JOTHI

JOTHI
the original form of god is 'Joy-full brightness'

Thursday, August 11, 2016

திருவிளையாடல் புராணம்----பகுதி 5

                                                                 
                                              

 திருவிளையாடல்  புராணம் 

                                      ஓம் நமசிவாய 


                       பாண்டித் திருநாட்டு படலம் 


                                திருநாட்டுச்  சிறப்பு --பகுதி  1


பாடல் --32

கறைநி றுத்திய கந்தர சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளொதுக்கி
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோன்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்.                  (1)

விளக்கம் --

 அமிர்தத்திற்காக  தேவர்களும்  அசுரர்களும் -பாற்கடலை கடைந்த பொழுது ---- ,மந்தார மலை மத்தாகவும் ,வாசுகி பாம்பு  கயிறாகவும் உதவி புரிய  --திருமால் ஆமை உருக்கொண்டு ,மந்தார மலையை தாங்கும் அஸ்திவாரமாக உதவி புரிந்தார்  ---

அப்பொழுது முதலில் வெளிவந்த ஆலகால விஷத்தை ---தேவர்கள்  மற்றும் அனைத்து உலகத்தாரின்  நன்மையை கருதி -- உட்கொள்ளும் பொழுது --அன்னை பராசக்தியின்  கைகளால் உள்ளே செல்லாமல் தடுக்கப்பட   --அவ்விஷம்  தன்னுடைய திருக்கழுத்திலேயே  நிறுத்தப்பட்டதால் -- கழுத்தில்  நீலநிறக்கறையுடன் ,கருணையின் வடிவாமாக ,தியாகச் சுடராக , காட்சியளிக்கும் அழகனான 'சுந்தரக் கடவுள் '--

மன்னனாக முடிசூடி , கையில் செங்கோலுடன் ,உறையில் கொண்ட வாளினால் பகை என்னும் இருளை விரட்டி , வேதங்களில் சொல்லியுள்ளபடி சிறந்த முறையில்  --நல்லறத்தை நிலைநிறுத்தி  ஆட்சி நடத்திய  பாண்டிய நாட்டின் சிறப்பினை கூறுகின்றேன் .

                                 ******************************************-----------------------------1

பாடல் --33

தெய்நாயக னீறணி மேனிபோற் சென்று
பௌவ மேய்ந்துமை மேனிபோற் பசந்துபல் லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான்* சுரந்திடு மின்னரு ளென்னக்
கௌவை நீர்சுரந் தெழுந்தன கனைகுரன் மேகம்.   (2)


விளக்கம் --

அனைத்து தெய்வங்களுக்கும் நாயகனான--அதாவது தலைவனான இறைவனின் ,விபூதி அணிந்த திருமேனி பொன்ற வெள்ளை  நிறம் கொண்ட மேகங்கள் ---கடலின் மீது சென்று பரவி  -- ஆநிரைகள் மேய்ச்சல்நிலத்தில்   மேய்ந்து வயிற்றை நிரப்பிக்கொண்டு  வருவதுபோல  --கடல் நீரைநிரப்பிக்கொண்டு ---

உமையம்மையின் மேனி போல கரிய நிறம் கொண்டு  பசுமை பெற்று திரும்பி வந்து ,மேலே எழுந்து நின்று --
பிறவிப் பிணியிலிருந்து வீடுபேற்றை அளிக்கவல்ல இறைவன் ,எல்லா  உயிர்களுக்கும் அவர்களின் துன்பங்களை அகற்றுவதற்காக  மின்னலைப்போன்ற வேகத்துடன் அருளை சுரப்பது போல  (சுரத்தல் என்றால் அது என்றும் வற்றாது  பொருள் )---

தன்னுடைய குரலாகிய இடி முழக்கத்தால் கணைத்துக்கொண்டு ,முகர்ந்துவந்த நீரை பாண்டிய நாடெங்கும்  சொரிந்தன .

                          ************************************************* -------------------------2


பாடல் --34



இடித்து வாய்திறந் தொல்லென வெல்வொளி மழுங்கத்
தடித்து வாள்புடை விதிர்த்துநின் றிந்திர சாபம்
பிடித்து நீளம்பு கோடைமேற் பெய்துவெம் பெரும்போர்
முடித்து நாமென வருதல்போல் மொய்த்தன கொண்மூ. (3)

விளக்கம் --

இந்திரனுடைய  சாபம் நீங்கப்பெற்ற இடமாதலால் ,அவனுடைய ஆணையால்  ----
மழைமேகங்களானது ---எங்கும் நீக்கமற  பளீரென்று நிறைந்து விளங்கிய வெண்மையான கதிரவனின் ஒளியை மங்கச்செய்து இருட்டாக்கி ---
இடியென்ற  வாயை திறந்துகொண்டும் --------மின்னலெனும்வாட்படையைஎல்லாபக்கங்களிலும்
 அனுப்பிக்கொண்டும்  
  ----அம்புச்சரம் போல மழை நீரை  கோடை காலத்தின் மீது பொழிந்து   --

'வெப்பம் 'என்கிற கோடைக்காலத்தின்பெரும்  எதிரியை நாம் தான் போரிட்டு முடிக்க வேண்டும் என்ற --முடிவுடன்  வருவது போல --வானில் மொய்த்தன 

                                           *******************************************    ---------------------3
பாடல் --35

முனித னீள்வரை யுச்சிமேன் முழங்டிகவா னிவந்து
தனித நீர்மழை பொழிவன தடஞ்சிலை யிராமன்
கனித னீர்மையா லாலவாய்க் கண்ணுதன் முடிமேற்
புனித நீர்த்திரு மஞ்சன மாட்டுவான் போலும்.     (4)


விளக்கம் --
அகத்திய முனிவர் வாழ்ந்த' பொதிய மலை ' யின் `நீண்டு உயர்ந்து விளங்கிய சிகரங்களில் மோதி முழக்கமிட்டுக்கொண்டு  வானில் மீது ஏறி வந்த மழைமேகங்கள் குளிந்த  நீரைமழையாக  பொழிந்த  காட்சி ---

சிறப்புமிக்க புகழை உடைய பெரிய வில்லை உடைய ஸ்ரீராம பிரான் கனிந்த அன்பினால் --திருஆலவாயில் மூன்று கண்களுடன் எழுந்தருளியிருக்கும் எம்பிரானின் முடிமீது புனிதமான நீரால் அபிஷேகம் செய்தது போல இருந்தது .

                                ***********************************************     ----------------4
பாடல் --36


சுந்த ரன்றிரு முடிமிசைத் தூயநீ ராட்டும்
இந்தி ரன்றனை யொத்ததா ரெழிலிதென் மலைமேல்
வந்து பெய்வவத் தனிமுதன் மௌலிமேல் வலாரி
சிந்து கின்றகைப் போதெனப் பன்மணி தெறிப்ப.      (5)


விளக்கம் --

சுந்தரப்பெருமானின் திருமுடி  மீது இந்திரன் சுத்தமான நன்னீரால் அபிஷேகம் செய்ததைப்போல-----அழகிய கரிய மேகங்கள் 'பொதிய மலை 'மீது வந்து மழைநீரை பொழியும் பொழுது --அதன் மழைத்துளிகள் ---

ஒப்புமை கூறமுடியாத தனித்தன்மையுடன்  அனைத்துக்கும் மூலமாக விளங்கும் 'சந்திரமௌலீஸ்வரரின் '  மீது ,அந்த இந்திரன் பலவித  நிறமுள்ள  நறுமணப்பூக்களை அர்ச்சிக்கும்பொழுது அவை அவரின் திருப்பாதத்தில் விழுந்தது போல  ---
பலவித நிறமுள்ள மணிகளாக எல்லா இடங்களிலும் விழுந்து தெறித்தன .

                                      ***************************************** -----------------5

பாடல் --37

உடுத்த தெண்கடன் மேகலை யுடையபார் மகடன்
இடத்து தித்தபல் லுயிர்க்கெலா மிரங்கித்தன் கொங்கைத்
தடத்து நின்றிழி பாலெனத் தடவரை முகடு
தொடுத்து வீழவன விழுமெனத் தூங்குவெள் ளருவி.      (6)



விளக்கம் --

கடலை ஆடையாக உடுத்தியுள்ள 'நிலம் 'என்னும் பெண் --தன்னிடத்தில்  உற்பத்தியான தன் குழந்தைகளான ,,அனைத்து  வகை உயிர்களும்வாழ்வதற்காக  மனமிரங்கி ---தன்னுடைய  ஸ்தனங்களான பெரிய மலை முகட்டிலிருந்து பெருத்த ஒலியுடன் கீழே விழும் என்றும் வற்றாத  வெண்மையான அருவியாக  நீரை பொழிவது  ---


தாய் தன் குழந்தை உயிர்வாழ தன்னுடைய 'ஸ்தனத்திலிருந்து' உற்பத்தியான பாலை கொடுப்பதுபோல  -----இருக்கின்றது 

                                     *********************************************** ---------------6



பாடல் --38

கருநிற மேக மென்னுங்  கச்சணி சிகரக் கொங்கை
     
அருவியாந் தீம்பால் சோர  
வகன்சுனை யென்னுங கொப்பூழ்ப்
     
பொருவில்வே யென்னு மென்றோட்  
 பொதியமாஞ் சைலப் பாவை
    
பெருகுதண் பொருநை யென்னும்   
பண்மகப் பெற்றா ளன்றே.                  (7)
     


விளக்கம் --

'பொதிய மலை 'என்னும் மலைப்பெண்ணானவள் ---

  தனது மார்பகமான உயர்ந்த சிகரங்களை; கரிய நிற மேகங்களானது'மார்புக்கச்சை '{மார்பகத்தை மூட பெண்கள் அணியும் ஆடை }போல முழுவதும் மூடி இருக்க ---

கருவுற்ற பெண்களின்   மார்பகத்திலிருந்து  வெளிப்படும் 'தீம் பால் '{முதல் தாய்ப்பால் }போல  --அந்த சிகரங்களில் இருந்து வழிந்து ஓடிவரும் இனிய அருவி நீரானது ----

பெண்களின் 'தொப்பூழ் ' போல சுழிந்துள்ள பெரிய சுனைகள் மற்றும் பெண்களின் தோள்கள் போல உள்ள மூங்கில்கள் அடர்ந்த காடுகளின் வழியே   கீழே வழிந்தோடி பெருகி அம்மலையை விட்டு வெளிவர -

'தாமிர பரணி ' என்னும் பெண்மகளை பெற்றாள் .

                                    ********************************************* ------------------7
பாடல் --39

கல்லெனக் கரைந்து வீழுங்    கடும்புனற் குழவி கானத்
   
தொல்லெனத் தவழ்ந்து தீம்பா    
லுண்டொரீஇத் திண்டோள் மள்ளர்
   
செல்லெனத் தெழிக்கும் பம்பைத்   
தீங்குரல் செவியாய்த் தேக்கி
   
மெல்லெனக் காலிற் போகிப்   
 பணைதொறும் விளையாட் டெய்தி.        (8)

    
விளக்கம் --

கல்லும் கரையும் படி  , அளவிலும் வேகத்திலும் மிகுந்து மேலிருந்து --அந்த கல்லின் மீது --அருவியாக விழுவதால் --ஏற்படும் பெருத்த ஒலியுடன் ---பிறந்த குழந்தையாகிய 'தாமிரபரணி 'என்னும்  நதி --

தாயின் முதல் பால் ஒரு குழந்தைக்கு அதன்  வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அடிப்படை சக்தியான நோயெதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றது ---அந்த இனிய பாலை குழந்தை குடிப்பதுபோல --

அடர்ந்த கானகத்தின் வழியே மெல்ல தவழ்ந்து ,அந்த கானகத்தின் நல்ல சத்துக்களை தன்னுடன் எடுத்துக்கொண்டு  --பின் விரைந்து அந்த காட்டை விட்டு வெளிவந்து ---

வலிமை மிக்க தோள்களை உடைய உழவர்கள் ---பம்பை  என்னும் இசைக்கருவியை இசைத்துக்கொண்டு இனிமையாக பாடிக்கொண்டு தங்கள் நிலத்தில் வேலை செய்து கொண்டிருக்க ---அந்த இசையை தன்னுடைய செவியில் நிரப்பிக்கொண்டே ---அவர்களின் வாய்க்கால் வழியாக மெல்ல ஓடி ---

அவர்களின் வயல்களை எல்லாம் வளமையாக்கி ஓடி  விளையாடி -களித்து --வளர்ந்து  --

                                             ************************************ ---------------8
பாடல் --40


அரம்பைமென் குறங்கா மாவி   னவிர்தளிர் நிறமாத் தெங்கின்
 
குரும்பைவெம் முலையா* வஞ்சிக்   
கொடியிறு நுசுப்பாக் கூந்தல்
   
சுரும்பவிழ் குழலாக் கஞ்சஞ்   
சுடர்மதி முகமாக் கொண்டு
   
நிரம்பிநீள் கைதை வேலி  
நெய்தல்சூழ் காவில் வைகி.          (9)
     


விளக்கம் --

வாழை மரங்களை மென்மையான தொடைகளாகவும் ,இளம் மாவிலைகளை தன்னுடைய நிறமாகவும் , தென்னங்குலைகளை தன்னுடைய மார்பகங்களாகவும் ,வஞ்சிக்கொடி வளைந்து வளைந்து செல்லுவது போல் செல்லுவதை  தன்னுடைய இடுப்பாகவும் ,கூந்தற்பனையின் மடலை  வண்டுகள் மொய்க்கும் மலர்கள்  சூடிய அடர்ந்த தலைமுடியாகவும் ,மலர்ந்த தாமரை மலர்களை ஒளி பொருந்திய சந்திரனைப்போன்ற முகமாகவும் ----கொண்டு 

நீரால் நிரம்பி மங்கைப்பருவம் அடைந்து  ---வழியெங்கும் தாழை  செடிகள் செழித்து வளர்ந்து அடர்ந்த வேலியாக அமைந்திருக்க ---

சூழ்ந்து அமைந்திருந்த 'நெய்தல் நிலம் ' என்னும் சோலையில் தங்கி [அதாவது நெய்தல் நிலத்தின் வழியாக சென்று } 

                               **********************************************--------------9
பாடல் --41
பன்மலர் மாலை வேய்ந்து பானுரைப் போர்வை போர்த்துத்
தென்மலைத் தேய்ந்த சாந்த மான்மதச் சேறு பூசிப்
பொன்மணி யாரந் தாங்கிப் பொருநையாங் கன்னி
                                                                                                           முந்நீர்த்       தன்மகிழ் கிழவ னாகந் தழீஇக்கொடு கலந்த தன்றே.   (10)

விளக்கம் --
பல மலர்களால் ஆன மாலையை சூடிக்கொண்டு ---

பாலின் நுரையைப்போன்ற வெண்மையான நுரையை ஆடையாக போர்த்திக்கொண்டு-----

பொதியமலையிலிருந்து பூசிக்கொண்டு வந்த சந்தனக்குழம்பு ,மானிடமிருந்து பெறப்படுகின்ற கஸ்தூரி என்னும் வாசனைத்திரவம்--ஆகியவற்றின் நறுமணத்துடன்  -----

பொன்மயமான ஆரம் போன்று சூரியக்கதிகளால் ஒளி பெற்று அழகாக மிளிர்ந்து  விளங்குகின்ற ----'பொருநை 'என்னும் கன்னி ---

அனைத்து நீருக்கும் ஆதாரமான ,முதன்மையான நீரான --கடல் என்னும் --தன்னுடைய விருப்பமான தலைவனுடைய அகண்ட மார்பகத்தை தழுவிக்கொண்டு கலந்தாள் ---- 

                                         *******************************************---------------10


                                                                                                     பொருள்எழுதியவர் 
                                                                                                    DR.S.வீரம்மா தேவி .MBBS

No comments:

Post a Comment