JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Friday, August 5, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 4

MEENATCHI AMMAN TEMPLE-GOSALAI

   திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                                                         முதனூல் [நூல் வரலாறு ]
   பாடல் --24

அண்ணல்பாற் றெளிந்த நந்தி யடிகள்பாற் சநற்கு மாரன்
உண்ணிறை யன்பி னாய்ந்து வியாதனுக் குணர்த்த வந்தப்
புண்ணிய முனிவன் சூதற் கோதிய புராண மூவா
றெண்ணிய விவற்றுட் காந்தத் தீசசங் கிதையின் மாதோ.     (1)



விளக்கம் --

அண்ணலாகிய சிவபெருமானிடத்து கேட்டு தெளிவுபெற்ற நந்தியடிகளிடம்[நந்தி தேவர் ] -

சனத்குமாரர் உள்ளத்தில் நிறைந்த அன்புடன் கேட்டு ஆராய்ந்து அறிந்து --வியாச முனிவருக்கு ,அவர் மனம் உணருமாறு கூற ---

புண்ணியங்கள்  அனைத்தும்  வந்தடையப்பெற்ற வியாசமுனிவர் --சூதமுனிவர்களுக்கு கூறிய புராணங்கள் மூன்று ஆறு [18]--

இப்படி கூறப்பெற்ற இவற்றுள் காந்தமகா புராணத்தில் --சங்கர சங்கிதையில் ---

*********************************************************************************
                                     
                                      நூல் யாத்தற்குக் காரணம் 
                               [நூல் இயற்றியதற்கான  காரணம் ]

   பாடல் --25

அறைந்திடப் பட்ட தாகு மாலவாய்ப் புகழ்மை யந்தச்
சிறந்திடும் வடநூ றன்னைத் தென்சொலாற் செய்தி
                                    யென்றிங்
குறைந்திடும் பெரியோர் கூறக் கடைப்பிடித் துறுதி யிந்தப்
பிறந்திடும் பிறப்பி லெய்தப் பெறுதுமென் றுள்ளந் தேறா.  (2)


விளக்கம் --

சிறப்பித்து கூறப்பட்ட 'திருஆலவாயின் '[மதுரையின் ]புகழை ---

வடமொழிநூலில்  சிறப்பாக கூறப்பட்டுள்ள வரலாற்றை தென்மொழியில் கூறுமாறு இங்கு வாழ்ந்துகொண்டிருக்கும்  பெரியோர்கள் கூற ---

பிறவிக்கடலை கடக்கவேண்டும் என்ற உறுதியுடன் முயன்றுகொண்டிருக்கும் எனக்கு --

இச்செயலானது , இந்தப்பிறவியிலேயே பிறவியின் பயனான முக்தியை அளிக்கவல்லது என்று --என் உள்ளத்தில் தெளிவு ஏற்பட ----

*********************************************************************************

                                          மொழி பெயர்த்த முறை 
   பாடல் --26

திருநகர் தீர்த்த மூர்த்திச் சிறப்புமூன் றந்த மூர்த்தி
அருள்விளை யாட லெட்டெட் டருச்சனை வினையொன்
                                       றாக
வரன்முறை யறுபத் தெட்டா மற்றவை படல மாக
விரிமுறை விருத்தச் செய்யுள் வகைமையால் விளம்ப
                                      லுற்றேன்.                                                                      (3)

விளக்கம் --

சிறப்புப்பெற்ற நகரம்,தீர்த்தம் ,மூர்த்தி --ஆகிய வற்றின் சிறப்பு ,
அங்கு எழுந்தருளியிருக்கும் மூர்த்தி
 [சிவபெருமான் ],அருள்விளையாட்டு ,எட்டெட்டு [8*8=64]--

அர்ச்சனை செயல் ஒன்றாக ---ஒழுங்குபடுத்தப்பட்டு கூறப்பட்ட அறுபத்தியெட்டு அருள்விளையாடல்களையும் ---விரிவான படலமாக அமைத்து ,விருத்தச்செய்யுகளால் உவந்து [மகிழ்ச்சியுடன் ]கூறத்தொடங்கினேன்  .

*********************************************************************************

                                                            அவையடக்கம் 


பாடல் --27

நாயகன் கலிக்குங் குற்ற நாட்டிய கழக மாந்தர்
மேயவத் தலத்தி னோர்க்கென் வெள்ளறி வுரையிற் குற்றம்*
ஆயுமா றரிதன் றேனு நீர்பிரித் தன்ன முண்ணுந்
தூயதீம் பால்போற் கொள்க சுந்தரன் சரிதந் தன்னை.                (4)



விளக்கம் --

நாயகனான சிவபெருமானின் கவிதைக்குள்ளும்  குற்றத்தை கண்டுபிடித்து --அதை உறுதிப்படுத்திய [நிலை நாட்டிய ]தமிழ்ச்சங்கத்தின் மேன்மக்கள் நிறைந்த இந்த நகரத்தோருக்கு ,என்னுடைய வெள்ளரிவினால் [வெண்மையான அறிவு ---குழந்தையின் அறிவு ]இயற்றப்பட்ட  இந்நூலின் சொல்லில் குற்றம் கண்டுபிடிப்பது கடினம் அல்ல ----

எனினும் ,அன்னப்பறவையானது தன் முன் வைக்கப்பட்ட பாலில் ---இயல்பாக  அதில்கலந்துள்ள நீரை ஒதுக்கிவிட்டு  ---சுவைமிகுந்த கெட்டித்த பாலை மட்டும் பிரித்து உண்ணுவதுபோல ---

இறைவன் சுந்தரரின் திருவிளையாடல் வரலாறை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன் .

                                          ***************************************
பாடல் --28

கவைக்கொ ழுந்தழ னாச்சுவை கண்டவூ னிமையோர்
சுவைக்க வின்னமிழ தாயின துளக்கமல் சான்றோர்
அவைக்க ளம்புகுந் தினியவா யாலவா யுடையார்
செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்.                     (5)


விளக்கம் --

   நன்கு கொழுந்து விட்டு எரியும் வேள்வித்தீயில் இடப்படும் உணவுகள் பக்குவப்பட்டு தேவர்களுக்கு உரிய சுவை மிகுந்த உணவாக மாறி அவர்களை சென்று அடைவது போல ,--

சிறியேனாகிய என்னுடைய பாடல்கள் --அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் பெற்று கற்று தேர்ந்த கற்றவர்கள் நிறைந்த சபையில் அரங்கேற்றம் பெற்று ,அவர்களால் அங்கீகாரம் பெற்று --

திருஆலவாயில் எழுந்தருளியுள்ள இறைவனின் திருச்செவியுள் புகுந்து  சென்று அவரை மகிழச்செய்ய வேண்டும் .

                            *********************************************************
பாடல் --29

பாய வாரியுண் டுவர்கெடுத் துலகெலாம் பருகத்
தூய வாக்கிய காரெனச் சொற்பொருள் தெளிந்தோர்
ஆய கேள்வியர் துகளறுத் தாலவா யுடைய
நாய னார்க்கினி தாக்குப நலமிலேன் புன்சொல்.   (6)


விளக்கம் --

மேகமானது --பரந்து விரிந்திருக்கும் கடலின் மீது சென்று --உப்புச்சுவை மிகுந்த அதன்  நீரிலுள்ள உப்புச்சுவையை நீக்கி வாரிக்குடித்து ---உலக மக்கள் குடிப்பதற்கு ஏற்ற சுவைமிகுந்த நன்னீராக  மாற்றி  கொண்டுவந்து கொடுப்பதுபோல ---

அவைக்களத்தில் குருடியிருக்கும் ,சொல்லையும் அதன்பொருளையும் நன்கு கற்று உணர்ந்த   சான்றோர்கள் ,

எளியேனாகிய என்னுடைய பாடல்களை ஆராய்ந்து அதில்  உள்ள குற்றமுள்ள சொற்களை நீக்கி ,

ஆலவாயில் எழுந்தருளியுள்ள நாயகனுக்கு இனியதாக ஆக்குமாறு வேண்டுகின்றேன்  .

                                         *********************************************
பாடல் --30

அல்லை யீதல்லை யீதென மறைகளு மன்மைச்
சொல்லி னாற்றுதித் திளைக்குமிச் சுந்தர னாடற்
கெல்லை யாகுமோ வென்னுரை யென்செய்கோ விதனைச்*
கொல்லு வேனெனு மாசையென் சொல்வாழி கேளா.       (7)


விளக்கம் --

 இறைவனின் திருவிளையாடல்களுள் எது சிறந்தது என்று கூற முற்படும் நான்கு வேதங்களும் --

இதுதான் சிறந்தது ,இல்லையில்லை அதுதான் சிறந்தது --என்று எதிர்மறை சொற்களால் கூட விளக்க முடியாத சிறப்புப்பெற்ற  இந்த 'சுந்தரனாரின் 'திருவிளையாடல்களை ,எடுத்துக்கூற என்னுடைய எளிய சொற்கள் போதுமா ?

ஆனாலும் இத்திருவிளையாடல்களை  சொல்லவேண்டும் என்கின்ற என் மனதின்  ஆசை  --இதை சொல்ல உன்னால் முடியாது என்று கூறும் என் அறிவின் சொல்லை கேட்க மாட்டேன் என்கின்றது ---நான் என்ன செய்வேன் ???

*******************************************************************************

                                       அவைக்களமும்  ஆக்கியோன் பெயரும் 
பாடல் --31

அறுகாற்பீ  டத்துயர்மால்   ஆழிகடைந்   தமுதையரங்   கேற்று   மாபோல்                                    
அறுகால்பே  டிசைபாடும்   கூடன்மான்   மியத்தையருந்     தமிழாற்பாடி                                            
அறுகால்பீ  டுயர்முடி  யார் சொக்கேசர் சந்நிதியி    லமரச்  சூழும்                                                
அறுகால்பீ  டத்திருந்து பரஞ்சோதி முனிவரைங்    கேற்றி  னானே.     (8)   

விளக்கம் --
                                   
பாம்புப்படுக்கையில் யோகஉறக்கத்தில் இருக்கும் திருமால் -பாற்கடலை கடைந்து தேவர்களுக்கு கொடுத்த அமிழ்தத்தை போன்ற ---

ஒரு நாளின் ஆறுகாலங்களிலும் சிறந்த இசைக்கருவிகளின் ஒலியுடன் கூடிய பூசனைகளால் வழிபடப்படும் ,கூடல் மாநகரில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் திருவிளையாடல்களை ,---

தமிழில் பாடி ---அதை 

அருகம்புல்லால் அலங்கரிக்கப்பட்ட உயர்ந்த திருமுடியுடைய 'சொக்கேசர் ' சந்நிதி முன்பு ,சான்றோர்கள் சூழ்ந்து அமர்ந்திருந்த ஒரு அழகிய மேடையிலிருந்து ---பரஞ்சோதி முனிவர் அரங்கேற்றினார் 

******************************************************

                                                                     பொருள்எழுதியவர்                                       
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS

No comments:

Post a Comment