயுதமாகிய 'வேல்களில்  'எப்பொழுதும் மாமிசம் இருந்து கொண்டே இருக்கும்] குறவர்கள் [இரவுளர் ]--அந்த மாமிசத்தை தீயினில் வாட்டுவதால் எழும் கரும் புகையும் அந்த வேள்வித்தீயிலிருந்து வந்த புகையோடு கலந்து காணப்படுகின்றது ---

குறிப்பு ;--

ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது சிறந்த தத்துவத்தை உணர்த்தும் ஒரு பாடல் 

                       ***********************************************-------------------------48
பாடல் --80

                  கருவி வான்சொரி மணிகளுங் கழைசொரி மணியும்
                          அருவி கான்றபன் மணிகளு மகன்றலை நாகத்
                       திரவி கான்றசெம் மணிகளும் புனங்கவ ரினமான்
                      குருவி வீழ்ந்திடக் கொடிச்சியர் கோத்தெறி கவண்கல்.

விளக்கம் --80

    பலவித காரணங்களால் வானத்திலிருந்து விழுந்த மணிகளும்  ---

மூங்கில்கள்  சொரிந்த மணிகளும்  [மூங்கில்கள் முத்துக்களை வெளிவிடும் ]-----

அருவிகள் ஒதுக்கிய பலவித மணிகளும் ---

அகன்ற படத்தையுடைய நாகங்கள் உமிழ்ந்த சிவந்த ஒளிவீசும் மணிகளும் ---

'கொடிச்சியார்  என்னும் குறமகளிர்கள் '--தினைப்புனத்தில்  அதாவது  தினைப்பயிர் வளர்ந்துள்ள தங்கள் நிலத்தில் --அந்த பயிர்களை உண்ணவரும் மான்களையும்   ,குருவிகளையும்  விரட்டுவதற்காக --அவர்களுடைய  கவன்களில்   கற்களாக உபயோகப்படுத்தபடுகின்றன .

                      ***********************************************--------------------------49
பாடல் --81

                    
மாய வன்வடி வாயது வைய மாலுந்திச்
சேய பங்கய மாயது தென்னனா டலர்மேற்
போய மென்பொகுட் டாயது பொதியமப் பொகுட்டின்
மேய நான்முக னகத்தியன் முத்தமிழ் வேதம்.
விளக்கம் ---81

மாயவன் என்ற பெயர்கொண்ட திருமாலைப்போன்றது இந்த உலகம் [உலகம் ஒரு மாயைதான் ]---

அவரின் தொப்பூள் கொடி தாமரை போன்றது தென்னாடு என்னும் இந்த பாண்டியநாடு ----

அந்த தாமரையின் மையப்பகுதியிலுள்ள மென்மையான கொட்டை போன்றது பொதியமலை ---

அந்த தாமரையின்மீது வீற்றிருக்கும் நான்குமுகம் கொண்ட பிரம்மாவைப்போன்றவர் இந்த பொதியமலையில் வாழும் அகத்தியமாமுனிவர் --

அந்த பிரம்மாவால் நான்குமுகங்களின் வழியாக சொல்லப்படும் வேதத்தைப்போன்றது ,அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்ட முத்தமிழ் .

**************************************************************************------50




                                                                                                          பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS








திருவிளையாடல் புராணம்----பகுதி 8


MEENATCHI AMMAN TEMPLE--MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 




                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி 4

பாடல் --62

                  நிச்சலு மீச னன்பர் நெறிப்படிற் சிறார்மேல் வைத்த
                    பொச்சமி லன்பு மன்னர் புதல்வரைக் கண்டா லன்ன
                   அச்சமுங் கொண்டு கூசி யடிபணிந் தினிய கூறி
               இச்சையா றொழுகி யுள்ளக் குறிப்பறிந் தேவல் செய்வார்.


விளக்கம் --62



நாட்டு மக்கள் ---மன்னன் மீது கொண்ட பேரன்பு ,மதிப்பு காரணமாக --அந்த மன்னனின் மகன் எதிரே வந்தால் --அவன் சிறுவனாக இருந்தாலும் --அவனிடமும்  அச்சமும் ,அன்பும் கொண்டு --- இனிய சொல் பேசி --அவன்  கட்டளைக்கு கீழ்ப்படிந்து--அவன் மனமறிந்து பணிவிடை செய்வார்கள் ---

அதுபோலவே அம்மக்கள் ---இறைவன் மீது கொண்ட ,அன்பினாலும் பக்தியினாலும் --   தினந்தோறும் தன்முன் எதிர்ப்படும் சிவனடியார்களுக்கு  அன்புடன் பணிவிடை செய்வார்கள்  ------

     *******************************************************-------------------31
பாடல் --63
                                   
நறைபடு கனிதேன் பெய்த பாலொடு நறுநெற் வெள்ளம்
நிறைபடு செம்பொன் வண்ணப் புழுக்கலா னிமிர்ந்த                                                                                                                             சோறு
குறைவற வுண்டு வேண்டும் பொருள்களுங் கொண்மி
                                                                                                            னென்ன
மறைமுத லடியார் தம்மை வழிமறித் தருத்து வார்கள்.
விளக்கம் --63

பாண்டியநாட்டு மக்கள் 

வேதங்களின் தலைவனாகிய இறைவனின் அடியவர்களை கண்டால் --
அவர்களை வழிமறித்து தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச்சென்று --,

அவர்களுக்கு ---

இனிய சுவை மிகுந்த கனிகள் ,தேன்கலந்த பால் ,மணம்மிக்க நெய்யை வெள்ளம் போல் ஊற்றி சமைத்த , பொன்போல சிவந்த நிறத்தில்  இருக்கும் பருப்பு சோறு  ,மற்றும் வேறுவகையான சிறந்த சோறு [நிமிர்ந்த சோறு ---பருக்கை பருக்கையாக இருக்கும் புளியோதரை ,மற்றும் பல ]வகைகள் --என பலவற்றை குறைவில்லாமல் உண்ணக்கொடுத்து -----

மேலும் அவர்கள் கேட்கும் பொருள்களையும் கொடுத்து --'வேறு ஏதாவது வேண்டுமா ?'என்றும்  கேட்டு சிறந்த முறையில் விருந்தோம்புவார்கள் 

                   ***********************************************------------------------32

பாடல் --64

              
பின்னெவ னுரைப்ப தந்தப் பெருந்தமிழ நாடாங் கன்னி
தன்னிடை யூர்க ளென்னு மவயவந் தாங்கச் செய்த
பொன்னியற் கலனே கோயில் மடமறப் புறநீர்ச் சாலை
இன்னமு தருத்து சாலை யெனவருத் திரிந்த தம்மா.

விளக்கம் ----64
மேலும் நான் எதைச்சொல்வது ---

அந்த பெரிய தமிழ்நாடாகிய கன்னிப்பெண் ---தன்னுடைய உறுப்புகளாகிய ஊர்களில்  எல்லாம்  --

கன்னிப்பெண் பொன் நகைகளை தன் உடலில் அழகுற அணிந்திருப்பது போல ------

 திருகோவில்கள் ,திரு மடங்கள் ,அறச்சாலை ,புறச்சாலைகளில் தண்ணீர்பந்தல் ,இனிய அமுதம் போன்ற உணவை அளிக்கும் அன்னச்சாலை என எண்ணற்ற நல்லஇடங்களை தன்னகத்தே கொண்டு  ---அழகான உருவம் பெற்று விளங்குகின்றாள் .

                    ****************************************************------------------------33
பாடல் --65

         இன்ற டம்புனல் வேலிசூ ழந்நில வரைப்பிற்

                குன்ற முல்லைதண் பணைநெய்தல் குலத்திணை நான்கும்
                   மன்ற வுள்ளமற் றவைநிற்க மயங்கிய மரபின்
              ஒன்றோ டொன்றுபோய் மயங்கிய திணைவகை உரைப்பாம்.

விளக்கம் ---65
இனிய அகன்ற நீர்ப்பரப்பு  வேலி போல் சூழ்ந்துள்ள இந்த பாண்டிய நிலப்பரப்பிற்க்குள் ----

குறிஞ்சி ,முல்லை ,குளிர்ந்த மருதம் ,நெய்தல் --என நான்குவகை திணைகளும் [நிலங்களும் --நிலம்சார்ந்த வாழ்வியலும் ]நிரம்பியுள்ளன --

அப்படி அவைகள் நிரம்பியிருக்கும் பொழுது --ஒரு மரபு
மற்றொரு மரபோடு நெருங்கி இருப்பதால் --ஒரு திணையின் கருப்பொருள் மற்றொரு திணையினதோடு கலந்து காணப்படுவதை பார்க்கலாம் .

அதாவது ஒரு வாழ்க்கைமுறை மற்ற நிலப்பரப்பின் வாழ்க்கை முறையுடன் கலந்து காணப்படுகின்றது --என்கிறார் 

                                ******************************************---------------------------34
பாடல் --66

            கொல்லை யானிரை மேய்ப்பவர் கோழிணர்க் குருந்தின்
             ஒல்லை தாயதிற் படர்*கறிக் கருந்துண ருகுப்ப
                 முல்லை சோறெனத் தேன்விராய் முத்திழை சிற்றில்
                எல்லை யாயமோ டாடுப வெயின்சிறு மகளிர்.

விளக்கம் ---66
காடும் காடு சார்ந்த இடமுமான முல்லை நிலத்தில் பசுக்கூட்டங்களை  மேய்த்து வாழும் இடையர்கள் ---

குறிஞ்சி நிலத்தில் --செழித்து வளர்ந்த பூங்கொத்துகளை உடைய குருத்த மரத்தின் மீது விரைவாக தாவி ஏறி --அதில் படர்ந்துள்ள மிளகுக்கொடியில் உள்ள கரிய காய் கொத்துக்களை உதிர்ப்பார்கள் -----

குறிஞ்சி நிலத்தில்  -[மலையும் மலைசார்ந்த இடம் ] வாழும் வேட்டுவ இனப்பெண்கள் --தங்களின் எல்லைப்பகுதியில் வாழும் முல்லை பகுதி ஆநிரை மேய்க்கும்  பெண்களுடன் ---முத்துகள் இழைக்கப்பட்ட பாத்திரத்தில் தேனை ஊற்றி சோறு சமைத்து விளையாடுவார்கள் .

                      *****************************************-------------------------------------35
பாடல் --67

கன்றொ டுங்களி வண்டுவாய் நக்கவீர்ங் கரும்பு
மென்று பொன்சொரி வேங்கைவா யுறங்குவ மேதி
குன்றி ளந்தினை மேய்ந்துபூங் கொழுநிழல் மருதஞ்
சென்று றங்குவ சேவக மெனமுறச் செவிமா.


விளக்கம் --67

எருமைகள் ,தன்னுடைய கன்றுகள் மிக்க மகிழ்ச்சியுடன் --  தன்னுடைய வாயின் ஓரம் வழியும் சாற்றை நக்கி குடிக்க --மேலும் வண்டுகளும் அதை குடிப்பதற்காக மொய்த்துக்கொண்டிருக்க  --

செழுமையான கரும்பை சாறு வழிய வழிய மென்றுகொண்டு --பொன்போன்ற மலர்களை சொரியும் வேங்கை மரத்தின் நிழலில் படுத்து உறங்கிக்கொண்டிருக்க ---

குன்றைப்போல வளர்ந்து செழித்து விளங்கும் இளமையான திணைப்பயிரை மேய்ந்துவிட்டு  --பூங்கொத்துகள் நிறைந்து விளங்கும் செழுமிய மருதமரத்தின் நிழலுக்கு  --துயிலும் இடம் என்று நினைத்து சென்று தங்கின  முறம் போன்ற செவிகளை உடைய யானைகள்  .

                **************************************************----------------------36
பாடல் --68

எற்று தெண்டிரை யெறிவளை யெயிற்றிய ரிழைத்த
சிற்றில் வாய்நுழைந் தழிப்பவச் சிறுமியர் வெகுண்டு
பற்றி லாரெனச் சிதறிய மனவணி பரதர்
முற்றி லாமுலைச் சிறுமியர் முத்தொடுங் கோப்ப.


விளக்கம் --68


  மோதும் தெளிந்த அலைகளை உடைய கடல் தன்னுடைய அலைகளை எறிந்து --எயிற்றியர் என்னும் வேட்டுவப்பெண்கள் கட்டிய மணல்வீட்டின் சிறிய வாயிலில் [வாசலில் ] புகுந்து அழிக்க ----

அதனால் மிக்க கோபம் கொண்ட அந்த சிறுமியர்கள் --

எதன்மீதும் பற்று [விருப்பம் ]அற்றவர்கள் எங்கும் அலைந்து திரிதலைப்போல --எல்லா இடத்திலும் சிதறும்படி --தாங்கள் அணிந்திருந்த  மனஅணியை [ருத்திராட்சத்தினால் ஆன அணிகலன் ]கழற்றி வீச ----

அங்கிருந்த பரதர் இனத்தை [படகோட்டிகள் --மீனவர்கள் ]சேர்ந்த இன்னமும் முழுமை பெறாத மார்பகத்தை  உடைய சிறுமிகள் --அதை எடுத்து --தங்களிடம் இருந்த முத்துக்களோடு அதைச் சேர்த்து கோர்த்து  மாலை ஆக்குவார்கள் .

           *******************************************************--------------------37

பாடல் --69



முல்லை வண்டுபோய் முல்லையாழ முளரிவாய் மருதம்
வல்ல வண்டினைப் பயிற்றின்பின் பயில்வன மருதங்
கொல்லை யான்மடி யெறிந்திளங் குழவியென் றிரங்கி
ஒல்லை யூற்றுபால் வெள்ளத்து ளுகள்வன வாளை.


விளக்கம் --69

முல்லை நிலத்தில் வாழும் வண்டுகள் --மருத நிலத்திற்கு சென்று -அங்கு தாமரையில் வாழும் மருதநிலத்து வண்டுகளுக்கு --முல்லை நிலத்து இசையை கற்றுக்கொடுத்து ---பின் அவைகளும் மருதநிலத்து இசையை கற்றுக்கொண்டு திரும்பும் ----

வாளைமீன்கள் துள்ளிக்குதித்து  --பசுக்கூட்டங்களின் மடியில் முட்ட  --அந்தப்பசுக்கள் தங்களின் கன்றுகள் தான் பால் குடிக்க முட்டுகின்றன என்று நினைத்து பாலைச் சொரிய ---வெள்ளம் போல ஓடிய பாலாற்றில் அந்த வாளைமீன்கள் நீந்திச்சென்றன --

குறிப்பு ;--

  அவ்வளவு செழுமை காணப்பட்டது --என்று கூறுகின்றார் .

                 *************************************************----------------------38
பாடல் --70

கரும்பொற் கோட்டிளம் புன்னைவாய்க் கள்ளுண்டு காளைச்
சுரும்பு செவ்வழிப் பாண்செயக் கொன்றை பொன்சொரிவ
அருந்த டங்கடல் வளையெடுத் தாழியான் கையில்
இருந்த சங்கென விறைகொளப் பூவைமே லெறிவ.


விளக்கம் --70


இரும்பு போன்ற  கடினமான கரிய கொம்புகளை உடைய  ஆண்வண்டுகள் ---இளமையான புன்னை மரத்தின் மலர்களில் உள்ள தேனை பருகி ---ஆனந்தத்தில் இனிமையான செவ்வழிப்பண் [நெய்தல் நிலத்திற்குரிய இசை ] பாடுகின்றன ----

கொன்றைமரங்கள் பொன்னிறமான மலர்களை சொரிகின்றன [பொழிகின்றன ]-----

பல அருமைகளை கொண்ட அளக்க முடியாத பெரிய கடலானது ---தனது அலையை வீசி ----தன்னிடமுள்ள சங்குகளை ---

காசாம்பூ  எனப்படும் நீலோத்பலம் என்ற பெயரை உடைய ,முல்லை நிலத்தில் காணப்படும் --நீல அல்லி  மலரின் மீது ----

ஆழியான் என்ற பெயரை உடைய திருமாலின் கையில் சங்கு எப்படி நிற்கின்றதோ--

  அப்படி நிற்கும்படி எறிந்தன ----

           *****************************************************----------------------39
பாடல் --71


கழிந்த தெங்கினொண் பழம்பரீஇ முட்பலாக் கனிகீண்
டழிந்த தேனுவர்க் கேணிபாய்ந் தகற்றுவ வுவரை
வழிந்த தேன்மடற் கேதகை மலர்நிழல் குருகென்
றொழிந்த தாமரைப் போதுபுக் கொளிப்பன கெண்டை.

விளக்கம் --71

குலைகுலையாக பறிக்கப்பட்ட தென்னை மரத்தின் காய்கள் உடைக்கப்பட்டதால் அதிலிருந்தும் ----

முள் நிறைந்த பலாக்கனிகள் கீறப்பட்டதால் அதிலிருந்தும்----

வழிந்த தேன்போன்ற இனிய நீர் --உப்புக்கேணியில் பாய்ந்து --அதன் உப்புத்தன்மையை போக்கின----

தேனை சிந்தும் மடல்களை உடைய தாழம்பூவின் நிழலை ---கொக்கு என்று நினைத்து பயந்த  கெண்டைமீன்கள் --தாமரை மலரின் அடியில் சென்று ஒளிந்து கொண்டன .

                   ***************************************************------------------40

                                                                   


                                                                                                          பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS



திருவிளையாடல் புராணம்----பகுதி 7


MEENATCHI AMMAN TEMPLE-MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 




                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி  3

பாடல் --52

பழிபடு நறவந் தன்னைக்* கடைசியர் பருகிச் செவ்வாய்
மொழிதடு மாற வேர்வை முகத்தெழ முறுவ றோன்ற
விழிசிவந் துழலக் கூந்தன் மென்றுகில் சோர வுள்ளக்
கழிபெருங் களிப்பு நல்கிக் கலந்தவ ரொத்த  தன்றே.


விளக்கம் --52
உண்ணக்கூடாது  --என்று நல்லறம் கூறும் நூல்களால் பழிக்கப்படும் --'மது 'என்னும்  போதை தரும் பானத்தை --உழவுத்தொழிலை செய்யும் பெண்கள் குடித்ததால் -----

அவர்களின் செம்மையான வாய்களில் இருந்து வரும்  வார்த்தைகள் தடுமாறுகின்றன ----மேலும் முகத்தில் வியர்வை  வழிய ---புன்னகை பூத்து எழ [அதாவது சிரிப்பு பொங்கி வர ]----விழிகள் சிவந்து ---
தலைக்கூந்தலும் ஆடைகளும் சரிந்து --காணப்பட்டார்கள் --

இக்காட்சியானது தங்கள் கணவருடன் --உள்ளத்தில் பொங்குகின்ற மிக்க அன்புடன் ---புணர்ந்து இன்புற்ற மகளிரின் நிலையை போல் இருந்தது .

   
                           ***************************************---------------------21

பாடல் --53

பட்பகை யாகுந் தீஞ்சொற் கடைசியர் பவளச் செவ்வாய்க்
குட்பகை யாம்ப லென்று மொண்ணறுங் குவளை நீலங்
கட்பகை யாகு மென்றுங் கமலநன் முகத்துக  கென்றுந்
திட்பகை யாகு மென்றுஞ் செறுதல்போற் களைதல் செய்வார்.


விளக்கம் --53

இனிமையான இசையை விட மேன்மையான சொற்களை பேசும் உழவுப்பெண்கள் ---

தங்களுடைய பவளம் போன்ற சிவந்த உதடுகளை உடைய வாய்க்கு ---சிவந்த அல்லி மலர்கள்  பகை என்று எண்ணி அவற்றையும் ---

தங்களுடைய கண்களுக்கு --செங்குவளை மலர்களும் ,கருங்குவளை மலர்களும் பகை என்று எண்ணி அவற்றையும் ---

தங்களுடைய நல்ல முகத்திற்கு --தாமரை மலர்கள் பகையாகும் என்று எண்ணி அவற்றையும் ---

பறித்து எறிந்தனர் .

அதாவது நீர் வளம் நிரம்பி இருந்ததால் ---அப்படிப்பட்ட இடத்தில் வளரும் --அல்லியும் தாமரையும் --களையாக வளர்ந்து நிரம்பியிருந்த காரணத்தினால் ---அந்த சிறப்பு மிக்க மலர்களையும் ---பயிர்கள்  நன்கு வளருவதற்காக  ---பறித்து எறிந்தனர் .

குறிப்பு ;-

தாமரை அல்லி முதலியவை அழகானவை --பயிர் அழகானது அல்ல ---நாம் உயிர்வாழ அழகு தேவையில்லை --

மேலும் எந்த இடத்தில் எது முக்கியமோ அதற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் ---மற்றவை எவ்வளவு சிறப்பு பெற்றிருந்தாலும் ---களைந்து எறியப்பட வேண்டியவைகளே ---

 **********************************************************------------22

பாடல் --54

கடைசியர் முகமுங் காலுங் கைகளுங் கமல மென்னார்
படைவிழி குவளை யென்னார் பவளவாய் குமுத மென்னார்
அடையவுங் களைந்தார் மள்ளர் பகைஞரா யடுத்த வெல்லை
உடையவ னாணை யாற்றா லொறுப்பவர்க் குறவுண் டாமோ.


விளக்கம் --54
உழவுப்பெண்களின் முகம் ,கை ,கால்களைப்போல தாமரை மலர்  இருக்கின்றது என்பதற்காகவும் ---

வேல்போன்ற விழிகளைப்போல குவளை மலர்  இருக்கின்றது என்பதற்காகவும் ---

பவளம் போன்ற வாய்களைப்போல குமுத மலர்  இருக்கின்றது என்பதற்காகவும் ---

அவற்றை விட்டு வைக்காமல் --அவைகள் களைகள் என்பதற்காக --பறித்து எறிந்தனர் --

இச்செயல் --தங்களுடைய உறவினர்களாக இருந்தாலும் --அவர்கள் பகைவராக மாறி வரும் காலத்தில் --அரசன் ஆணையிட்டால் --அவர்களை தண்டிக்கும் அம்மன்னனின் சேவகர்கள் --அந்த நேரத்தில் தங்கள் உறவுகளை பற்றி நினைக்காமல் தங்கள் கடமையை செய்வது போல இருந்தது .

குறிப்பு ;-

கடமையே முக்கியம் என்பதை வலியுறுத்துகின்றார் .

              *****************************************------------------------23
பாடல் --55



புரையற வுணர்ந்தோர் நூலின் பொருளினுள் ளடங்கி யந்தூல்
வரையறை கருத்து மான வளர்கருப் புறம்பு தோன்றிக்
கரையமை கல்வி சாலாக் கவிஞர்போ லிறுமாந் தந்நூல்
உரையென விரிந்து கற்பின் மகளிர்போ லொசிந்த தன்றே.

விளக்கம் ---55

ஒருவர் கல்வி  கற்கும்பொழுது --அவருக்கு நிறைய சந்தேகங்கள் வரும் ---வரவேண்டும் ---அப்படிஎழுந்த சந்தேகங்களை எல்லாம் ஆசிரியரிடம் கேட்டு கேட்டு தெளிவு பெற்று --சிறந்த அறிவும் ஞானமும் பெற்ற ஒருவர் --இயற்றிய நூலின் மையக்கருத்து போன்ற ---நெற்பயிரின் விதையின் கருவானது ---

அந்த நூலை படித்து அதன் அர்த்தத்தை விவரித்து கூறும்பொழுது --அதன் கருத்து எப்படி விரிந்து பெரிதாகி  நமக்கு புரிய ஆரம்பிக்குமோ --அதைப்போல அந்நெல்விதையின் கரு முளைவிட்டு வெளிவந்து ----

இலக்கண வரம்பு உள்ள கல்வி முழுமையும் கைவரப்பெறாத கவிஞர்கள் --மேதைகளைப்போல தங்களை நினைத்து தலைகனத்துடன் இறுமாந்து இருப்பதைப்போல --அந்த நெற்பயிர்கள்  நிமிர்ந்து நேராக வளர்ந்து ---

முன்னர் கூறிய சான்றோர்களின் நூலின் விரிவான பொருள் போல --அந்த நெற்பயிர்கள்  கதிர்களை பரப்பி விரிந்து ---

கற்ப்பில் சிறந்த பெண்கள் தலை குனிந்து நிற்பதைப்போல ---அந்த நெற்பயிர்கள் ,செழிப்பான நெல்லுடன் தலை தாழ்ந்து நின்றன ----

                      ****************************************----------------------24

பாடல் --56


அன்புறு பத்தி வித்தி யார்வநீர் பாய்ச்சுந் தொண்டர்க்
கின்புரு வான வீச னின்னருள் விளையு மாபோல்
வன்புறு கருங்கான் மள்ளர் வைகலுஞ் செவ்வி நோக்கி
நன்புல முயன்று காக்க விளைந்தன நறுந்தண் சாலி.
விளக்கம் --56

அன்பு ,ஊற்றுநீர் போல் ஊறுகின்ற  மனதுடன் --பக்தி என்னும் விதையை விதைத்து ---ஆர்வம் என்னும் நீரை பாய்ச்சி வழிபடும் தன் தொண்டர்களுக்கு ----

இன்பத்தின் உருவமான 'ஈசனின் 'இன்னருள் --பயனாக கிடைப்பது போல ----

வலிமையான கரிய கால்களை உடைய உழவர்கள் தினமும் பருவக்காலங்களை கவனித்து ---சோர்வில்லாமல் உழைத்து --நல்ல முறையில் ,தங்கள் வயல்களில் இருந்த பயிர்களை பாதுகாத்து வளர்த்ததால் ---நெற்பயிர்கள் செழித்து வளர்ந்து நின்றன .


குறிப்பு ;-

என்றும் குறையாத அன்புடனும் பக்தியுடனும் ஆர்வத்துடனும் [இறைவனின் அருளை பெரும் ஆர்வம் ]வணங்குபவர்களுக்கு ---
இன்பத்தின் வடிவமான இறைவனின் அருள் கட்டாயம் கிட்டும் என்று உறுதிகூறுகின்றார் 

              ********************************************-----------------------25
பாடல் --57

அகனில வேறு பாட்டி னியல்செவ்வி யறிந்து மள்ளர்
தகவினை முயற்சி செய்யக் காமநூல் சாற்று நான்கு
வகைநலார் பண்பு செவ்வி யறிந்துசேர் மைந்தர்க் கின்பம்
மிகவிளை போகம் போன்று விளைந்தன பைங்கூ
                                                                                                    ழெல்லாம்.


விளக்கம் ---57


அகன்று விரிந்திருக்கும் நிலப்பரப்பின் வேறுபாட்டையும் ,அதன் உண்மை தன்மையையும் அறிந்து --

அதாவது நான்குவகை நில வேறுபாட்டுத்தன்மையை நன்கு அறிந்து [கரிசல் நிலம் ,செம்மண் நிலம் ,வண்டல் மண் நிலம் ,களிமண் நிலம் ]---அதில் விளையும் பயிர்களையும் ,விளைவிக்கும் முறையையும் ,அதை பயன்படுத்தும் முறைகளையும் நன்குஅறிந்த உழவர்கள் ---

அதற்க்கு தக்கவாறு முயற்சி செய்து தங்கள் தொழிலை செய்ய ---

பெண்களிடம் இன்பம் அனுபவிக்க நினைக்கும் ஆடவர்கள் --காமநூல்கள் வகைப்படுத்தி கூறும் நான்கு வகை பெண்களின்  தன்மையை அறிந்து ---[நான்கு வகை பெண்கள் --பத்தினி ,சித்தினி ,சங்கினி ,அத்தினி ]--அவர்களை சேரும் போது --அவர்கள் விரும்பும் இன்பமானது --அவர்கள் விரும்பிய  அளவுக்கு அதிகமாகவே கிடைப்பதுபோல  ---


பசுமையான உணவுப்பயிர்கள் எல்லாம் அளவுக்கு அதிகமாகவே விளைந்தது ---

         *******************************************-----------------------26
பாடல் --58


கொடும்பிறை வடிவிற் செய்த கூனிரும் பங்கை வாங்கி
முடங்குகால் வரிவண் டார்ப்ப முள்ளரைக் கமல நீலம்
அடங்கவெண் சாலி செந்நெல் வேறுவெ றிரிந்தீ டாக்கி
நெடுங்களத் தம்பொற் குன்ற நிரையெனப் பெரும்போர்
                                                                                                                    செய்தார்.


விளக்கம் --58

நேர்த்தியான பிறை வடிவத்தில் ,கூர்மையாக இருக்குமாறு இரும்பினால் செய்யப்பெற்ற ஆயுதத்தை [அரிவாளை ]கையில் எடுத்துக்கொண்டு ---

வளைந்த கால்களையும் உடலின் மீது வரிகளையும் உடைய வண்டுகள் சுற்றி சுற்றி வந்து ஒலியெழுப்பும் --முள் நாளங்களை உடைய [தண்டுகள் ]கமலம் [தாமரை ],குவளை [அல்லி ]மலர்களோடு --

அடர்த்தியாக செழித்து வளர்ந்திருந்த வெண்நெல் ,செந்நெல் ஆகியவற்றை தனித்தனியாக அறுத்து [அறுவடை செய்து ]--கட்டுகளாக கட்டி ---

தங்களுடைய நெடிய களத்தில் --பொன்னாலான பெரிய மலையோ என்று வியக்கும் வண்ணம் --போர்களாக அமைத்தார்கள் ---

                   ********************************-----------------------------27
பாடல் --59


கற்றவை களைந்து தூற்றிக் கூப்பியூர்க் காணித் தெய்வம்
அற்றவர்க் கற்ற வாறீந் தளவைகண்* டாறி லொன்று
கொற்றவர் கடமை கொள்ளப் பண்டியிற் கொடுபோய்த்
                                                                                                            தென்னா
டுற்றவர் சுற்றந் தெய்வம் விருந்தினர்க் கூட்டி யுண்பார்.


விளக்கம் --59


வைக்கோலையும்  நெல்மணிகளையும்  தனித்துப்பிரித்து ---

அந்த நெல்மணிகளை தூற்றி பதர்களை பிரித்து ---நெல்மணிகளை சேர்த்து குவித்து ----

ஊர் காவல்தெய்வத்திற்கு கொடுக்கவேண்டிய பங்கை அளித்து ---
  ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு அவர்களின் நிலைமைக்கு தக்கவாறு கொடுத்து --

பின் மீதமுள்ளவற்றை அளந்து --அதில் ஆறில் ஒரு பங்கை அரசனுக்கு, அவனுடைய கடமையை செய்ய அவனுடைய கருவூலத்திற்கு அனுப்பிவிட்டு ---

மீதமுள்ள நெல்லை தன்னுடைய இருப்பிடத்திற்கு கொண்டுபோய் ---தென்புலத்தார் என்னும் பித்ருக்களுக்கும் ,சுற்றத்தார்களுக்கும் தெய்வத்திற்கும்[தங்கள்  குலதெய்வம் ,இஷ்டதெய்வம் ] விருந்தினர்களுக்கும் செய்யவேண்டிய உணவுக்கடமைகளையும் செய்து தானும் உண்பர் ---

                               ****************************************----------------------28
பாடல் --60


சாறடு கட்டி யெள்ளுச் சாமைகொள் ளிறுங்கு தோரை
ஆறிடு மதமால் யானைப் பழுக்குலை யவரை யேனல்
வேறுபல் பயறோ டின்ன புன்னில விளைவு மற்றும்
ஏறொடு பண்டி யேற்றி யிருநிலம் கிழிய வுய்ப்பார்.

விளக்கம் --60

கரும்புச்சாற்றிலிருந்து செய்யப்பெற்ற கட்டியான கருப்பட்டி,எள்ளு ,சாமை ,கொள்ளு ,சோளம் ,மலைநெல்-- 
ஆறு போல் மதநீரை சொரியும் பெரிய யானையின் விலாஎலும்பைப்போன்ற காய்களை உடைய குலைகுலையான அவரை 

தினை ,இதைத்தவிர வேறுபலவகைப்பட்ட புன்செய் நிலத்தில் விளையும் பயிர்களை எருதுகள் பூட்டிய வண்டிகளில் ஏற்றி க்கொண்டு --

வண்டியிலுள்ள பொருள்களின் பாரத்தால் --வண்டி செல்லும் நிலம் கிழியுமாறு  தங்கள் இருப்பிடத்திற்கு உழவர்கள் சென்றார்கள் --

குறிப்பு ;--
       அவ்வளவு வளமை பாண்டிய நாட்டில் இருந்தது என்று குறிப்பிடுகின்றார் 

                    
                   *******************************************--------------------29
பாடல் --61


துறவின ரீச னேசத் தொண்டினர் பசிக்கு நல்லூண்
திறவினைப் பிணிக்குத் தீர்க்கு மருந்துடற் பனிப்புக்
                                                                                                             காடை
உறைவிடம் பிறிது நல்கி யவரவ ரொழுகிச் செய்யும்
அறவினை யிடுக்க ணீக்கி யருங்கதி யுய்க்க வல்லார்.

விளக்கம் --61


மக்களைப்பற்றி சொல்கின்றார் ;--

துறவிகளுக்கும் ,ஈசனிடம் [சிவபெருமான் ]அன்புகொண்டு அவருக்கு தொண்டுசெய்யும் தொண்டர்களுக்கும் [கோவில் பணியாற்றுபவர்கள் ]--

அவர்கள் பசிக்கு நல்ல உணவும் --

ஊழ்வினையால் அவர்களின் உடலுக்கு ஏற்படும் நோய்க்கு மருந்தும் ---

உடலின் குளிரை போக்க நல்ல ஆடையும் ,தங்குவதற்கு இடமும் --

 அவர்களுக்கு தேவையான மற்ற பொருள்களையும் கொடுத்து --பாண்டிய நாட்டு மக்கள் --அவரவர்களுக்கு முடிந்த அளவு மேற்கொண்டு செய்யும் நல்லறமானது  --

அம்மக்களின் , முற்பிறவி ,இப்பிறவிகளின்  -வினைகளால் ஏற்பட்ட துன்பங்களை  நீக்கி --அருமையான நற்பேற்றை [நல்ல தெய்வஅருளுடன் கூடிய வாழ்க்கை ]அவர்களுக்கு  அளிக்கக்கூடியஅளவில் சிறப்பாக இருந்தது ---

                                     ************************************-----------------------30

                                                                                                     பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS

திருவிளையாடல் புராணம்----பகுதி 6


MEENATCHI AMMAN TEMPLE-MADURAI


 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 


                            திருநாட்டுச்  சிறப்பு --பகுதி  2

பாடல் --42

           வல்லைதா யிருபால் வைகுஞ் சிவாலய மருங்கு மீண்டி


                 முல்லையா னைந்துந் தேனுந் திரைக்கையான் முகந்து வீசி
                  நல்லமான் மதஞ்சாந் தப்பு நறுவிரை மலர்தூய் நீத்தஞ்
                 செல்லலாற் பூசைத் தொண்டின் செயல்வினை மாக்கள்
                                                                                                                                       போலும்.

விளக்கம் --42

விரைந்து செல்லும் பொருனை நதியானது--- 

தன்னுடைய இரு கரைகளுக்கருகில் இருக்கும் 'சிவாலங்களுக்கு 'அருகில் தாவிச்சென்று --

முல்லை நிலத்திலிருந்து தான் எடுத்துக்கொண்டு வந்த 'பஞ்சகௌயத்தையும் '{பசு மாட்டிலிருந்து  கிடைக்கும் --பால் ,தயிர் ,நெய் ,பசுவின் சாணம் ,பசுவின் மூத்திரம் --இவை ஐந்தும் 'பஞ்சகௌயம் 'எனப்படும் .இவை சிவ அபிஷேகத்திற்கு சிறந்ததாக கருதப்படுகின்றது }   ,மற்றும் சிறந்த தேனையும் ---தன்னுடைய அலைக்கைகளால் முகர்ந்து வீசியும் ---


சிறந்த மான்களிடம் கிடைக்கும் கஸ்தூரி மற்றும் மலைக்காடுகளில் இருந்த சந்தனமரத்திலிருந்து எடுத்துவந்த சந்தனம் --ஆகிய இரண்டும் கலந்த மணம் மிக்க  குழம்பை பூசியும்  --- 

பலவித நறுமணம் வீசும் மலர்களை  தூவியும் ----

அவ்விடம் விட்டு செல்லுவதை பார்க்கும்பொழுது ---                      

இறைவனுக்கு பூசை செய்து ---தன்னுடைய  கடமையை செயல்படுத்த --அறிவுள்ளது ,அறிவற்றது என படைக்கப்பட்ட அனைத்தும் முயல்கின்றது --

என்பது  புரிகின்றது ..


                                        ********************************************----------------11

பாடல் --43

         அரும்பவி ழனங்க வாளி யலைதர வாகம் பொன்போர்த்
              திரங்கிவா லன்ன மேந்தி யிருகையுஞ் சங்கஞ் சிந்தி
              மருங்குசூழ் காஞ்சி தள்ளி வரம்பிற வொழுகும் வாரி
                பரம்பாற் கையம் பெய்யும் பார்ப்பன மகளிர் போலும்.


விளக்கம் --43

மன்மதனின் பாணங்களான மலர்கின்ற நறுமணம் வீசும் மலர்களை அலைகள் வாரித்  தர ----

அவற்றால் மூடப்பெற்ற இருகரைகலிலும் உள்ள மணற்பரப்பு தங்க நிறத்தில்  காட்சிதர---


வெள்ளை  நிற அண்ணப்பறவைகள் நீந்திக்கொண்டிருக்க ---

இரு கரைகளிலும் சங்குகளை வாரி இறைத்துக்கொண்டும்  ----

பக்கங்களில்  நெருங்கி சூழ்ந்திருந்த 'காஞ்சி மரங்களை ' தள்ளிக்கொண்டும்  ----

கரை உடையும்படி பொருநை நதி செல்லுவது ----

'சிவபெருமானுக்கு 'பிச்சையிட்ட  'தாருகாவனத்து -முனி பத்தினிகளை 'போல தோற்றமளிக்கின்றது ..

                       *************************************************------------12
பாடல் --44

           
வரைபடு மணியும் பொன்னும் வைரமும் குழையும் பூட்டி
அரைபடு மகிலுஞ் சாந்து மப்பியின் னமுத மூட்டிக்
கரைபடு மருத மென்னுங் கன்னியைப் பருவ நோக்கித்
திரைபடு பொருநை நீத்தஞ் செவிலிபோல் வளர்க்கு மாதோ.

விளக்கம் --44

பொன்னும் ,மணியும் ,வைரமும்  வைத்து ,,திட்டமிட்டு நேர்த்தியாக செய்யப்பட்ட  காதணிகளை  போட்டுவிட்டு ---

அரைத்த  அகில் சந்தனக்கலவையை  பூசி ,இனிமையான அமுதம் போன்ற உணவை ஊட்டி  ---ஒரு செவிலித்தாய் தன்னுடைய 'கன்னிப்பெண்ணை  அந்த பருவத்திற்குரிய  கவனத்துடன் வளர்ப்பதுபோல ---

தன்னுடைய கரைகளில் இருந்த 'மருதம் 'என்னும் நிலப்பரப்பை 
அலைவீசும் நீர்ப்பெருக்கை உடைய 'பொருநை 'என்னும் தாய் நித்தம் நித்தம்  கவனமுடன்  வளர்க்கின்றாள் .


                               *************************************---------------13
பாடல் --45

                 மறைமுதற் கலைக ளெல்லா மணிமிடற் றவனே யெங்கும் 
                   நிறைபர மென்றும் பூதி சாதன நெறிவீ டென்றும்
                அறைகுவ தறிந்துந் தேறா ரறிவெனக் கலங்கி யந்த
                முறையின்வீ டுணர்ந்தோர் போலத் தெளிந்தது மூரிவெள்ளம்

.
விளக்கம் --45


வேதம் முதலான கலைகள் எல்லாம் ---

'நீலகண்டனான -சிவபெருமான் 'தான்   எங்கும் நிறைந்த பரம்பொருள் என்றும் ----

திருநீறு ,பஞ்சாட்சர மந்திரமாம் --நமசிவாய -- என்னும் இவைகள்  தான் 'வீடுபேறு 'அடைவதற்கான வழி  என்றும் ---

ஆணித்தரமாக கூறுவதை அறிந்த பின்னும் --அதை ஏற்றுக்கொள்ளாதவர்களின்  கலங்கிய அறிவுபோல்  ,, ----

கலங்கி----அதன் பின் 

மேற்க்கூறிய முறைகளை மேற்கொண்டு உண்மைப்பொருளை உணர்ந்தவர்களின்   அறிவு போல் தெளிந்து  ---

செல்லுகின்றது  பொருநை  வெள்ளம் ..


                            ******************************************-------------------14

பாடல் --46

  மறைவழி கிளைத்த வெண்ணெண் கலைகள்போல் வருநீர் வெள்ளந்     
 துறைவழி யொழுகும் பல்கால் சோலைதண் பழனஞ் செய்தேன்
 உறைவழி யோடை யெங்கு  மோடிமன் றுடையார்க் கன்பர்
   நிறைவழி யாத வுள்ளத் தன்புபோ னிரம்பிற் றன்றே.



விளக்கம் --46

நான்கு வேதங்களின் வழியாக கிடைக்கப்பெற்ற  64  கலைமகளை போல பொங்கி வருகின்ற பொருநை வெள்ளமானது ----

அதன் கரைகளில் இருந்த மருத நிலத்தைச் சேர்ந்த   கழனிகள் ,சோலைகள்  என எல்லா நிலப்பரப்பையும் வளம்  கொழிக்கச்செய்து  ----


முழுமை பெற்ற  ஞானம் உடையவர்களின் அன்பரான இறைவனுடைய   [சிவபெருமானின் ]உள்ளத்து அன்பு -கொடுக்கக்கொடுக்க  குறையாமல் நிறைந்து ததும்பி  வழிந்துகொண்டிருப்பதுபோல  ----

மக்கள் வாழும் இடங்களுக்கு [ஊருக்கு ] வாய்க்கால்கள்  வழியாக ஓடிச்சென்று  நிரம்பிற்று ---

குறிப்பு ;--

அனைத்து ஜீவாத்மாக்களும்  பெண் எனவும் ---

பரமாத்மா  ஒன்றே  ஆணாகவும் ---

அவரிடம் இரண்டறக்கலப்பதே  முக்தி எனவும் ---

கூறப்படுகின்றது 

எனவே ஞானம் அடைந்தவர்கள்[ஆண் ,பெண் ] இறைவனையே தன்னுடைய கணவராக [அன்பர் ]பாவிப்பார்கள் 


                           **************************************----------------------15
பாடல் --47

              இழிந்த மாந்தர்கைப் பொருள்களு மிகபரத் தாசை
              கழிந்த யோகியர் கைப்படிற் றூயவாய்க் களங்கம்
              ஒழிந்த வாறுபோ லுவரியுண் டுவர்கெடுத் தெழிலி
             பொழிந்த நீரமு தாயின புவிக்கும்வா னவர்க்கும்.


விளக்கம் --47

தீயகுணமுள்ள மனிதர்களின் பொருள்களின்மீது ---

இந்த உலகம் மற்றும் இதைக்கடந்த உலகம் --என அனைத்து உலக ஆசைகளையும் அழித்த 'யோகியரின்  ' கைபட்டவுடன் ---

அந்தக்கணமே அதில் இருந்த களங்கம் நீங்கப்பெற்று தூய்மையாகிவிடுவது போல ---

கடல்நீரான உப்புநீரை குடித்து ,உப்பை நீக்கி --மேகமானது பொழிந்த  நன்னீரானது   ---இந்த பூமிக்கும் அதில் வாழும் அனைத்து உயிர்களுக்கும்  மற்றும் வானவர்க்கும்  அமுதம் போல ஆயிற்று .


                              *************************************************-------------16
பாடல் --48

          ஈறி லாதவ ளொருத்தியே யைந்தொழி லியற்ற
                வேறு வேறுபேர் பெற்றென வேலைந ரொன்றே
               ஆறு கால்குளங் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர்
                 மாறி யீறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.


விளக்கம் --48


அழிவில்லாதவளாகிய சிவசக்தியான ஒருத்தியே --ஐந்து தொழில்களான --படைத்தல் ,காத்தல் ,அழித்தல் ,மறைத்தல் ,அருளுதல் --முதலியவைகளை செய்ய --பிரம்மா ,விஷ்ணு ,ருத்திரன் ,ஈஸ்வரன் ,சதாசிவன் ---முறையே பல பெயர்களை பெற்று --நடத்தி அருளுகின்ற  தாயாவாள் --அதைப்போல 

கடல் நீர் -என்ற மூல நீர் -ஒன்றே ---ஆறாக ஓடும் பொழுது 'ஆற்று நீர் 'என்றும் ,கால்வாயில் ஓடும் பொழுது--  கால்வாய் நீர் என்றும் ,குளத்தில் -குளத்து நீர் என்றும் ,கிணற்றில் --கிணற்றுநீர் என்றும் ,அகண்ட ஏரியில் --ஏரிநீர்  என்றும் ---இடத்துக்கு தக்கவாறு பல பெயர்களை  பெற்று  ---

எண்ணிக்கை கூற முடியாதபடி உள்ள  ,அளவுகடந்த  பயிர்களையெல்லாம் வளர்க்கும் தாய்  ஆகும் .

                           *************************************************-----------------17
பாடல் --49

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.



விளக்கம் --49

உழவர்கள் ,அவர்களுக்கு தங்கத்தை போல மதிப்புமிக்கதாக விளங்கும் 'ஏரை 'பூட்டி ---

தாயின் வாயிலிருந்து கனிந்த அன்பினால் வரும் பாடல் ,எப்படி குழந்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சியை கொடுக்குமோ --அதுபோல --

எருமைகளும்   எருமைக்கிடாக்களும் மகிழும் வண்ணம் வளமை பொருந்திய மருதநிலப்பாடல்களை பாடி ---

மனவலிமை மிக்கவர்கள் -- எப்படி அவர்களின் ஐம்பொறிகளின்  மீது ஆட்சிசெய்து அடக்க வல்லவர்களோ --அதைப்போல --

ஐம்பூதங்கள் ஆட்சிசெய்யும் தங்கள் உழவுத்தொழிலை --வலிமையுடன் வெற்றிகொண்டு ,தங்கள் உழவுத்தொழிலைச் செய்தார்கள் .

                               ********************************************--------------18
பாடல் --50


பலநிற மணிகோத் தென்னப் பன்னிற வேறு பூட்டி
அலமுக விரும்பு தேய வாள்வினைக் கருங்கான் மள்ளர்
நிலமக ளுடலங் கீண்ட சால்வழி நிமிர்ந்த சோரிச்
சலமென நிவந்த செங்கேழ்த் தழன்மணி யிமைக்கு                                                                                                                      மன்னோ.

விளக்கம் --50

மண்ணில் தங்கள் கால்கள் அழுந்த வேலை செய்வதால் கரிய நிறக்கால்களை உடைய வலிமைமிக்க  உழவர்கள்----  

லநிறமுள்ள  மணிகளை கோர்த்தது போல --பலநிறம்கொண்ட எருதுகளை --ஏர்கலத்திலே பூட்டி --கலப்பையின் கூர்முனை தேயும் வண்ணம் ---நிலமகளின்  உடலாகிய  தங்கள் நிலத்தை அது கிழியும் வண்ணம் அழுந்த உழும்பொழுது ---

அந்த மண்ணானது மேலும்கீழும்  பொங்கி வருவது ---போர்க்களத்தில் சிவந்த குருதியானது  பொங்கி வருவது போல தோன்றுகின்றது ,மேலும் அது   -----

கொழுந்துவிட்டு எரியும் தீச்சிதறல்களைப்போன்ற நிறத்தில் ஒளிவீச காட்சிதருகின்றது ----

குறிப்பு ;--

 அதாவது அந்த நிலம் உழவர்களால்  நன்கு பண்படுத்தப்படுகின்றது என்று அர்த்தம் 
                           ****************************************************--------------19
பாடல் --51


ஊறுசெய் படைவாய் தேய வுழுநரு நீர்கால் யாத்துச்
சேறுசெய் குநருந் தெய்வந் தொழுதுதீஞ் செந்நெல் வீசி
நாறுசெய் குநரும் பேர்த்து நடவுசெய் குநருந் தெவ்வின்
மாறுசெய் களைகட் டோம்பி வளம்படுக் குநரு மானார்.

விளக்கம் --51

அந்த உழவர்கள் உறுதியான கலப்பையின் முகப்பு தேயுமாறு இவ்வாறாக நன்கு உழுது ---நல்ல நீரை வாய்க்கால்கள்  மூலம் அந்த வயலில் நிரப்பி ------அந்த வயலை சேறாக்கி ---

மருத நிலத்திற்குரிய இந்திரனை வணங்கி ---சிறந்த விதைநெல்லை விதைத்து [வீசி ]-----வளர்த்து --

பின் நாற்றுநடுப்பவர்கள் மூலம்  ---அதை எடுத்து நடவு செய்வார்கள் ---

பின் பகைவரை போல் வளரும் களையை களைந்து எடுத்து ---நெற்பயிரை பாதுகாத்து  வளமையாக வளர்க்கின்றார்கள் . 
                       

                              *************************************************-----------------20



                                                                                                          பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS